‘காடுவெட்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 3) சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் நடைபெற்றது.
இதில் நாயகன் ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் சோலை ஆறுமுகம், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், மோகன்ஜி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், “என்னைப்பற்றிய எத்தனையோ கட்டுக்கதைகள் கற்பனைகளை கிளப்பி விட்டார்கள். நான் 100 படங்கள் விநியோகம் செய்திருக்கிறேன். எத்தனையோ படங்கள் தயாரித்திருக்கிறேன்; 40 படங்கள் நடித்திருக்கிறேன்.
சினிமாவில் எனக்கு 15 வருட உழைப்பு உண்டு. எல்லா அரசியல்வாதிகள், எல்லா சாதிக்காரர்களுடனும் பழக்கம் உண்டு. அப்படியான சூழலில் என்னைப்பற்றி தவறான செய்திகள் வெளிவந்தது.
15 வருடமாக சினிமாவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நான் தவறு செய்திருப்பேனா? வடமாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ரசிகர்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். அதனால் சினிமா, அரசியலை விட்டு நான் போகமாட்டேன்.
இப்போது காடுவெட்டிக்கு வருவோம். இந்த கேரக்டரில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இயக்குநர் சோலை ஆறுமுகம் கதையை சொன்னதுமே அவரை மைண்ட்ல வச்சுதான் நடித்தேன்.
குரு ஐயாவின் குடும்பத்துக்கு சொல்றேன். இந்தப்படம் உங்களுக்கு பெருமை சேர்க்கும். இது உணர்வு சார்ந்த படம். இதை தமிழ்நாடு முழுவதும் வரவேற்பார்கள்.
இது சாதி படம் இல்லை. நான் எந்த சாதியையும் தவறாக பேச மாட்டேன். சாதி என்பது உணர்வு மட்டுமே”, என்றார்.
தொடர்ந்து இயக்குநர் சோலை ஆறுமுகம், “காடுவெட்டியை என்னால் இயக்க முடிந்தது என்றால் அதற்கு முதல் காரணம் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ்தான்.
இந்த படத்திற்கு சென்சார் 31 கட்டுகள் கொடுத்தது. காடுவெட்டி என்ற தலைப்பை வைக்கக்கூடாது என்று சொன்ன சென்சார் போர்டிடம் எனது விளக்கத்தை கொடுத்தேன். காடுவெட்டி பெயருக்கு பெரிய வரலாறு இருக்கிறது.
அந்த காலத்தில் மன்னர்கள் போர் பயிற்சிக்காக காட்டில் ஒரு இடத்தை தேர்வு செய்து மரங்களை வெட்டி போர் பயிற்சிக் களமாக பயன்படுத்துவார்கள்.
அதனை போர்க்குடி மக்கள் விவசாய நிலமாக மாற்றுவார்கள். பிறகு அதனை ஊர்களாக மாற்றுவார்கள். அப்போது அதற்கு காடுவெட்டி என்று பெயர் வைப்பார்கள்.
இப்படி தமிழ் நாட்டில் 11 இடங்கள் உள்ளன. ஆக காடுவெட்டி ஒரு சரித்திரம் என்று விவாதித்தேன். இந்த தலைப்பு கிடைத்தது.
காதல் என்ற சப்பை காரணத்துக்காக எல்லோரையும் ஒழிக்க நினைத்தால் அது தலைமுறை தலைமுறையாக வன்முறையை சேர்க்கும்.
இந்தப்படம் தமிழ் சினிமாவில் வட மாவட்டத்து மக்களின் வாழ்வியலை, கலாச்சாரத்தை, அரசியலை உள்ளது உள்ளபடி பேசும். நிறைய ஹீரோக்களிடம் இந்த கதையை சொன்னபோது அவர்களுக்கு கதை பிடித்திருந்தது.
டைட்டிலை சொன்னபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள். ஆனால் படத்தின் தலைப்புக்காகவே இந்த படத்தில் நடிக்க ஆர்.கே.சுரேஷ் சம்மதித்தார். தமிழ் சினிமாவில் இப்படியொரு ஹீரோ கிடைப்பது அரிது”, என்றார்.
பாமக கட்சியை சேர்ந்த மறைந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
–ராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திராவிடம் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது: ஆளுநர் ரவி
‘ராஜதந்திரம்’ – மோடி நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொள்ளாதது ஏன்? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்!