தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று(30.4.2023 ) சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில், தலைவர், துணை தலைவர்கள், செயலாளர்கள் பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 33 பேரை தயாரிப்பாளர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதற்காக 98 தயாரிப்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பிரதான அணிகளாக தற்போதைய தலைவர் முரளி ராமசாமி, தற்போதைய செயலாளர் மன்னன் தலைமையில் இரண்டு அணிகள் உள்ளன. சிறுபட தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து ஓயாத அலைகள் அணி என்கிற பெயரில் தலைவர் பதவியை தவிர்த்து அனைத்து பதவிகளுக்கும் போட்டியிடுகின்றனர்.
இந்த மூன்று அணிகளை தவிர்த்து செயலாளர், துணைசெயலாளர், துணை தலைவர்கள், பொருளாளர் பதவிக்கு சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். பிரதான அணி வேட்பாளர்களின் வெற்றிதோல்வியை கணிக்க முடியாத அளவுக்கு இவர்களின் ஆதிக்கம் உள்ளது.
இறுதிநாளான நேற்றையதினம் சென்னையில் முரளிராமசாமி, மற்றும் மன்னன் தலைமையிலான இரண்டு அணிகளும் வாக்காளர்களுக்கு விருந்தும், அன்பளிப்பும் வழங்குவதற்கான கூட்டத்தை நடத்தினார்கள்.
கோயம்பேடு ராதா பார்க் ஹோட்டலில் வாக்காளர்களை சந்தித்த முரளி ராமசாமி அணி ஒரு வாக்காளருக்கு 25,000ம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. (லைகா தமிழ்குமரன்: 10,000+பைவ்ஸ்டார் கதிரேசன்: 5000+ அர்ச்சனா கல்பாத்தி: 5000+ சந்திரபிரகாஷ் ஜெயின் : 5000).
இதனை பெற்றுக் கொண்ட வாக்காளர்கள் எனது வாக்கு உங்கள் அணிக்கு தான் என உறுதி கூறிவிட்டு ஹோட்டலுக்கு வெளியில் இருக்கும் மெட்ரோ ரயில் ஸ்டேஷனில் இருந்து ரயில் ஏறி அடுத்த மூன்றாவது நிறுத்தமான ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ஸ்டேஷன் எதிரில் உள்ள ஹில்ட்டன் நட்சத்திர ஹோட்டலில் மன்னன் தலைமையிலான அணியினர் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அங்கு ஒட்டுமொத்த அணியின் வேட்பாளர்கள் சார்பில் ஒரு வாக்காளருக்கு 20.000ம் ரூபாய் வழங்கியதையும் பெற்றுக்கொண்டு எனது வாக்கு உங்களுக்குதான் என வாக்குறுதியை வழங்கிய கொடுமை நேற்று மாலை 5 மணி தொடங்கி இரவு 10 மணிவரை நடைபெற்றது.
பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் சிங்காரவடிவேலன் கடந்த ஒரு வார காலமாக வாக்காளர்களை தனித்தனியாக சந்தித்து 5000ம் ரூபாய் அன்பளிப்பு வழங்கியுள்ளார். இது மட்டுமின்றி ஓயாத அலைகள் அணி சார்பில் நாட்டு சர்க்கரை வழங்கியுள்ளனர்.
பணம் வாங்காத, வேண்டாம் என்று மறுத்த வாக்காளர்களுக்கு முரளி ராமசாமி அணி சார்பில் மறுக்க முடியாத வகையில் சென்டிமெண்டாக வெள்ளியில் செய்யப்பட்ட காமாட்சி விளக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி இணை செயலாளர் பதவிக்கு போட்டியிடும் மணிகண்டன், ஜெமினி ராகவா இருவரும் வாக்காளர்களுக்கு ரூ 5000ம், கை கடிகாரம் போன்ற பொருட்களை வழங்கியுள்ளனர்.
1409 வாக்காளர்களில் சுமார் 800 வாக்காளர்களுக்கு இந்த அன்பளிப்பு தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வாக்குக்கு சுமார் 60,000ம் வரை இந்த தேர்தலில் வேட்பாளர்களால் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை, கோவை, சேலம் பகுதிகளில் இருக்கும் 286 வாக்காளர்களுக்கு கோவை, மதுரையில் இருந்து விமான டிக்கெட், சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
286 வாக்காளர்களை அழைத்து வர மட்டும் சுமார் 10 லட்ச ரூபாய் இரண்டு அணிகளாலும் செலவிடப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் என்கிற இடத்தில் இருக்கும் ஒரு வாக்காளர் சென்னை வந்து வாக்களிக்க வந்து செல்ல விமான டிக்கட் மட்டும் 90,000 ரூபாய் செலவு செய்து வரவழைத்திருக்கிறார்கள்.
இதையெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொண்ட மூத்த தயாரிப்பாளர் ஒருவர், ”இது அப்படி ஒரு முக்கியமான தேர்தல் இல்லை. இன்று நடைபெறும் தேர்தல். இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றிபெற்று பதவிக்கு வந்தாலும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆக்கபூர்வமான திட்டங்களோ, அல்லது ஆளுமைமிக்க வேட்பாளர்களோ இல்லை.
சங்கத்தின் துணை தலைவர் பதவியில் வெற்றி பெற அரசியல்வாதியாக இருந்த லைகா தமிழ் குமரன் சுமார் 1.50 கோடி ரூபாய், அர்ச்சனா கல்பாத்தி 1 கோடி ரூபாய், பொருளாளர் பதவிக்காக சந்திர பிரகாஷ் ஜெயின் சுமார் 30 லட்ச ரூபாய், செயலாளர் பதவிக்காக கதிரேசன் சுமார் 50 லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். மன்னன் தலைமையிலான அணியினர் கூட்டாக சுமார் 2 கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்கள்
இவர்கள் வெற்றிபெற்று பொறுப்புக்கு வந்தால் பணம் வாங்கிகொண்டு வாக்களித்த தயாரிப்பாளர்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக எப்படி உரிமையுடன் அணுக முடியும், கேள்வி கேட்க முடியும்?, வெற்றிபெற்றவர்கள் அரசியல்வாதிகளை போன்று தங்கள் நலனுக்காக மட்டுமே பதவியை பயன்படுத்துவார்கள்.
நேற்று வரை தங்களது வெற்றி உறுதி என நம்பிக்கையுடன் இருந்த இரண்டு அணி, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள், இரண்டு அணியிடமும் வாக்காளர்கள் அன்பளிப்பெற்றுக்கொண்டு வாக்குறுதி வழங்கியதை கண்டு உச்சகட்ட அதிர்ச்சி, கலக்கத்தில் இன்று காலை 9 மணிமுதல் வாக்குசாவடியில் கை கூப்பி மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்கள். உச்சகட்ட அதிர்ச்சி, கலக்கத்தில் இருக்கும் வேட்பாளர்களுக்கு 60,000ம் ரூபாய் வரை அன்பளிப்பு பெற்ற வாக்காளர்களின் ஜனநாயக தீர்ப்பு இன்று நள்ளிரவுக்குள் தெரிந்துவிடும்” என்றார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் முதல் நபராக வந்து தனது வாக்கினை பதிவு செய்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை பரபரப்பாக்கியிருக்கிறார். இன்று பிற்பகல் நடிகர் கமல்ஹாசன் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.
-அம்பலவாணன்
அதிமுக பெரிய கட்சிதான்…ஆனால் : அண்ணாமலை
பிடிஆரின் ஒரிஜினல் ஆடியோவை ஒப்படைக்க தயார்: அண்ணாமலை