வடக்கன் என்கிற பெயரை மாற்ற வேண்டும் என்று தணிக்கை குழு நிபந்தனை விதித்ததால் கடந்த மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த வடக்கன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் ரயில் என பெயர் மாற்றப்பட்டு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட இந்த படம், ஜூன் 21 அன்று வெளியாகும் என படக்குழு நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வெண்ணிலா கபடி குழு, எம்மகன், நான் மகான் அல்ல படங்களுக்கு வசனம் எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற பாஸ்கர் சக்தி கதை வசனம் எழுதிய ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.
டிஸ்கவரி சினிமாஸ் சார்பில்அவரது இயக்கத்தில் ‘வடக்கன்’ படத்தை மு.வேடியப்பன் தயாரித்தார். வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்காக கூட்டம் கூட்டமாக வருகின்றனர் தமிழ்நாட்டின் உள் கட்டமைப்பு, நெடுஞ்சாலை பணிகள், சென்னை நகரில் பல வருடங்களாக நடைபெற்று வரும் மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணிகளில் வடமாநில தொழிலாளர்களே வேலை செய்து வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் விவசாய வேலைகளுக்கு தொழிலாளர்கள் வருவது குறைந்துவிட்ட நிலையில் அந்த பணிகளுக்கும் மேற்கு வங்கம், பீகார் மாநிலங்களில் இருந்து விவசாய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வரப்படுகின்றனர்.
அவர்களது வருகையை பொறுத்தே நெல் நடவு நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது. இவற்றை மையமாக கொண்டு பாஸ்கர் சக்தி எழுதியிருக்கும் படம்தான் வடக்கன்.
சமூக வலைதளங்களில் வடக்கன் என்கிற வார்த்தை கேலி, கிண்டல் செய்யக்கூடிய வகையில் மீம்ஸ்கள் அதிகம். இந்த நிலையில் வடக்கன்களை இங்கிருந்து விரட்ட வேண்டும் என்கிற வசனம் இடம்பெற்ற படத்தின் டிரெய்லர் வெளியானது.
அதன் பின் தணிக்கை சான்றிதழ் பெற தணிக்கை குழுவினருக்கு சென்னையில் படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பாஜக ஆதரவாளர்கள் நிறைந்த தணிக்கை குழு படத்தின் உள்ளடக்கம், சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை ஆட்சேபிக்கவில்லை.
வடக்கன் என்கிற பெயரை மாற்ற வேண்டும் என தணிக்கை குழு நிபந்தனை விதித்தது. படத்திற்கான தலைப்புக்கு அனுமதி வழங்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை தணிக்கை குழுவின் இந்த நிபந்தனையை எதிர்க்கவும் இல்லை.
குறைந்தபட்சம் விமர்சிக்கவும் இல்லை. இந்த நிலையில் வடக்கன் என்கிற பெயரை ‘ரயில்’ என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
குங்குமராஜ், வைரமாலா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தில் ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா என பலரும் நடித்துள்ளனர். எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தின் தமிழ்நாடு உரிமையை பெற்றுள்ளனர்.
– இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: சட்டென குறைந்த தங்கம், வெள்ளி விலை… எவ்வளவு தெரியுமா?