2023ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று அப்படத்தின் இயக்குநர் ராஜமெளலி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
ராஜமெளலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் ஆகியோரின் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது.
550 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்த படத்தில் வரும் காட்சிகள், நடனம் ஆகிய அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் பரிந்துரை படங்களின் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படமும் இடம்பெற்றிருந்தது.
ஆனால் இந்திய தேர்வுக் குழு, குஜராத்தி படமான ’செலோ ஷோ’ என்ற படத்தை அனுப்பி வைத்தனர்.
இதனால் ஆர்.ஆர்.ஆர். படத்தை ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக இயக்குநர் ராஜமௌலி தனிப்பட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
’ஃபார் யுவர் கன்சிடரேஷன்’ என்ற சிறப்புப் பிரிவு மூலம் ராஜமௌலி ஆஸ்கர் விருதுக்கு விண்ணப்பித்துள்ளார்.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடல், சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி வடிவமைப்பு,
சிறந்த கலை இயக்கம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த விஷுவல் எஃப்க்ட்ஸ் என 15 பிரிவுகளின் கீழ் ஆர்.ஆர்.ஆர். படம் ஆஸ்கர் விருதுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு விருது கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு விருது கிடைத்தால் இரண்டாவது முறையாக ஆங்கிலம் அல்லாத பிறமொழி திரைப்படம் என்ற பெருமையை ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பெறும்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகள் விழாவில் ‘பாரசைட்’ என்ற கொரியன் மொழி திரைப்படம் ஆறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதினை வென்றது.
ஆஸ்கர் போட்டியில் தனிப்பட்ட முறையில் பார்த்திபனும் தன்னுடைய இரவின் நிழல் படத்திற்காக விண்ணப்பித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
மோனிஷா
கெட்டுப்போன உணவு: 3 சிறுவர்கள் உயிரிழப்பு!
விக்ரம் சாதனையை வென்ற பொன்னியின் செல்வன்: கமல் மகிழ்ச்சி!