“தமிழ் திரையுலகில் இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் இழப்பை தன்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை” என்று நடிகை ராதிகா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநரும் நடிகருமான மனோபாலா உடல் நலக் குறைவு காரணமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார்.
தனது நகைச்சுவை நடிப்புக்கு பெயர் போன மனோபாலா, 1982 ஆம் ஆண்டு ’ஆகாய கங்கை’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து ’ஊர்காவலன்’, ’சிறைப்பறவை’, ’என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’, ’மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என சுமார் 40 க்கும் மேலான திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
இதில் அவர் இயக்கிய ஊர்காவலன், தென்றல் சுடும் உள்ளிட்ட பெரும்பாலான திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிகை ராதிகா தான் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் மனோ பாலாவின் மறைவு நடிகை ராதிகாவை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்த அவர், “இந்த செய்தியை கேட்டு என் மனம் உடைந்து விட்டது! அவரை நேரில் சென்று பார்ப்பதற்காகவே இன்று காலை தொலைபேசியில் விசாரித்தேன். தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் நான் நிறைய அவருடன் பகிர்ந்துள்ளேன். நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்.
அவருடன் சிரித்துள்ளேன். சண்டை போட்டுள்ளேன். ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டே மணிக்கணக்கில் பேசி இருக்கிறேன். திறமையான அவர் எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்றபடி தன்னைப் பொருத்திக் கொள்வார். இதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை! அவரது இழப்பு எனக்கு வருத்தம்!” என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து தனது கணவரும், நடிகருமான சரத்குமாருடன் நேரில் சென்று கண்ணீர் மல்க மனோ பாலாவின் உடலுக்கு ராதிகா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் நா தழுதழுக்க அவர் பேசுகையில், “மனோ பாலா என்னுடைய சிறந்த நண்பர். நாங்கள் இருவரும் ஒரே இயக்குநரிடம் (பாரதிராஜா) இருந்து தான் வந்தோம்.
மனோ பாலா அருமையான இயக்குநர். அதன்பிறகு தான் நடிகர். நான் தான் அவருடைய இயக்கத்தில் அதிகமாக நடித்துள்ளேன் என்று நினைக்கிறேன். கடைசியாக சந்திரமுகி 2 படப்பிடிப்பில் இருவரும் கலந்துகொண்டோம்.
நான் அவருடன் நிறைய தடவை சண்டை போட்டுள்ளேன். இனி அப்படி சண்டை போட, பேசி சிரிக்க யாருமில்லை. அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.” என்று கண்ணீருடன் பேசினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சினிமா, டிவி, யூடியூப்: மாஸ் மீடியாவில் மாஸ் காட்டிய மனோபாலா
ஆடியோ சர்ச்சைக்குப் பிறகு பிடிஆர் ஏறும் கட்சி மேடை!
சரத் பாபுவுக்கு என்னாச்சு?: குடும்பத்தினர் விளக்கம்!