நடிகர் அஜித் பெயரிலான ரேசிங் இணையதளம் போலியானது என்றும் அதனை புறக்கணிக்குமாறும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி கார் பந்தயங்களிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அஜித்குமார் ரேசிங் என்ற பெயரில் அணியையும் உருவாக்கியுள்ளார்.
விரைவில் ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் மோட்டார் ரேஸிங் போட்டியில் பங்கேற்க உள்ளார். இதற்காக படப்பிடிப்புக்கு இடையே பயிற்சி எடுத்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வபோது வெளியாகி வைரலாகின.
மேலும் அவரது கார், ஹெல்மெட் உள்ளிட்ட உபகரணங்களில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை லோகோ வடிவமைப்பை பயன்படுத்தியதற்காக அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே அஜித் குமார் ரேசிங் கார் பந்தைய அணிக்காக https://ajithkumarracing.com/ இணையதளத்தை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக ரசிகர்கள் சந்தேகம் தெரிவித்து வந்த நிலையில், அந்த இணையதளம் அதிகாரப்பூர்வமானது அல்ல என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “http://ajithkumarracing.com என்ற இணையதளம் அங்கீகரிக்கப்பட்ட தளம் அல்ல. அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் மட்டுமே முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும். தயவுசெய்து அந்த தளத்தை புறக்கணிக்கவும்” என சுரேஷ் சந்திரா குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”அழுகிய கூமுட்டை… செத்துப் போயிடுவ” : விஜய்யை கடும் வார்த்தைகளால் விமர்சித்த சீமான்