ஜெயிலர் திரைப்படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று (பிப்ரவரி 5 ) அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘’ஜெயிலர்’’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துவருகிறது.
அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்துவருகிறார். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் முக்கால்வாசி படமாக்கப்பட்டுவிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
இதனிடையே, ஜெயிலர் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துவருகின்றன.
இந்தப் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தில் இந்தியாவின் முன்னணி நடிகர்களான பிரபல மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் ஏற்கனவே நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
இவர்களுடன் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப்பும் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்று (பிப்ரவரி 5 ) அறிவித்துள்ளது. மேலும் படப்பிடிப்புத் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்பு 1987 ஆம் ஆண்டு வெளியான ’’உத்தர் தக்ஷன்’’ என்ற படத்தில் ரஜினியுடன் ஜாக்கி ஷெராஃப் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பேனா சின்னம்.. காழ்ப்புணர்ச்சி.. அரபிக்கடலில் சிவாஜி நினைவிடம் சரியா? கே.எஸ்.அழகிரி
எங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும்: ரவீந்தர் -மகாலட்சுமி கோயில் விசிட்!