Rajini health: Lokesh Kanagaraj requested YouTubers!

ரஜினி உடல்நிலை : வேதனையுடன் லோகேஷ் கனகராஜ் கோரிக்கை!

சினிமா

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நலமாக உள்ளார் என்றும், அவரது உடல் நிலை குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் சென்னை விமான நிலையத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் அக்டோபர் 3ஆம் தேதி நள்ளிரவில் வீடு திரும்பினார்.

பின்னர் தான் நலமுடன் இருப்பதாகவும், அதற்காக வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஜினி நடித்துவரும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று (அக்டோபர் 4) இரவு சென்னை திரும்பிய இயக்குநர் லோகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

ரஜினிக்காக திட்டமிட்டு படப்பிடிப்பு நடைபெற்றது!

அப்போது அவர், “கூலி படப்பிடிப்பு 50% முடிந்து விட்டது. ரஜினி நன்றாக இருக்கிறார். அவரிடம் பேசினேன். அது பற்றி நானே கூறலாம் என்று நினைக்கிறேன்.

பிற மாநில நடிகர்கள் இருப்பதால் விசாகப்பட்டினம் படப்பிடிப்பு தொடங்கும் முன் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு முன்பே தனது சிகிச்சை குறித்து ரஜினி கூறியிருந்தார். அதன்படி தான் நாங்கள் படப்பிடிப்பை திட்டமிட்டிருந்தோம்.

ரஜினிக்கு 30ஆம் தேதி மருத்துவ சிகிச்சை இருந்ததால், 28ஆம் தேதிக்குள் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டது. 29ஆம் தேதி காலை சென்னை திரும்பினார்.

அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு கூலி படம் தான் காரணம் என்று சில யூடிப்களில் செய்தி வெளியானது. முன்பே அவருக்காக திட்டமிடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றபோது, எப்படி இப்படி மாறி வைரலானது எனத் தெரியவில்லை.

ஏதாவது எழுதி பதட்டமடைய செய்யாதீர்கள்!

ரஜினி உடல்நிலையை மீறி படமா என்றால் கிடையாது. அவரது உடல் நலம் தான் முக்கியம். அவருக்கு பாதிப்பு ஏதாவது ஏற்பட்டிருந்தால், படக்குழு முழுவதும் மருத்துவமனையில் தான் இருந்திருப்போம். இன்று5 மணி வரை படப்பிடிப்பு எடுத்துக் கொண்டிருக்க மாட்டோம். படத்தயாரிப்பு நிறுவனமும் அனுமதித்திருக்காது.

அவரைப் பற்றி ஏதோ பக்கத்தில் இருந்தே பார்த்தது போல், யூட்யூபில் சிலர் எழுதியுள்ளதைப் பார்க்கும் போதுதான் வருத்தமாகவும், மன உளைச்சலாகவும் இருந்தது.

ரஜினி நன்றாக இருக்கிறார். ஆண்டவன் அருளால் அவருக்கு ஒன்றும் ஆகாது. இந்த வயதிலும் ரசிகர்களுக்காக அவர் நடிப்பதை பார்த்து நாங்கள் கொண்டாடுகிறோம்.

ஆனால், அவரை பற்றி எழுதுவதைப் பார்க்கும் போது எங்களுக்கு பதட்டமாகிறது.

இந்த நேரத்தில் சில யூடியுபர்களுக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன். ஏதாவது எழுதி அனைவரையும் பதட்டமடையச் செய்யாதீர்கள். எந்த தகவலாக இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக சொல்லுங்கள்.

தற்போது ரஜினி மருத்துவ சிகிச்சை ஒய்வு இருப்பதால், மீண்டும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும்” என லோகேஷ் தெரிவித்தார்.

விஜய்க்கு வாழ்த்துக்கள்!

விஜயின் அரசியல் குறித்த கேள்விக்கு, ”நடிகர் விஜய் நெருக்கமானவர். அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் அவரது நோக்கம் வேறு ஒரு இடத்தில் இருக்கிறது. அதனால் விஜய்க்கு வாழ்த்துக்கள்” என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய லோகேஷ், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து பெருமிதமாக இருந்தது. தமிழ் சினிமாவில் அனைத்து வகையான படங்களும் தேவை. அவற்றை வரவேற்க வேண்டும். ஆனால், அதையும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தொடங்கியது அரியானா சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு!

’இந்தியன் 3’ நேரடி ஓடிடி ரிலீஸ் : உண்மையா? வதந்தியா?

+1
1
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *