நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது பல படங்களில் கமிட் ஆகி பயங்கர பிசியாக உள்ளார்.
“காஞ்சனா” சீரிஸ்களுக்கு பின்னர் இயக்கத்தில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு நடிப்பில் மட்டும் ராகவா லாரன்ஸ் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டில் மட்டும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் “ருத்ரன்”, “சந்திரமுகி 2”, “ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்” ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இதில், “ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த ஆண்டு ராகவா லாரன்ஸின் எந்தெந்த படங்கள் திரைக்கு வரவுள்ளன என்பதை பார்க்கலாம்.
முதலில் சத்யஜோதி தயாரிப்பில் “அயோக்யா” படத்தின் இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் “ஹண்டர்” என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் கமிட் ஆனார். இதையடுத்து “ரெமோ”, “சுல்தான்” படங்களின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணனின் இயக்கத்தில் “பென்ஸ்” என்ற படத்தில் கமிட் ஆகி உள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் கதையை எழுதுவதோடு, அதை தயாரிக்கவும் செய்கிறார்.
பின்னர், “கருடன்” பட இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் வெற்றிமாறன் திரைக்கதையில் “அதிகாரம்”, ராகவா லாரன்ஸின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் “துர்கா” என பல படங்களில் தற்போது லாரன்ஸ் கமிட் ஆகி உள்ளார். இதில் எந்த படத்திற்கான படபிடிப்பு முதலில் தொடங்கும் என்பது குறித்து பல கேள்விகள் ரசிகர்களிடையே உள்ளது.
இதில், முதலில் “ஹண்டர்”, “பென்ஸ்” திரைப்படங்கள் வெளியாகும் வாய்ப்பு அதிகமுள்ளது. இந்த 2 படங்களுக்கான ஸ்கிரிப்ட்டுகளும் தயாராக உள்ளதால், படபிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக “ஹண்டர்” படத்தின் படபிடிப்புதான் முதலில் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், வெற்றிமாறன் திரைக்கதை எழுத துரை செந்தில்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் “அதிகாரம்” படம் குறித்து, “கருடன்” படத்திற்கு முன்னரே அறிவிப்பு வெளியானது.
இந்த படம் குறித்து ராகவா லாரன்ஸ், “வெற்றிமாறன் சாரின் ‘அதிகாரம்’ படத்தின் திரைக்கதையைக் கேட்டுப் பிரமித்துப் போனேன். அவர் எழுதியுள்ள இந்த பிரம்மாண்ட கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இயக்குநர் துரை செந்தில்குமார் தற்போது லெஜண்ட் சரவணாவை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதையடுத்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக, லாரன்ஸின் “அதிகாரம்” படபிடிப்பிற்கு இப்போது வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.
இதனால், “ஹண்டர்”, “பென்ஸ்” படங்களை முடித்துவிட்டு மீண்டும் இயக்கத்தில் லாரன்ஸ் கவனம் செலுத்த உள்ளார். “காஞ்சனா” சீரிஸின் அடுத்த கதையான “துர்கா”வின் அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இந்த படத்தின் படபிடிப்பும் இந்த ஆண்டு தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதனிடையே சண்முகப்பாண்டியன் நடித்து வரும் “படைத்தலைவன்” படத்திலும் நட்புக்காக சிறிய வேடம் ஒன்றில் லாரன்ஸ் நடிக்கிறார். அடுத்ததாக, லாரன்ஸின் தம்பி எல்வின் நடிப்பில் “புல்லட்” படத்தை அவர் தயாரித்து வருகிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்காகவும் லாரன்ஸ் ஒரு படம் பண்ணுகிறார். அதில் அவர் மாற்றுத்திறனாளியாக நடிப்பதுடன், அந்தப் படத்தில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கவும் ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்றம் : இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!
ஆர்சிபி அணிக்காக புதிய பொறுப்பை ஏற்றார் தினேஷ் கார்த்திக்