தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி படம் நாளை (மே 5) வெளியாவதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. அதில் இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக ஹிஜாப் அணிந்த ஒரு பெண் பேசுவது போல் காட்சி இடம்பெற்றது. இதற்கு நாடு முழுவதும் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையே இந்த படத்தை தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனு தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து மனுவையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது என தொடரப்பட்ட மனுவையும், தாமதமாக விசாரணைக்கு வந்துள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து பலத்த எதிர்ப்புக்கிடையே உலகம் முழுவதும் கேரளா ஸ்டோரி திரைப்படம் திட்டமிட்டபடி நாளை(மே 5) இந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இதனையொட்டி தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை வெளியாகவுள்ள திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்க அனைத்து காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பதட்டமான இடங்களில் அசம்பாவிதங்களைத் தடுக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை அப்புறப்படுத்த வேண்டும்.சமூக வலைதளங்களில் சட்ட ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
’ரொனோல்டோ மாதிரி தப்பு செய்யாதே’: மெஸ்ஸியை எச்சரித்த ரிவால்டோ