இந்தியாவின் மூத்த நடிகர் அமிதாப்பச்சன் கடந்த பத்தாண்டுகளாக தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஒரு காலத்தில் இந்தி திரையுலகில் தர்மேந்திராவுக்கு போட்டியாளராக, பாக்ஸ் ஆபீஸ் சூப்பர்ஸ்டாராக உச்சத்தை தொட்டவர். கதாநாயகனாக இளம்பெண்களுடன் டூயட் பாடும், தாவி தாவி அனல் பறக்கும் சண்டை காட்சி இடம் பெறும்படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிப்பதில்லை.
தனக்கு பின்னால் வளர்ந்துவரும் தலைமுறைக்கு வழிவிட்டு குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவரது ரசிகர்களும் அதனை ரசிக்க தொடங்கிவிட்டனர்.
ஆனால் பிறமொழிகளில் 1980, 1990 காலகட்டங்களில் தமிழ், தெலுங்கு,மலையாள மொழிகளில் முன்னணி நட்சத்திரங்களாக ஆதிக்கம் செலுத்தியவர்கள் அமிதாப்பச்சன் வழியை பின்பற்ற தயாராக இல்லை.
அதனாலேயே அவர்களை பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முறியடித்து முன்னணி இடத்துக்கு இன்றைய தலைமுறை நடிகர்கள் முதல் இடத்திற்கு வந்து விட்டனர்.
அந்த வகையில் ரஜினிகாந்த், கமலஹாசன் இருவரும் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் விஜய், அஜித்குமார் இருவரிடமும் பின் தங்கிய நிலையில் உள்ளனர்.
இந்த வருடம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் உலக அளவில் 500 கோடி ரூபாய் வசூல், தொலைக்காட்சி, ஓடிடி, ஆடியோ உரிமைகள் மூலம் சுமார் 150 கோடி ரூபாய் வருவாய் என பாக்ஸ்ஆபீஸ் தகவல்கள் இருந்தாலும் அது கமல்ஹாசன் என்கிற தனிப்பட்ட நடிகருக்கானது இல்லை, லோகேஷ் கனகராஜ் என்கிற இயக்குநர், விஜய்சேதுபதி, பகத்பாசில் என்கிற கூட்டணியுடன் கமல்ஹாசன் இணைந்ததால் கிடைத்த வெற்றி.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்காத கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் எல்லா சாதனைகளையும் முறியடித்துவிட்டார்.
இதுபோன்ற தொரு வெற்றியை தான் நடிக்கும் படத்தின் மூலம் பெற்று விட வேண்டும் என்பது ரஜினிகாந்த் ஆசை.
அதன் காரணமாகவே சந்திரமுகி – 2 படத்தில் நடிக்க பி. வாசு கேட்ட போது மறுத்து விட்டு, இளைய தலைமுறை இயக்குநர் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
அப்படத்தைத் தொடர்ந்து டான் பட இயக்குநர் சிபிசக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மூத்த இயக்குநர்களுடன் இணைவதைவிட இதுபோன்ற புதிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவது நல்லது, வெற்றி நிச்சயம் என கணக்குப் போட்டு ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஜெயிலர் படப்பிடிப்பு ஒரு பக்கம், அடுத்த படத்துக்கான திரைக்கதை விவாதம் ஒரு பக்கம் என இருக்கும் ரஜினிகாந்த் இப்போது மிகவும் மனவருத்தத்தில் இருப்பதாகச் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளது.
“புதிய இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றினால் எல்லாம் புதிதாக இருக்கும் வேலை செய்ய எளிதாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இவர்கள் சிந்தனையும் என் மனவோட்டமும் ஒத்துப்போகவே இல்லை. படம் தொடங்கியாயிற்றே என்பதால் வேறு வழியில்லாமல் அதை முடித்துக் கொடுக்கிறேன்.
பி.வாசு எனக்காகவே எல்லாவற்றையும் யோசிப்பார், நான் சந்திரமுகி 2 படத்தை விட்டிருக்கக்கூடாது.” என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம் ரஜினிகாந்த்.
எப்போதெல்லாம் பிரச்சினையில் சிக்கிகொண்டாலும், சிக்காமல் இருப்பதற்காகவும் இமயமலைக்கு ஆன்மீகப்பயணம் புறப்பட்டு விடுவார்.

தற்போது அவரது வயது, நீண்ட தொலைதூர பயணங்களுக்கு ஒத்துழைக்காது என்பதால் குடும்ப விருப்பம், மன ஆறுதலுக்காக 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா படத்தை மீண்டும் வெளியிடுவது, அதற்காக புதிதாக குரல்பதிவு செய்வது என இறங்கியிருக்கிறாராம்.
இன்றைய இளம் நடிகர்களுக்கு இணையாக தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வெள்ளோட்டமாக பாபா படத்தை ரஜினிகாந்த் பயன்படுத்த முயற்சிக்கிறார் என்கிறது கோடம்பாக்க தமிழ் சினிமா வட்டாரம்.
இராமானுஜம்