ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படப்பிடிப்பு தொடங்கியது
ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர் ஆகியோர் நடிப்பில் சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் திரைக்கதையில் அவரே நடித்துத் தயாரித்த பாபா படம் வணிகரீதியாகத் தோல்வியடைந்தது. இந்நிலையில் சந்திரமுகி சுமார் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் வடிவேலு காமெடியும், ஜோதிகாவின் பேயாட்டம் மக்களைக் கவர்ந்ததால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 40 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தது.
ரஜினிகாந்த் நடிக்கும் படங்களின் வணிக மதிப்பை உயர்த்திய படம் சந்திரமுகி. இரண்டாம் பாகம் எடுப்பது இன்றைய சினிமாவின் ட்ரெண்டாகி வரும் சூழலில் சந்திரமுகி – 2 எடுக்கப்படுமா என கேள்விகள் கேட்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் – பி.வாசு கூட்டணியில் அது சாத்தியம் என அறிவிப்புகள் வெளியானது. முதல் பாகத்தில் நடித்த ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா மூவரும் இல்லாத சந்திரமுகி – 2 ல் வடிவேல், இயக்குநர் பி.வாசு மட்டும் உள்ளனர்.
நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு (15.07.2022) மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
அம்பலவாணன்