நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தைப் பார்த்த பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் பா.ரஞ்சித்தைப் பாராட்டியுள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் உள்ளிட்டோர் நடித்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் இயக்குனர் பா.ரஞ்சித், காதலை மையமாக வைத்து சமூகத்தில் நடைபெறும் சாதி ஆணவக்கொலைகள் குறித்தும், தன் பாலின ஈர்ப்பாளர்கள் காதல் குறித்தும் பேசியிருப்பார். இப்படம், காதல் குறித்த விவாதத்தை சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் நட்சத்திரம் நகர்கிறது படம் குறித்த பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நட்சத்திரம் நகர்கிறது படத்தைப் பார்த்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பா.ரஞ்சித்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து, இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியது என்னை மிகவும் கவர்ந்தது. சிறந்த இயக்கம், எழுத்து, நடிகர்கள் தேர்வு, கலைஞர்கள், ஒளிப்பதிவு, இசை என இதுவரை நான் இயக்கிய திரைப்படங்களிலேயே, நட்சத்திரம் நகர்கிறது தான் சிறந்த திரைப்படம் என ரஜினிகாந்த் தெரிவித்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்