சமீபத்தில் திரையில் வெளியான நந்தன் படம் இப்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் பட்டியல் சமுதாய ஊராட்சி தலைவர்கள் நடத்தப்படும் விதம் தான் படத்தின் கதை. பல தரப்பு மக்களிடத்தில் இருந்து இந்த படத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
இயக்குநர் இரா. சரவணன் நல்ல கதையம்சத்துடன் துணிச்சலாக படத்தை எடுத்துள்ளதாகவும் நடிகர் சசிக்குமாரின் நடிப்பும் அருமை என்றும் பாசிட்டிவான விமர்சனம் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இயக்குநர் இரா. சரவணன் பதிவிட்டுள்ளார்.
“அறிமுகம் இல்லா எண்ணிலிருந்து அழைப்பு… “சரவணன் சாருங்களா…? ரஜினி சார் ‘நந்தன்’ படம் பார்த்தார். இப்போ உங்ககிட்ட பேசுவார்” என்றார்கள். ரோட்டில் நின்ற நான் என் அலுவலக அறைக்குள் ஓடிவந்து கதவைச் சாத்திக் கொண்டேன். போன் வந்தது. பூவைத் தொடுவதுபோல் போனை தொட்டேன்.
“டைரக்டர் சார்… நான் ரஜினிகாந்த் பேசுறேன். உங்க ‘நந்தன்’ படம் பார்த்தேன்.
கையைப் பிடித்து அழைத்துக் கொண்டுபோய்க் காட்ட நான் தயார்னு சொல்லி இருக்கீங்க… என்ன கட்ஸ் சார்…” எனப் பேசத் தொடங்கியவர், படபட வேகத்தில் படத்தின் மொத்த விஷயங்களையும் பாராட்டித் தள்ளினார். சசிகுமார் சார் தொடங்கி மாற்றுத் திறனாளியாக வந்த சமுத்திரக்கனி சார் வரை குறிப்பிட்டுப் பாராட்டினார். கோப்புலிங்கம் பாத்திரத்தில் நடித்த இயக்குநர் பாலாஜி சக்திவேல் சாரை சிலாகித்தார். மின்னலைப் படம் பிடிக்க முடியாததுபோல், பட்படார் பட்டாசாகத் தெறித்துவிழுந்த அவர் வார்த்தைகளை என்னால் சரிவர நினைவுகூரக்கூட முடியவில்லை.
ஒரு பனித்துளியைச் சுண்டி வீசுவதுபோல் மொத்த பாரங்களையும் வாழ்த்து வார்த்தைகளால் துடைத்தெறிந்தார் சூப்பர் ஸ்டார். ‘நந்தன்’ என்னும் எளியவன் தலைக்குக் கிரீடமாகி இருக்கிறது ரஜினி சாரின் வாழ்த்து!” என்று குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் இரா.சரவணன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
விஜய் இப்போது வரை நடிகர்தான்… நல்ல தலைவனாக சீமான் கொடுக்கும் ஐடியா!
விஜய் எங்கே இருக்கிறார்?, மாநாட்டுக்கு எப்படி வருவார்? போலீஸ் டென்ஷன்!