’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் 2022 விருதினை எஸ்.எஸ்.ராஜமௌலி இன்று (ஜனவரி 5) பெற்றார்.
கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி உலகம் முழுவதும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியானது.
ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஆலியா பட் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்த பிரம்மாண்டமான திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.1200 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்தி உள்ளது.
விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தற்போது உலகளவில் பிரபலமான பல விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி இத்திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்காக ‘ஆங்கிலம் மொழி அல்லாத படங்கள்’ பிரிவிலும், நாட்டுக்கூத்து பாடல், ‘சிறந்த பாடல் பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்டது.
இதற்காக வரும் 10ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் விருது விழாவில் இயக்குநர் ராஜமெளலி தனது பட நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் கலந்துக்கொள்ள உள்ளார்.
மேலும் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 95வது ஆஸ்கர் விருது விழாவுக்கு தனிப்பட்ட முறையில் 14 பிரிவுகளின் கீழ் ஆர்.ஆர்.ஆர் படக்குழு விண்ணப்பித்து இருந்தது.

இதில் அத்திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடல் ‘ஒரிஜினல் சாங்’ நாமினேஷனுக்கு முந்தைய இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் 24ம் தேதி இப்பிரிவின் இறுதி நாமினேஷன் பட்டியல் வெளிவரும்.
இந்நிலையில் தான் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகள் 2022 (NYFCC) எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு இன்று வழங்கப்பட்டது.
இந்த விருதுக்கான பரிந்துரைப்பட்டியலில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், அர்னோஃப்ஸ்கை, சாரா போலி, ஜினா பிரின்ஸ் பிளைத்வுட் போன்ற உலகின் பிரபல இயக்குநர்கள் இருந்தனர்.
எனினும் இந்த விருதினை இயக்குநர் ராஜமெளலி வென்றுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற விழாவில் விருதினை பெற்றார்.
அப்போது பார்வையாளர்கள் மத்தியில் எழுந்த ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது.
விருதினை பெற்றப்பின் ராஜமெளலி பேசுகையில், “உங்களிடம் இருந்து இந்த உயரிய விருதினை பெறுவதில் எனக்கு மிகப்பெரிய கெளரவம்.
இந்த விருதின் மூலம் எனது படத்தில் இடம்பெற்ற ஒட்டுமொத்த படக்குழுவினரையும் கெளரவித்துள்ளீர்கள். தென்னிந்தியாவில் இருந்து வந்த ஒரு சிறிய படத்தை இந்த விருதின் மூலம் பலரையும் கவனிக்க வைத்துள்ளீர்கள். நன்றி!
ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்திற்கு இந்தியாவில் கிடைத்த அதே வரவேற்பு, மேற்கு உலக நாடுகளிலும் கிடைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் ராஜமெளலியுடன் அவரது மனைவி மற்றும் மகன் கார்த்திகேயா ஆகியோர் கலந்து கொண்டனர். விருதினை வென்ற ராஜமெளலிக்கு இந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
கணிதம் கட்டாயம் : ரிஷி சுனக்கின் அறிவிப்புக்கு எதிர்ப்பு!
விதிமீறலால் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதா?: நடிகர் கிஷோர்