சமூக நிதர்சனமா, விமர்சனமா?
ஒரு ஊரில் பல சாதிகளைச் சார்ந்தவர்கள் வசிப்பது யதார்த்த நிலைமை. அதேநேரத்தில், சாதியில்லாச் சமுதாயம் அமைய வேண்டுமென்று எத்தனையோ தலைவர்கள் அறைகூவல் விடுத்தபிறகும், அதனைச் சாத்தியப்படுத்துவதற்கான முயற்சிகள் முழுமையாக வெற்றி பெறாமல் போனதும் மறுக்க முடியாத உண்மை.
இவ்விரண்டுக்கும் நடுவே, இந்த சமூகத்தைச் சாதிரீதியாகப் பிளவுபடுத்துவதற்கான விஷயங்களும் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன. தான் உருவாக்கிய ஒரு மாதிரிக் கிராமம் மூலமாக, ’ராவணக்கோட்டம்’ படத்தில் அப்பிரச்சனைகளைப் பேச முனைந்திருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.
வெறுமனே சில மனிதர்கள் சம்பந்தப்பட்ட வாழ்க்கைமுறையைச் சொன்ன காரணத்தாலேயே, அவரது முந்தைய படமான ‘மதயானைக்கூட்டம்’ மீது சாதி முத்திரை குத்தப்பட்டது. இந்த நிலையில் சாதி வேறுபாடு தொடர்பான கதையை அவர் கையிலெடுத்திருப்பது சர்ச்சைக்குரியதாக அமைந்துள்ளதா அல்லது சமாதானம் பேசுகிறதா?

ஒரு மாதிரிக் கிராமம்!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஏனாதி கிராமத்தில் மேலத்தெருவில் வாழ்கிறார் போஸ். அவரது நெருங்கிய நண்பரான சித்ரவேல் கீழத்தெருவில் வசிக்கிறார். வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும், அவர்களது நட்புக்கு அது தடையாக இருப்பதில்லை.
பணம், நிலம், செல்வாக்கு கொண்டவராக இருந்தபோதும், சாதி வேறுபாட்டை முன்னிறுத்தாமல் ‘அனைவரும் சமம்’ என்பதனை உரக்க முழங்குகிறார் போஸ். அவருக்கு உறுதுணையாக இருக்கிறார் சித்ரவேல். அடுத்த தலைமுறையிலும் அது போன்ற நட்பு தொடர்கிறது. சித்ரவேலின் மகன் மதிவாணனும் போஸின் உறவினரான செங்குட்டுவனும் அண்ணன் தம்பியாகப் பழகுகின்றனர்.
ஏனாதி அம்மன் கோயிலில் கொடைவிழா நடைபெறுகிறது. அதற்காக, வெளியூர்களில் இருந்து உறவினர்கள் பலர் அவ்வூருக்கு வருகின்றனர். செங்குட்டுவனின் உறவினரான இந்திரா, அவரது தாய், சகோதரர் ஒரு உறவினரின் வீட்டில் தங்குகின்றனர்.
செங்குட்டுவன் மற்றும் அவரது சகோதரியோடு ஏற்பட்ட தகராறினால், இந்திராவின் தாய் அவர்களோடு பேசுவதில்லை. அப்படியிருந்தும், ஐந்து ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் செங்குட்டுவனும் இந்திராவும் காதலித்து வருகின்றனர்.

ஊருக்குள் இரு சாதியினரிடையே மோதலைத் தூண்டும் வகையில், மதிவாணனின் தாய்மாமன் சில செயல்களைச் செய்து வருகிறார். அந்த ஊரில் காலூன்ற முடியாத எம்.எல்.ஏ மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரின் விரக்தி, அவருக்குத் துணையாக அமைகிறது. ஆனால், மதி மற்றும் செங்குட்டுவனின் ஒற்றுமை அச்செயல்பாடுகளுக்குத் தடையாக இருக்கிறது.
ஊருக்குள் பிரிவினை உண்டாக வேண்டுமென்றால் மதிக்கும் செங்குட்டுவனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் மட்டுமே முடியும் என்று எண்ணுகிறார் மதியின் தாய்மாமன். அதற்காக, இந்திரா மதியைக் காதலிப்பதாகக் கதை கட்டிவிடுகிறார். மதியும் அதனை நம்பத் தொடங்குகிறார்.
அதன்பிறகு என்னவானது? நண்பனைத்தான் இந்திரா காதலிக்கிறார் என்பதை மதி தெரிந்துகொண்டாரா அல்லது இருவரும் மோதிக் கொண்டனரா? அரசியல் சதிகளால் ஊர் இரண்டாகப் பிளவுபட்டதா என்பதை அறிய, நீங்கள் ‘ராவணகோட்டம்’ படத்தை முழுதாகப் பார்க்க வேண்டும்.
உண்மையைச் சொன்னால், சாதி வேறுபாடு பாராட்டாத ஒரு மாதிரிக் கிராமத்தைக் கண் முன்னே காட்டியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். அதில் புதுமைகளோ, ஆச்சர்யமூட்டும் அம்சங்களோ இல்லை என்பதே நம் வருத்தம்.
வீணாகிப்போன நடிப்புத்திறமை!
செங்குட்டுவனாக சாந்தனு பாக்யராஜ், மதியாக சஞ்சய் சரவணன், போஸ் ஆக பிரபு, சித்திரவேல் ஆக இளவரசு, இந்திராவாக ஆனந்தி, எம்.எல்.ஏவாக அருள்தாஸ், அமைச்சராக பி.எல்.தேனப்பன், மாவட்ட ஆட்சியராக ஷாஜி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து தீபா சங்கர், சுஜாதா உட்படப் பலர் இதில் தோன்றியிருக்கின்றனர்.
படம் முழுக்க துள்ளலும் துடிப்பும் மிக்க ஒரு இளைஞராக வந்து போயிருக்கிறார் சாந்தனு. அவரது நடிப்பு ஒரு சாதாரண வாலிபரையே திரையில் முன்னிறுத்துகிறது. மதியாக நடித்துள்ள சஞ்சய் சரவணன் நல்லதொரு வரவு. இப்படம் அவருக்குப் பல வாய்ப்புகளைப் பெற்றுத் தரலாம்.
ஆனந்திக்கு அதிகக் காட்சிகள் இல்லையென்ற போதிலும், ஒரு நாயகிக்கான அந்தஸ்தோடு அவர் திரையில் அழகாக வலம் வந்திருக்கிறார். தீபா சங்கர், சுஜாதாவின் நடிப்பு எளிதாக ரசிகர்களைக் கவர்கிறது. குறிப்பாக, சாதாரணமாக இரு பெண்கள் மோதிக்கொள்வதை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளது.
இவர்கள் தவிர்த்து படத்தில் தோன்றியுள்ள பலரும் நன்றாகவே நடித்துள்ளனர். ஆனால் ரத்தினச் சுருக்கமான காட்சியாக்கம், நெருடல் இல்லாத கதை சொல்லல் போன்றவை அமையாத காரணத்தால் அனைவரது நடிப்புத்திறமையும் வீணாகியிருக்கிறது.
வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு, லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு, நர்மதா வேணி மற்றும் ராஜுவின் கலை இயக்கம் ஆகியன கிராமத்துக் கொண்டாட்டங்களைச் சொல்லும் காட்சிகளில் கவனம் ஈர்க்கின்றன. ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை, பல காட்சிகளில் அழுத்தம் சேர்க்க உதவியிருக்கிறது. ஆனால், பாடல்கள் அதே ஈர்ப்பை உருவாக்கத் தவறியிருக்கின்றன.

மண், பெண், பொன்னால் மோதல் வரும் என்ற பழமையான பார்முலாவைத் துணையாகக் கொண்டு ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். அது இரு வேறு சாதிகளைச் சார்ந்தவர்களுக்குள் தோன்றும் முரண்களை எளிதாகச் சொல்கிறது; ஆனால், இன்றைய தலைமுறைக்கான கதை சொல்லலுக்கு அது போதுமானதாக இல்லை என்பதே உண்மை.
கிளைமேக்ஸ் ஷாட் அமைக்கப்பட்டிருக்கும் விதம் அப்படியே வெற்றிமாறனின் ஆடுகளத்தை நினைவுபடுத்துவதும், அந்த ஷாட்டில் ஆனந்திக்குப் பதிலாக வேறொரு பெண் சாந்தனுவோடு நிறுத்தப்பட்டிருப்பதும் ஏனோ?
ஏன் இப்படியொரு படம்?
’வேதம் புதிது’ உட்படப் பல படங்கள் சாதி வேறுபாடுகள் சார்ந்து அமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு முன்பு எம்ஜிஆர், சிவாஜி காலத்திலும் இது போன்ற கதைக்களங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் இருந்து வேறுபட்டு புதியதொரு உலகத்தை அட்டகத்தி, பரியேறும் பெருமாள், மேற்குத்தொடர்ச்சி மலை போன்ற படங்கள் முன்வைத்தன. அப்படியொரு சூழலில், தொண்ணூறுகளில் புழங்கிய நாயக துதிக்கு வேறு முலாம் பூசியிருக்கிறது ‘ராவணகோட்டம்’.
பிரபு ஏற்ற போஸ் பாத்திரத்தைக் கம்பீரமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அதே அளவுக்கு, இளவரசுவின் சித்திரவேல் பாத்திரத்தை தெளிவாகத் திரையில் வார்க்கவில்லை. அவர் குடிகாரரா, பொழுதுபோக்கு அம்சங்களில் நாட்டம் கொண்டவரா, குடும்ப உறுப்பினர்களிடமும் உறவினர்களிடமும் இணக்கம் உள்ளவரா, சாதீய அடுக்குகளின் மீது நம்பிக்கை மிகுந்தவரா என்பது உட்படப் பல விஷயங்கள் திரைக்கதையில் தெளிவுபடுத்தப்படவில்லை.

ஆனந்தியும் சஞ்சய் சரவணனும் பழகுவதை, ஒன்றாகச் சுற்றுவதை ரொம்பவே சாதாரணமாகத் திரையில் காட்டியிருக்கிறார் விக்ரம் சுகுமாரன். உண்மையில், ஒரு கிராமியச் சூழலில் அது அவ்வளவு எளிதான விஷயமல்ல.
இந்தக் கதை பெருநகரமொன்றில் நிகழ்வதாகச் சொல்லியிருந்தால், இதனை இவ்வளவு சீரியசாக உற்றுநோக்கத் தேவையில்லை. ஒரு மாதிரிக் கிராமத்தை இயக்குனர் முன்வைப்பதாலேயே, இது போன்ற விஷயங்கள் எளிதாக நிகழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. காரணம், அதற்கு நேரெதிரான மனநிலையே இன்றும் ஆணவக்கொலைகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது.
கதையில் சம்பந்தப்பட்ட இரு வேறு சாதியினர் யார் எவர் என்பதை பிரபு, இளவரசு ஏற்ற பாத்திரங்களின் பெயர்களே சொல்லிவிடுகின்றன. படத்தில் பிரபு, இளவரசு, சாந்தனு, சஞ்சய் ஆகியோரைத் தவிர வேறு எந்தப் பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லை. கதையின் பெரிய பலவீனமும் அதுவே. சாதி சார்ந்து அந்த கிராம மக்களிடம் எத்தகைய சிந்தனை உள்ளது என்பதும் திரையில் தென்படவில்லை. வெறுமனே மேலத்தெரு, கீழத்தெரு என்ற இரு வார்த்தைகளின் மூலமாக அதனைக் கடக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.
வெம்மைமிக்க ராமநாதபுரம் மண்ணில், ஆண்டுதொறும் சில நாட்கள் மட்டும் பதற்றத்திற்குரியதாகப் பத்திரிகைகளால் கருதப்படுகின்றன. அவை குறித்தோ, சாதீய வேறுபாடுகளுக்கான தீர்வுகள் பற்றியோ இப்படம் பேசவே இல்லை. அதற்கு மாறாக, கருவேல மரங்களை விதைத்து இம்மண்ணை நாசம் செய்ய அரசியல்வாதிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் முயல்வதாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதற்காகவே சாதிப் பிரிவினையைப் பூதாகரமாக்குவதாகக் கூறுகிறார். உண்மையைச் சொன்னால், கருவேல மரங்களின் பின்னிருக்கும் அரசியல் இன்னும் விரிவாக அணுகப்பட வேண்டிய ஒன்று.
ஒரு மாதிரிக் கிராமத்தை முன்வைக்காமல், எம்ஜிஆர்தனமான பாத்திர வார்ப்புகள் இல்லாமல், சமூக ஒற்றுமையைப் பேசும் படைப்பைக் கள யதார்த்தம் வழியாகவே உணர்த்த, கருவேல மரங்களை அகற்றுவதற்கான தேவையில் இருந்து இப்படத்தின் திரைக்கதையைத் தொடங்கியிருக்க வேண்டும். கூடவே, சமூகத்தில் நிலவும் சாதீய வேறுபாடுகளுக்கும் இயக்குனர் காட்டியிருக்கும் உலகத்திற்குமான முரண்களையும் திரையில் உணரச் செய்திருக்க வேண்டும். அதனைச் செய்யாத காரணத்தால், ‘ராவணகோட்டம்’ சமூகத்தில் நிலவும் சாதீயத்தின் மீதான விமர்சனமாகவும் அமையவில்லை; அதேநேரத்தில் நிதர்சனமாகவும் அமையவில்லை.
உதய் பாடகலிங்கம்
தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!
கர்நாடகா தேர்தல் ரிசல்ட்: பாஜக சொல்வது என்ன?
’குட் நைட்’: பார்வையாளர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
நடுநிலையான அலசல்..