நடிகை சௌந்தர்யாவை கொலை செய்து விபத்தாக சித்தரித்தார் என சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், அதற்கு செளந்தர்யாவின் கணவர் மறுப்பு தெரிவித்துள்ளார். Raghu denied Mohan Babu kill Soundarya
தென்னிந்திய சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன்லால், சிரஞ்சீவி உள்ளிட்ட உச்சநடிகர்களுடன் நடித்து பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரபல நடிகையாக இருந்தவர் செளந்தர்யா.
கடந்த 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று மக்களவைத் தேர்தலின் போது பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பெங்களூரு சென்றபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் செளந்தர்யா இறந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு அவரது மரணத்திற்கு நடிகர் மோகன்பாபு தான் காரணம் என்று தெலங்கானாவை சேர்ந்த சமூக ஆர்வலர் எடுரு கட்லா சிட்டிமல்லு புகார் அளித்தார்.

மோகன் பாபு தான் கொலை செய்தார்! Raghu denied Mohan Babu kill Soundarya
இதுதொடர்பாக கம்மம் மாவட்ட ஆட்சியரிடம் அவர் அளித்த புகாரில், “ஹைதராபாத் ஜல்லேபள்ளியில் நடிகை சௌந்தர்யாவுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை மோகன்பாபு கேட்டார். அதற்கு சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் அதற்கு மறுத்ததால், இருவரையும் கொலை செய்து ஹெலிகாப்டர் விபத்து போல் சித்தரித்துவிட்டார். சௌந்தர்யா இறந்த பின், அவரது நிலத்தை ஆக்கிரமித்து விருந்தினர் மாளிகை கட்டிவிட்டார் மோகன்பாபு. அதனை அரசாங்கம் உடனடியாகக் கையகப்படுத்த வேண்டும்” என தனது புகாரில் சிட்டிமல்லு தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிட்டிமல்லுவின் புகாருக்கு நடிகை செளந்தர்யாவின் கணவர் ரகு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தவறான செய்தி பரப்புவதை நிறுத்துங்கள்! Raghu denied Mohan Babu kill Soundarya
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “கடந்த சில நாட்களாக மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள சொத்து குறித்து ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. சொத்து தொடர்பாக பரவி வரும் ஆதாரமற்ற செய்தியை நான் மறுக்க விரும்புகிறேன்.
மோகன் பாபு, மறைந்த எனது மனைவி சௌந்தர்யாவிடமிருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தும் வாங்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன். எனக்குத் தெரிந்தவரை, நாங்கள் அவருடன் எந்த நில பரிவர்த்தனையும் செய்யவில்லை.
கடந்த 25 ஆண்டுகளாக மோகன் பாபுவை நான் அறிவேன். மேலும் அவருடன் வலுவான மற்றும் நல்ல நட்பைப் பகிர்ந்து வருகிறேன். எங்கள் குடும்பங்கள், என் மனைவி, என் மாமியார் மற்றும் மைத்துனர் எப்போதும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் ஆழமான பிணைப்பை அவருடன் பராமரித்து வருகின்றனர்.
இந்த விஷயத்தில் மோகன் பாபுவை நான் மதிக்கிறேன். உங்கள் அனைவருடனும் உண்மையைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். மோகன் பாபுவுடன் எங்களுக்கு எந்த சொத்து பரிவர்த்தனையும் இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
இது ஒரு தவறான செய்தி என்பதால், தவறான செய்திகளைப் பரப்புவதை நிறுத்துமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகையாக இருந்த செளந்தர்யா 2003ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த ஐடி பொறியாளரான ரகுவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.