யாருக்காக இந்த வலைப்பின்னல்?
ஒரு படத்தின் போஸ்டர் டிசைன், டீசர் அல்லது ட்ரெய்லர், ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள், புகைப்படங்கள் என்று அனைத்தும் சேர்ந்து மக்கள் மனதில் எதிர்பார்ப்பை உருவாக்கும்; அதன் அளவு சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கலாம்.
படம் பார்த்துவிட்டு வெளிவரும்போது உருவாகும் திருப்தியானது அந்த எதிர்பார்ப்பைத் தாண்டியதாக அமைந்தால் மட்டுமே அப்படைப்பு வெற்றிக்கோட்டைத் தொடும்.
நட்டி என்கிற நடராஜ் சுப்பிரமணியத்தின் சமீபத்திய படமான ‘வெப்’ கூட, தன்னளவில் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியது. படம் பார்த்து முடிந்தபிறகு, நம் மனதில் அந்த எதிர்பார்ப்பு உருக்குலைந்ததா அல்லது மேலும் ஒரு படி உயர்ந்ததா?
கடத்தப்படும் பெண்கள்!
மூன்று இளம்பெண்கள். ஒரு ஐடி நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்க்கின்றனர். வாரம் முழுவதும் வேலை, விடுமுறை நாட்களில் பப், பார்ட்டி, போதை என்று வேறொரு உலகத்தில் வாழத் தொடங்கிப் பல நாட்களாகிவிட்டது.
இந்த நிலையில்தான், அவர்களது குழுவில் பணியாற்றும் புதுமணத் தம்பதி தேனிலவை முடித்துக்கொண்டு திரும்புகின்றனர். அவர்களை வரவேற்கும்விதமாக, ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்கின்றனர் அந்த பெண்கள்.
பார்ட்டி முடிந்ததும் பப்பில் இருந்து கிளம்பியவர்கள் ஒரு அறைக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கண் விழிக்கின்றனர். அந்த புதுமணப் பெண்ணும் அவர்களோடு இருக்கிறார்.
என்ன நடந்தது? எங்கிருக்கிறோம்? எதற்காக இந்தக் கடத்தல் என்று யோசித்து முடிப்பதற்குள், கையில் தடியூன்றி வரும் ஒரு மாற்றுத்திறனாளி (நட்டி) அவர்கள் முன் வந்து நிற்கிறார். அவருக்கு உதவியாக இருக்கும் பெண், அம்மூவருக்கும் உணவு வழங்குகிறார்.
பின்னர், அவர்களுக்கு ஊசி வழியாக மருந்து செலுத்துகிறார்; உடனே, அவர்கள் மயக்கமடைகின்றனர். இந்த வழக்கம் அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்கிறது. இரண்டு நாட்கள் கழித்து, புதுமணப் பெண் தனது கணவர் அங்கு பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதைப் பார்த்து அலறுகிறார்.
அவரது ஆவேசமும் அலறலும் அந்த மாற்றுத்திறனாளி நபரை எரிச்சலூட்டுகிறது. அவரது ஆத்திரம் அடங்குவதற்குள், அந்த பெண்ணின் குரல் மங்கி விடுகிறது. அத்தனையும் சேர்ந்து, அந்த மூன்று பெண்களையும் பெரும்பயத்தில் தள்ளுகிறது.
ஒருகட்டத்தில், அந்த மாற்றுத்திறனாளி யார்? அவரது முன்கதை என்னவென்பதை அப்பெண்கள் தெரிந்து கொள்கின்றனர். ஒருநாள், அவர்கள் அங்கிருந்து தப்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.
அதனைப் பயன்படுத்தி, அம்மூவரும் அங்கிருந்து வெளியேறுகின்றனர். ஆனால், வீட்டில் இருக்கும் குடும்பத்தினரோ அவர்கள் சொல்வதைக் கேட்டு அதிரவில்லை. அது ஏன்? அவர்கள் அப்படி நடந்துகொள்வதற்குக் காரணம் என்ன என்று சொல்கிறது ’வெப்’.
மூன்று பெண்கள் கடத்தப்படுவதுதான் கதையின் மையம் என்பதால், இந்த படத்தின் ட்ரெய்லர் பார்த்ததும் ‘இது ஒரு கேஜ் த்ரில்லர்’ என்றே தோன்றியது. அப்படியொரு நம்பிக்கையுடன் தியேட்டர் வாசலை மிதிப்பவர்களை, இந்த படம் ஒருவழியாக்கி விடுகிறது. ஏனென்றால், நாம் தான் அப்படி நினைத்தோமே தவிர இயக்குனர் அதைப் பற்றிச் சிறிதும் சிந்திக்கவில்லை.
கேஜ் த்ரில்லர் என்றால்..!
மகிழ்ச்சியாக, ஆனந்தமாக, குதூகலமாக இருக்கும் ஒரு இளம்பெண் அல்லது சில பெண்கள் திட்டமிட்டுக் கடத்தப்பட்டு, தனியாக ஒரு இடத்தில் அல்லது தனியறையில் வைக்கப்படுவதும், அவர்களுக்கே தெரியாமல் அல்லது எதுவும் செய்ய இயலாத நிலையில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாவது பலியாவது தான் ‘கேஜ் த்ரில்லர்’களின் அடிப்படை அம்சம்.
அப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்ட கதை மாந்தர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பதை பதைபதைக்கும் காட்சியமைப்புகளோடு சொல்வதே ‘கேஜ் த்ரில்லர்’ படங்களின் பலம்.
’வெப்’பிலும் கூட மூன்று இளம்பெண்கள் கடத்தப்பட்டுச் சிறை வைக்கப்படுவது வரை, அப்படியொரு எண்ணமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், கடத்தப்பட்ட மூவரையும் மீட்டு வர பெண் கமிஷனரே நேரடியாகக் களமிறங்கிய காட்சியே ‘இது சீரியசான கதையா..’ என்ற ஐயத்தை உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்துவரும் காட்சிகளில் அது பலப்பட்டது. அதற்கேற்ப, கிளைமேக்ஸ் திருப்பமும் அமைக்கப்பட்டுள்ளது.
வெறுமனே இப்படத்தின் முடிவை மட்டும் பார்க்கும் ஒருவருக்கு, இதில் குறைகள் இருப்பதாகத் தோன்றாது. ஆரம்பம் முதல் இறுதிவரை படம் பார்ப்பவர்களால் மட்டுமே, அந்த திருப்பத்தில் இருக்கும் ஏமாற்றுத்தனத்தை உணர முடியும். இரண்டாம் முறை படம் பார்க்கும்போது, ‘இந்த கதைக்கு இதெல்லாம் தேவையா’ என்றெண்ணும் தருணங்கள் அதிகமாகும். அதுவே ‘வெப்’ படத்தின் மாபெரும் பலவீனம்.
புதுமுக இயக்குனர் ஹாரூண், இன்றைய இளைய தலைமுறையினர் போதைப்பொருட்களில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிடக் கூடாது என்ற மெசேஜ் சொல்ல ஆசைப்பட்டிருக்கிறார். அது நல்ல விஷயம். ஆனால், அதனைத் திரைக்கதையாக்கிக் காட்சிப்படுத்திய விதத்தைக் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், ஆபாசக் காட்சிகள் நிரம்பிய படங்களும் கூட இப்படித்தான் ஏதோவொரு நீதியைச் சொல்வதோடு முடிவடையும்.
திசைமாறும் நட்டி
‘சதுரங்க வேட்டை’ போன்ற படங்கள் ஒரு நடிகரது வாழ்வில் எப்போதாவதுதான் கிடைக்கும். அது நட்டிக்கு வாய்த்தது; அது போன்ற வாய்ப்புகளை மட்டுமே பின்தொடர்வேன் என்றிருக்காமல், சில படங்களில் நடிக்க முடிவெடுத்ததுதான் அவரது நடிப்பு சரிவைச் சந்திக்கக் காரணம். அதையும் மீறி நம்ம வீட்டுப் பிள்ளை, கர்ணன் போன்ற படங்களில் மிடுக்கான பாத்திரங்களில் நடித்தார். ஆனால், ’வெப்’ போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தால் நிச்சயம் அந்தப் பெருமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. அதனால், நட்டி இனிமேலாவது திசை மாறாமல் இருக்க வேண்டும்.
முதன்மை வேடங்களில் நடித்த ஷில்பா மஞ்சுநாத், சுப பிரியா, சாஷ்வி பாலா மட்டுமல்லாமல், முரளி ராதாகிருஷ்ணன் ஜோடியாக வரும் அனன்யா மணியும் கூட ‘ஸ்கோர்’ செய்யும் வாய்ப்பைக் கொண்டது ‘வெப்’ கதை. ஆனால், அதற்கேற்ற காட்சிகள் திரைக்கதையில் இல்லை. அதனால், இந்த நான்கு பெண்களுமே கவர்ச்சிப் பதுமைகளாகத்தான் திரையில் தெரிகின்றனர். இப்படியொரு கதைக்கு, அது நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும். நட்டியின் உதவியாளராக வரும் பெண் கூட, சில கோணங்களில் ‘ஆபாசமாக’ தெரிகிறார். நிச்சயமாக, அது சரி செய்திருக்கப்பட வேண்டும்.
நட்டியின் தங்கையாக வருபவருக்கு களையான முகம். நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். மூன்று நாயகிகளின் குடும்பத்தினர் என்று சிலர் திரையில் வந்து போயிருக்கின்றனர். அவர்களையும் சேர்த்தால், இத்திரைக்கதையில் கிட்டத்தட்ட ஒரு டஜன் கலைஞர்களே முகம் காட்டியிருக்கின்றனர். அவர்கள் தவிர்த்து பப், அலுவலகப் பின்னணியில் சில ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் தென்படுகின்றனர். மற்றபடி, இப்படம் குறைவான லொகேஷன்களில், குறைவான கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ஜோசப், படத்தொகுப்பாளர் சுதர்சன், கலை இயக்குனர் அருண் சங்கர் துரை ஆகியோரின் உழைப்பு இயக்குனரின் பார்வையைப் பூர்த்தி செய்திருக்கிறது. அண்ணன் தங்கை பாடல் தவிர, படத்தில் வேறெங்கும் கார்த்திக்ராஜாவைக் காண முடியவில்லை. அவர்தான் இதன் இசையமைப்பாளர் என்று சொல்லும்போது, மனம் நம்ப மறுக்கிறது.
இன்று, ஐடி துறையில் பணியாற்றும் பெண்கள் என்னவெல்லாம் போதை மருந்துகளை உட்கொள்கின்றனர் என்று திரையில் காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு ஆவணப் படம் அதனைச் செய்துவிடும். அதைத் தாண்டி, அவர்களது பணியிலுள்ள சிரமங்களை, அவர்களது தினசரி வாழ்க்கையின் துயரங்களை, அவர்கள் எதிர்கொள்ளும் இயல்பான மகிழ்ச்சியை இக்கதையில் பதிவு செய்திருக்க வேண்டும். அதனைச் செய்யாமல் விட்டதால், அந்த மூன்று பெண்களும் யாரோ ஒருவரால் கடத்தப்பட்டதை அறியும் நமக்கு எவ்விதப் பதற்றமும் ஏற்படவில்லை. அது மட்டுமல்லாமல், ‘இதெல்லாமே ஏன் இவ்வளவு அமெச்சூராக இருக்கிறது’ என்ற எண்ணம் தியேட்டரில் அமர்ந்திருக்கும்போதே நம்முள் எழுகிறது. அதுவே, இப்படத்தைப் பலவீனமானதாக மாற்றிவிடுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘பஞ்சராக்ஷரம்’ படத்தின் ஒருபகுதி, இதே போன்று ‘கேஜ் த்ரில்லர்’ பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஏன், பாலுமகேந்திராவின் ‘ஜூலி கணபதி’ போன்ற படங்களும் கூட தமிழில் அதனைக் காட்ட முயன்றிருக்கின்றன.
அப்படியிருக்க, நாடக பாணியில் ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்ப பார்க்கிறோமோ என்ற அயர்வை ஏற்படுத்துகின்றன ‘வெப்’ காட்சிகள். இதற்குப் பதிலாக, ஏதேனும் ஒரு சிசிடிவி பதிவை தேமேவென பார்த்துக் கொண்டிருக்கலாம்.
அந்த விபரீத எண்ணம் தோன்றும்போதுதான், மூன்று நாயகிகளை விடவும் பெருஞ்சிக்கலில் மாட்டியது நாம் தான் என்று உறைக்கிறது. அதுவே, ‘யாருக்காக இந்த வலைப்பின்னல்’ என்ற கேள்வியை எழுப்புகிறது.
மாவீரன், டிடி ரிட்டர்ன்ஸ் வெற்றிகளுக்கு நடுவே, ஜெயிலர் வரவுக்கு முன்பாகத் திரைக்கு வந்திருக்கிறது ‘வெப்’. மொத்தமாக ஆறு நாட்கள் திரையரங்கில் ஓடினால் போதும் என்ற முடிவுடனே களம் இறங்கியிருக்கிறது இப்படக்குழு;
அப்படியிருக்க, நம்மால் சில நிமிடங்கள் கூட தியேட்டருக்குள் இருக்கமுடியாமல் அவஸ்தைப்படுவதில் அதிர்ச்சி அடைவதற்கோ, ஆச்சர்யப்படுவதற்கோ எதுவுமில்லை..!
உதய் பாடகலிங்கம்
“தமிழகத்தின் கலாச்சாரம் மாணவர்களை சிறந்தவர்களாக்கும்” – திரவுபதி முர்மு