பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் என மூன்று திரையுலக உச்ச நட்சத்திரங்கள் இணைந்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாகிறது.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 28) இரவு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் ஆரவாரத்துடன் நடைபெற்றது.
இந்த விழாவில் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விக்னேஷ் சிவன், அருண்ராஜா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அனைவரும் பேசிய நிலையில் இறுதியாக ரசிகர்களின் ஆரவாரத்தோடு மேடையேறிய ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்கள் குறித்து சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக பேசி அங்கிருந்த அனைவரையுமே தன்வசம் ஈர்த்தார்.
அவர் பேசுகையில், ”உங்க அன்புக்கும் பேச்சுக்கும் மிக்க நன்றி கலாநிதி மாறன். என்னை இந்த படத்தின் மூலம் மீண்டும் பழைய ரஜினியாக உணர வச்சீங்க.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் முன் சன் குழுமத்தின் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் நல்ல வீரர்களை கலாநிதி மாறன் தேர்வு செய்யனும். வீரர்கள் மோசமாக விளையாடும் போது காவ்யாவை அப்படி சோகமாக டிவியில் பார்க்க வருத்தமாக இருக்கிறது” என்று ரஜினி கூற மேடையின் முன்வரிசையில் இருந்த காவ்யா உட்பட பலரும் சிரித்தனர்.
தொடர்ந்து அவர், “மூன்று வருடங்களுக்குப் பிறகு ரசிகர்கள சந்திக்கிறேன். சரியான கதையும் இயக்குனரும் அமையல. அதனால்தான் அண்ணாத்தேக்குப் பிறகு இவ்வளவு இடைவெளி ஏற்பட்டுவிட்டது.
அண்ணாத்தேக்கு பிறகு பல கதைகள் கேட்டேன். எல்லாமே பாட்ஷா, அண்ணாமலை பாணியில் இருந்தது. பல இயக்குநர்கள் ஒரு சில வரிகளில் கதை சொல்கிறார்கள். ஆனால் அதனை உருவாக்கும்போது வேறொன்றாக மாற்றி வந்து கதை சொல்கிறார்கள். அதனால் பல கதைகளை நிராகரித்தேன். பின்னர் நான் கதைகள நிராகரிப்பதை நினைத்து நானே வருத்தப்பட்டேன். ஒரு கட்டத்தில் கதை கேட்பதையே நிறுத்திவிட்டேன்.
இயக்குநரும் கதையும் படத்திற்கு மிகவும் முக்கியம். ஒரு இயக்குநர் தான் ஹீரோவை உருவாக்குகிறார். என்னை உருவாக்கிய இயக்குநர்கள் பட்டியலில் முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர், பா. ரஞ்சித் வரிசையில் இப்போது நெல்சனும் இணைந்துள்ளார்.
பீஸ்ட் படப்பிடிப்பிற்கு இடையில் நெல்சன் எனக்கு கதை வைத்திருப்பதாக சன் பிக்சர் கண்ணன் என்னிடம் கூறினார். அதன்படி நெல்சனை கதை சொல்ல காலை 10 மணிக்கு வரச் சொன்னேன். அவர் லேட்டாக தான் தூங்கியதால் 11:30 மணிக்கு வருவார் என்று தெரிவித்தனர். மறுநாள் 12 மணி ஆகியும் ஆபிஸ் பக்கமே வரவில்லை.
அதன்பிறகு, வந்தவர் உடனே ’நல்லதா ஒரு காபி கொடுங்கனு’ கேட்டார். குடிச்சிட்டு கதையோட ஒன்லைன் சொன்னார். சொல்ல சொல்ல என்னை அப்படியே உத்து பார்த்தாரு. ‘இவன் ஹீரோவா எப்டி?’ ன்னு அவர் மனசுல நினைச்சது எனக்கு கேட்டுடிச்சு. இருந்தாலும் நெல்சன் சொன்ன அந்த ஒன்லைன் எனக்கு பிடிச்சிருந்தது.
அவர் பீஸ்ட் ஷூட்டிங் முடிந்து 10 நாள்களில் விரிவான கதையை சொல்வதாக கூறி சென்றார். சொன்னபடியே 10 நாளைக்குப் பிறகு பீஸ்ட் ஷூட் முடிஞ்சு வந்து கத சொன்னார். முத தடவை கேட்டத விட அது 100 மடங்கு அற்புதமாக இருந்தது.
இதற்கிடையே பீஸ்ட் வெளியீட்டிற்கு முன்னதாகவே ஜெயிலர் படத்தின் ப்ரோமோ ஷூட் செய்து படத்தை அறிவித்தோம். அதன் பின்னர் வெளியான பீஸ்ட் படத்திற்கு நல்ல ரிவ்யூ வரவில்லை. ஒப்பினியனில் படம் அடிவாங்கிடுச்சுன்னு சொன்னார்கள். இனிமேலும், ’நெல்சன் நமக்கு வேண்டுமா சார்?’ என எனக்கு தெரிந்த பல விநியோகஸ்தர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கேட்டனர்.
இதுகுறித்து சன் டிவி குழுவுடன் மீட்டிங் நடத்தியபோது, பீஸ்ட் படத்தின் ரிவ்யூ மோசமாக உள்ளது உண்மைதான். ஆனால் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் இல்லை. பாக்ஸ் ஆபிஸில் நன்றாக போய் கொண்டிருக்கிறது என்று சன் டிவி குழுவினர் என்னிடம் கூறினர்.
அதன்பிறகு ஷூட்டிங் சென்றோம். முதல் நாள் ஷூட் முடிந்த பிறகு, நெல்சன் என்னிடம் வந்து ’உங்க முதல் காதலை சொல்லுங்க’ என்று கேட்டார். நான் ’எதுக்கு’ என்றேன். அதற்கு அவர் ’உங்களை சார்ஜ் ஏத்த தான்’ என்று சொன்னார். ’இது என்னடா புதுசா இருக்கு’ என்று எனக்கு தோன்றியது.
நெல்சன் சீரியஸான சீன்ல எல்லாம் காமெடி பண்ணுவார். ஆனால், டைரக்சன் என்று வந்துவிட்டால் ஹிட்லராக மாறிடுவார். என்ன வேண்டுமோ அதை வாங்காம விடமாட்டார். படப்பிடிப்பில் அவர் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை
படத்துல பிளாக் காமெடி எல்லாம் இருக்கு. அதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கு. இந்தப் படம் பாட்ஷா மாதிரி இருக்குமானு தெரியல, ஆனா அதுக்குலாம் மேல இருக்கும். நீங்க தான் பாத்துட்டு சொல்லணும்.
வசன காட்சிகளுக்கான ஷூட்டிங் முடிஞ்சி காவாலயா பாடல் ஹூட்டிங்குக்காக காத்திருந்தேன். மொத்தம் ஆறு நாட்கள் ஷூட்டிங் சென்றது. முதல் மூன்று நாட்கள் எனக்கு கால் வரவேயில்லை. நான் இதுகுறித்து கண்ணனிடம் கேட்டேன். அப்போது அவர்கள் நாளைக்குதான் ஷூட்டிங். அதுவும் ஒரு ஸ்டெப் மட்டுமே என்றார்கள். ஜானி மற்றும் தமன்னா அந்தப் பாடலில் அசத்தியிருக்கிறார்கள்.
10 ஆண்டுகளுக்கு முன்பு கன்னட படங்கள் பத்தி யாருக்கும் தெரியாது. இப்போ கந்தாரா, கேஜிஎஃப் காரணமாக கன்னட திரையுலகம் வெளிச்சத்துக்கு வந்துடுச்சி. அதேபோல் ஆர்.ஆர்.ஆர்., பாகுபலி மற்றும் புஷ்பா போன்ற படங்கள் தெலுங்கு சினிமாவை பிரபலமாக்கி இருக்கு. அதே போன்று நமது தொழில்துறையையும் நாம் பெரிதாக கொண்டு வர வேண்டும். பெரிய ஹீரோக்கள் படம் ஓடினால்தான் தியேட்டர்கள் சம்பாதிக்கும். எல்லாரும் சம்பாதிப்பார்கள். அனைவரும் நமது சகோதரர்கள். ஒவ்வொரு படத்தையும் ஓட வைக்க வேண்டும்.
மோகன்லால் அவர் ஒரு சிறப்பான நடிகர் மட்டுமின்றி சிறந்த மனிதரும் கூட. தமன்னாவுக்கு கடவுள் பக்தி அதிகம்” என்று ரஜினிகாந்த் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கீழே அமர்ந்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் மேடைக்கு ஓடிச் சென்று அவரிடம் இருந்து மைக்கை வாங்கினார்.
என்ன செய்கிறார் என்று யோசிப்பதற்குள், “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்கிட்ட தான் இருக்கும். கூடவே பொறந்தது. எங்கேயும் போகாது” என படையப்பா படத்தில் இடம்பெற்ற இருவருக்கு இடையேயான பிரபலமான வசனத்தை கூற ஒட்டுமொத்த நேரு ஸ்டேடியமும் ரசிகர்களின் கரவொலியால் அதிர்ந்தது.
இதனால் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் தனது பேச்சை தொடர்ந்த ரஜினி, ”யாரும் தயவு செய்து குடிக்காதீங்க. குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருந்திருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். நீங்க ஒருவர் குடிப்பதால் அம்மா, பொண்டாட்டினு குடும்பத்துல இருக்குற எல்லோருடைய வாழ்க்கையும் பாதிக்கப்படுது.
காட்டுல சின்ன மிருகங்க எப்பவும் பெரிய மிருகங்கள தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கும்.
உதாரணத்துக்கு காக்கா எப்பவும் கழுகை சீண்டிக்கிட்டே இருக்கும். ஆனா, கழுகு எப்பவுமே அமைதியா இருக்கும். பறக்கும் போது கழுக பார்த்து காக்கா உயரமா பறக்க நினைக்கும். இருந்தாலும் காக்காவால அது முடியாது. ஆனா, கழுகு இறக்கையை கூட ஆட்டாம எட்ட முடியாத உயரத்துல பறந்துக்கிட்டே இருக்கும். உலகின் உன்னதமான மொழி ‘மெளனம்’தான்!.
இப்போ நான் காக்கா, கழுகுன்னு சொன்ன உடனே இவர தான் சொல்றேனு சோசியல் மீடியால சொல்வாங்க. குரைக்காத நாயுமில்ல குறை சொல்லாத வாயுமில்ல..ரெண்டும் இல்லாத ஊருமில்ல. நம்ம வேலைய பார்த்துட்டு போய்க்கிட்டே இருக்கணும்.
ஹுகூம் பாடல் வரிகளை முதலில் நான் பார்த்தபோது தாறுமாறாக இருக்குனு சொன்னேன். அதேபோல் அதில் இருக்கும் சூப்பர்ஸ்டார்-ங்கிறத மட்டும் நீக்க சொன்னேன். சூப்பர்ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லை தான்.
சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பிரச்சனை இப்ப இல்ல 1977-லயே ஆரம்பிச்சிருச்சு. அப்ப எனக்கு ஒரு படத்துல சூப்பர் ஸ்டார்னு டைட்டில் போட்டப்ப நானே வேணாம்னு சொன்னேன். ஏன்னா, அப்ப கமல் ரொம்ப பெரிய உயரத்துல இருந்தாரு. சிவாஜியும் ஹீரோவா நடிச்சிட்டு இருந்தாரு.
அதனால பல வருடங்களுக்கு முன்னாடியே சூப்பர் ஸ்டார் பட்டம் வேணாம்னு சொன்னேன். ஆனா, ரஜினி பயந்துட்டாருன்னு சொன்னாங்க. நாம பயப்படுறது ரெண்டே பேருக்குதான். ஒன்னு அந்த பரம்பொருள் கடவுளுக்கு இன்னொன்னு நல்லவங்களுக்கு. நல்லவங்களோட சாபத்த நாம வாங்க கூடாது. மற்றபடி யாருக்கும் பயப்படுறதில்ல” என்றார்.
கடைசியாக, ”பெரிய ஆளோட புள்ளனு சொல்றது ஈஸி, அந்த பெயரை காப்பாத்துறது ரொம்ப கஷ்டம்” என செம்ம பஞ்ச் பேசி தனது பேச்சை நிறைவு செய்தார் ரஜினி.
ஒரு மேடையில் ரஜினி பேசுவது ஒன்றும் புதிதல்லை. ஆனால் நேற்றைய விழாவில் சூப்பர் ஸ்டார் பட்டம், சக திரையுலக வெற்றிகள், ஐபிஎல் என பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினி பேசியது தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
மணிப்பூர் செல்லும் ’இந்தியா’ கூட்டணியின் 20 எம்.பிக்கள் யார் யார்?
Comments are closed.