நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்புகொண்ட ரகுதாத்தா படத்துக்கு தற்போது கால்ஷீட் தர மறுக்கிறார் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
கீர்த்தி சுரேஷ் உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தெலுங்கில் நானிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள தசரா படம் இம்மாதம் வெளியாகவிருக்கிறது.
2022 டிசம்பரில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டு தொடங்கிய படம் ரகுதாத்தா. கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் அப்படத்தைத் தயாரிக்கிறது.
ரகுதாத்தா தொடங்கும்போதே 2023 கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தி ஃபேமிலிமேன் இணையத்தொடரில் பணியாற்றிய சுமன்குமார் இந்தப்படத்தை எழுதி இயக்குகிறார்.
இந்நிலையில் கீர்த்திசுரேஷ் கால்ஷீட் சொதப்பல் காரணமாக இந்த படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதல்கட்டப் படப்பிடிப்பைத் தொடர்ந்து அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குத் தேதி கேட்டால் தராமல் இழுத்தடிக்கிறார். தெலுங்கில் ஒரு பெரியபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அந்தப் படக்குழுவினர் கேட்டிருக்கும் தேதிகளையே இவர்களும் கேட்பதால் அவரால் தரமுடியவில்லை என்பது ஒரு தகவல்.
இன்னொருபக்கம் திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றிய சுமன்குமார் இந்தப்படம் மூலம் இயக்குநராக ஆகியிருக்கிறார். அவரால் இயக்கத்தைச் சரியாகச் செய்ய இயலவில்லை என்றும் அவருடைய நடவடிக்கைகள் கீர்த்திசுரேஷுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் அந்தப்படத்தில் நடிப்பதைத் தவிர்த்துவருகிறார் என்பது மற்றொரு தகவல்.
இவற்றில் எது உண்மை? என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் இதனால் இயக்குநர் சுதாகொங்கரா அதிருப்தியில் இருக்கிறார்.
அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?இந்தப்படத்தை முதல்பிரதி அடிப்படையில் தயாரித்துத் தருகிற பொறுப்பை சுதாகொங்கராதான் ஏற்றிருக்கிறார். படம் தடைபட்டிருப்பதால் கவலை கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
இராமானுஜம்
“தமிழ், தெலுங்கு அல்ல… அம்பேத்கரே நமது அடையாளம்” : திருமாவளவன்
அண்ணாசாலையில் மேம்பாலம்: பட்ஜெட்டில் அறிவிப்பு!
மகளிருக்கு 29000 ரூபாய் வழங்குக: அண்ணாமலை கோரிக்கை!