தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்த முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்கள், பாரதிராஜா தலைமையில் தொடங்கிய அமைப்புதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அதனை சம்பந்தபட்ட மத்திய, மாநில அரசின் இலாகாக்களுக்கு அனுப்பிவைக்க இருப்பதாகவும் அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. தற்போது தமிழகத்தில் வார நாட்களில் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்றரை மணிவரை நான்கு காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என்கிற விதி நடைமுறையில் உள்ளது. இது ஐம்பது வருடங்களுக்கு முன்பு இயற்றப் பெற்ற ஒரு விதி (Rule) என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம். காலமாற்றங்கள் நிகழ்ந்த பின்பும் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்றரை மணிவரை ஒரு தனித் திரையரங்கில் நான்கு காட்சி மட்டுமே திரையிடப்பட வேண்டும் என்கிற விதி காலாவதியான ஒன்றாக இருப்பதனால், குறைந்தபட்சம் ஐந்து காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கினால் அதன் மூலம், மேலும் ஒரு காட்சி பல திரைப்படங்களுக்கும், பார்வையாளர்களுக்கும் கிடைக்கும். திரையரங்குகளும் அதன் மூலம் பயனடையும். இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று இந்த பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
2. சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில் ஒரு திரைப்பட நகர் (Film City) உருவாக்கவும், தரமணியில் ஏற்கனவே இயங்கி வரும் திரைப்பட நகரில் கூடுதல் தளங்களை ஏற்படுத்தித் தருகிறோம் என்கிற அறிவிப்பும் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்புக்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவிக்கும் நேரத்தில் அத்தகைய புதிய திரைப்பட நகர் மற்றும் தரமணியில் கூடுதல் தளங்கள் அமைக்கும் பணி கூடிய விரைவில் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்த பொதுக் குழு சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.
3. சென்னையில் ஐம்பதாயிரம் பேர் அமரும் வகையில் விளையாட்டரங்கம் உள்ளது. ஆனால், ஒரு பெரிய கலை நிகழ்வு நடக்கும் வகையில் கலையரங்கம் (Auditorium) சென்னையில் இல்லாதது சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறைகளுக்கு சிக்கல்களைத் தருகிறது. குறைந்தபட்சம் இருபத்தைந்தாயிரம் நபர்கள் அமரும் வகையில் ஒரு கலையரங்கம் தமிழக அரசால் அமைக்கப் பெற்றால் இசை வெளியீட்டு விழா, கலை நிகழ்ச்சிகள், இசை கச்சேரிகள் மற்றும் இதர சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறை சார்ந்த நிகழ்வுகள் நடத்தவும் எளிதாக அமையும். அதற்கான வழி வகைகளை ஆய்வு செய்து, விரைவில் அத்தகைய ஒரு கலையரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்யுமாறு தமிழக அரசை, இந்த பொதுக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
4. தமிழ்நாட்டில் ஆயிரத்து நூற்றைம்பது திரையரங்கங்கள் உள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் ஒரு வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர ஒருங்கிணைக்கப்பட்ட மென் பொருளைக் கொண்டு ஒரு மத்திய பாக்ஸ்-ஆஃபிஸ் கலெக்ஷன் டிராக்கிங் சிஸ்டம் (Centralized Box Office Tracking Software System) கொண்டுவரப்பட வேண்டுமென்று முதலிலிருந்தே நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு வரத் தமிழக அரசு ஆயத்தம் செய்து தரக் கேட்டுக் கொள்கிறோம்.
5. 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை தமிழக அரசிடம் இருந்து திரைத்துறைக்கான விருதும், சிறு பட்ஜெட் படங்களுக்கான மானியமும் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையில் ஏழு வருடங்களுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகளும், மானியங்களும் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருவதை இந்த பொதுக் குழு பாராட்டுகிறது.
அதற்கான தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் திரைப்படங்களை பார்த்து வருகிறார்கள் என்றும் அறிகிறோம். அந்த தேர்வுகள் வெகு விரைவில் முடிவு செய்யப்பட்டு ஏழு வருடங்களுக்கான தமிழக அரசின் விருதுகளும், சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கான மானியங்களும் வெகு விரைவில் வழங்க வேண்டுமென தமிழக அரசை இந்த பொதுக் குழு வேண்டி கேட்டுக் கொள்கிறது.
6. தமிழ்நாட்டில் சிங்கிள் விண்டோ கிளியரன்ஸ் (Single Window Clearance) மூலம் திரைப்பட ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கவும், சென்னை நகரில் பகல் நேரத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வேண்டி, ஒரு கோரிக்கையை சில மாதங்களுக்கு முன்பு நமது சங்கம் சார்பில் வைக்கப்பட்டது. அதற்காக, சென்னை நகரில் எந்தெந்த தெருக்கள் பகல் நேரத்தில் படப்பிடிப்புக்கு உகந்தது என்று ஆய்வு செய்யப்பட்டு அதன் விபரங்களும் அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அனுமதியை விரைவில் தருமாறு தமிழக அரசை இந்த பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
7. தற்போது திரைப்படத் துறைக்கென்று உள்ள தணிக்கைக் குழுவின் செயல் முறைகள் மிகவும் கடினமாக உள்ளன. இங்கே ஒரு படம் சென்சார் சான்றிதழுக்காகத் திரையிடப்பட்ட பின், அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளின் பட்டியல் மும்பை அலுவலகத்திற்குச் சென்று அங்கு ஒப்புதல் பெறப்பட்டு, மீண்டும் சென்னையில் அதன் ஒப்புதல் சரி பார்க்கப்பட்டு அதற்கான தணிக்கைச் சான்றிதழ் மறுமுறை மும்பை அலுவலகத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே வழங்கப்படுகிறது. இதற்கான கால நேரம் குறைந்தது ஐந்து வேலை நாட்கள் ஆகிறது. இதன் வழிமுறையைச் சுருக்கி, மத்திய அரசு சென்னையில் தணிக்கைக்காகத் திரையிடப்படும் படங்களுக்கான நீக்கப்பட்ட காட்சிகளை ஒப்புதல், சரி பார்ப்பு போன்ற வழிமுறைகளை இங்கே உள்ள தணிக்கைக் குழுவே செய்து முடித்து அதற்கான தணிக்கைச் சான்றிதழ்களை சென்னையிலேயே வழங்கினால் இரண்டு நாட்களுக்குள் தணிக்கைச் சான்றிதழை வழங்க முடியும்.
இதற்காக தற்போது உள்ள விதிமுறையை மத்திய அரசு மாற்றியமைத்து, சென்னையில் உள்ள பிராந்திய தணிக்கை அலுவலகமே அனைத்து முடிவுகளையும் மேற்கொண்டு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிமுறைகளை உண்டாக்குமாறு மத்திய அரசினை இந்த பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
8. சாட்டிலைட் மற்றும் ஓடிடி நிறுவனங்கள், நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படங்களின் அறிவிப்பு வெளியான உடனே அவற்றை வாங்குவதற்குக் காட்டும் ஆர்வத்தினை சிறிய பட்ஜெட் படங்களுக்கும் காட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதன் மூலம் பல சிறிய பட்ஜெட் திரைபடங்கள் பலன் அடைய முடியும். சிறிய பட்ஜெட்டில் நல்ல படங்களை வாங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் நிதி இல்லையென்றாலும், குறைந்தபட்சம் PAY PER VIEW முறையில் வெளியிட்டு வருமானத்தை ஈட்டி தந்தால் கூட அது தயாரிப்பாளர்களுக்கும், சிறிய பட்ஜெட்டில் வெளிவரும் நல்ல படங்களுக்கும் காட்டும் ஆதரவாக இருக்கும். இதை அனைத்து சாட்டிலைட் மற்றும் ஓடிடி நிறுவனங்களும் செயல்படுத்துமாறு இந்த பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்ட இந்த கோரிக்கைகளை மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் மனுவாக அனுப்ப உள்ளோம் என்பதனை இந்த பொதுக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!
உக்ரைன் மக்களுக்காக 180 நாடுகளைச் சேர்ந்த மக்கள் பிரார்த்தனை!