தனுஷுக்கு செக் வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம் : கார்த்தி கண்டனம்!

சினிமா

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று (ஜூலை 29) வெளியிட்டுள்ள அறிக்கையில்  “நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இதுகுறித்து செய்தியாளர்களிடம் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி பேசியதாவது “திரைத்துறையில் தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் நல்ல உடன்பாட்டுடன் தொடர்ந்து நல்ல முறையில் பணியாற்றி வருகிறோம். நடிகர்கள் சார்ந்த பிரச்சினைகளும், தயாரிப்பாளர்கள் சார்ந்த பிரச்சினைகளும் இருதரப்பும் கலந்து பேசி குழுக்கள் அமைத்துதான் நிர்வாக முடிவுகள் எடுக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனால் தயாரிப்பாளர் சங்கம் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். புகார் மற்றும் வேலைநிறுத்தம் தொடர்பாக அவர்களாகவே ஒரு முடிவை எடுத்துள்ளனர். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது.

தனுஷ் தொடர்பாக இதுவரை எங்களுக்கு எழுத்துபூர்வமாக எந்தவொரு புகாரும் வராத நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று அவர்கள் கூறியிருப்பது மிக தவறானது. அதேபோல படப்பிடிப்பை நிறுத்தப் போவதாக அவர்கள் கூறியிருப்பது என்பது பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய விஷயம். அதை எப்படி அவர்களே முடிவெடுக்க முடியும் என்று தெரியவில்லை” இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

1. 2007 ஆம் ஆண்டு இரு சங்கங்களுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தற்கால சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்கள் மட்டுமே செய்து அதை இயன்றவரையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

21.06.2.24 வரையிலான இருதரப்பு புகார்கள் மீதும் விசாரணை நடந்து தீர்வு காணப்பட்ட நிலையில் அன்றைய தினம் அளிக்கப்பட்ட புதிய புகார்கள் தொடர்பான விசாரணை மேற்கொள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் ஒப்புக் கொண்டது. அதற்குரிய ஆவண ஆதாரங்களை விரைவில் வழங்குவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது

2. இனி எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இன்றி தயாரிப்பாளர்கள் நடிகர்கள படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாமென்ற முடிவிற்கு பரஸ்பர ஒப்புதல் வழங்கப்பட்டது

3. ஒப்பந்த நகல் மற்றும் ஆவண ஆதாரங்கள் இல்லாமல் புகார்களை விசாரிக்க இயலாது என்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கருத்தை தயாரிப்பாளர்கள் சங்கமும் ஏற்றுக் கொண்டது.

4. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு துணை நடிகர்கள், சிறப்பு நடிகர்கள், ஜிம்பாய்ஸ், எண்ணிக்கையில் 50% வாய்ப்புக்களை திரைப்படங்களில் வழங்கும் உடன்படிக்கையை தவறாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தென்னிந்திய நடிகர் சங்க தரப்பு கோரிக்கை தயாரிப்பாளர்கள் சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

5. இந்நிலையில் 29.07.2024 ஆம் தேதியிட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பத்திரிகை செய்தியில் நடிகர்கள் தொடர்பான பொது தீர்மானம் மற்றும் தனுஷ் குறித்த தனித் தீர்மானம் தொடர்பான தகவல் எங்களுக்கு அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.

6. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நடிகர் தனுஷ் மீது இது நாள் வரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்பதையும், அவர் மீது எந்தப்புகாரும் நிலுவையில் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

7. இருதரப்பும் கலந்துரையாடி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டிய நடைமுறை சிக்கல்களுக்கு எங்களிடம் கலந்தாலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றி அதை பத்திரிகை செய்தியாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டு இருப்பதை தொன்மையான, பாரம்பரியமிக்க தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டிக்கிறது.

8. திரைத்துறையின் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண முயற்சி எடுக்கும் போது திரைப்படங்களில் பிரதான பங்காற்றும் எங்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தை கலந்தாலோசிக்காமல் ஆயிரக்கணக்கான நடிகர்கள், மற்றும் தொழிலாளர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் விதமாக 01.11.2024 முதல் படப்பிடிப்புகளை முழுமையாக நிறுத்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது பெரும் கண்டனத்திற்குரியது.

9. அனைத்து தரப்பு திரை தொழிலாளிகளையும் பாதிக்கும் இந்த தன்னிச்சையான அவசர தீர்மானத்தை உடனடியாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்ப மெற வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் உறுதியாக வலியுறுத்துகிறது.

10. 29.07.2024 பத்திரிகை செய்தியில் குறிப்பிட்ட மற்ற தீர்மானங்களையும் மறுபரிசீலனை செய்து நட்புறவு பாதிக்காமல் சுமுகமான தீர்வு காண தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வரும் என எதிர்பார்க்கிறோம்

இது தொடர்பாக விரைவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

தங்கம், வெள்ளி விலை தொடர் சரிவு… இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

வால்பாறை நிலச்சரிவு : உறங்கி கொண்டிருந்த பாட்டி, பேத்தி பலி!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0