சொத்து விவகாரம்: சிவாஜி மகள்களின் மனுக்கள் தள்ளுபடி!

சினிமா

சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்குத் தடை விதிக்க கோரி மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் பங்கு கொடுக்கவில்லை என்று நடிகர் பிரபு, ராம்குமார் ஆகியோருக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

சிவாஜியின் மகள்களான சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் தங்களது சகோதரர்கள் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

சகோதரர்கள் சொத்துகளைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதால், சொத்துக்களை தங்களுக்குப் பிரித்து வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், சாந்தி, மற்றும் ராஜ்வி சார்பில் கூடுதல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் சகோதரர்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதால், பிரதான வழக்கு விசாரணை முடியும் வரை இதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த கூடுதல் மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், “அனைத்து சொத்துக்களிலும் தங்களுக்குச் சமபங்கு உள்ளது. சாந்தி திரையரங்கு பங்கு மற்றும் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அக்‍ஷயா ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் ராம்குமார், பிரபு ஈடுபடுகின்றனர்.

பிரதான வழக்கு விசாரித்து முடிக்கும் வரை சொத்துக்கள் விற்பனைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

நடிகர் ராம்குமார், பிரபு தரப்பில், “சாந்தி திரையரங்கம் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர், சதீஸ் பாரசரன் ஆஜராகி வாதாடினார்.

அவர், “சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010ம் ஆண்டிலேயே கைமாறி விட்டது. கட்டுமான பணிகள் முடித்த பிறகும், அவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாகக் குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் உள்ளது” என்று தெரிவித்தார்.

கூடுதல் மனுக்கள் மீதான அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இன்று (அக்டோபர் 17) உத்தரவிட்டார்.

பிரியா

நெருங்கும் தேர்தல்: குஜராத்தில் சமையல், வாகன எரிவாயு வரிக் குறைப்பு!

பிக்பாஸ் வீட்டின் கேப்டனான ஜி.பி முத்து

+1
1
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *