இயக்குனர் ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தின் கோல்டன் க்ளோப் விருதுக்கு பிறகு உலகமே திரும்பி பார்க்கும் இயக்குநராகிவிட்டார்.
ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த பாடலுக்கான கோல்டன் க்ளோப் விருது கிடைத்தது. அதற்கு சினிமா நட்சத்திரங்கள் தொடங்கி பிரதமர் மோடி வரை பலரும் வாழ்த்து கூறினார்கள்.
ராஜமௌலி அடுத்து ஒரு நேரடி ஹாலிவுட் படம் இயக்குகிறார் என ஒரு தகவல் சமீப காலமாக பரவி வந்தநிலையில், எண்டர்டெயின்மென்ட் வீக்லி உடனான சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ராஜமௌலியிடம் ஹாலிவுட்டில் பணிபுரியத் தயாராக உள்ளீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “நான் இந்தியாவில் படம் எடுப்பதென்றால் சர்வாதிகாரி போன்றவன், யாரும் எதுவும் எனக்கு சொல்ல வேண்டியது இல்லை. ஆனால் ஹாலிவுட்டில் படம் எடுப்பதென்றால் நான் யாருடனாவது கூட்டணி வைத்து தான் படம் இயக்க வேண்டி இருக்கும்” என தெரிவித்து இருக்கிறார்.
மேலும், ஹாலிவுட்டில் படம் இயக்க வேண்டும் என்றால் அசாதாரணமான படைப்பாற்றால் வேண்டும் அது தனக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில்,லேட் நைட் வித் சேத் மேயர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜமௌலி உலக அளவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு பற்றி பேசியுள்ளார். ரசிகர்கள் இரவு முழுவதும் பேப்பர்களை கிழித்து வைத்து கொள்வார்கள் , தியேட்டருக்கு வந்த உடன் திரையில் நடிகரின் பெயர் வந்தாலோ அல்லது அவர்களுக்கு பிடித்த நட்சத்திரம் திரையில் தோன்றினாலோ இரவு முழுவதும் கிழித்து வைத்த பேப்பர்களை காற்றில் பறக்க விடுவார்கள்.
அப்போது ரசிகர்கள் சத்தமாக கத்துவார்கள், சிரிப்பார்கள் , ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் ஒலியின் வேகத்தை அதிகரித்தாலும் நீங்கள் படத்தை பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும், நான் உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்காக திரைப்படங்களை இயக்குகிறேன். மேற்கத்திய நாடுகளில் இருந்து பாராட்டுக்கள் வந்தபோது ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்த இந்தியர்களின் நண்பர்களாக தான் அவர்கள் இருப்பார்கள் என்று நினைத்தோம். பின்னர், பிரபலங்கள், கதாசிரியர்கள், திரைப்பட இயக்குநர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் படத்தைப் பற்றி ட்விட் செய்யத் தொடங்கினார்கள். அவர்களால் படம் வெற்றி பெற ஆரம்பித்தது என்று பேசியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
29 வார கருவை கலைக்க முடியுமா?: உச்ச நீதிமன்றம் கேள்வி!
”நீதிக்கு நாம் செய்யும் பிழை!” – காவலர்களிடம் கண்டிப்பு காட்டிய முதல்வர்