பிரபல தயாரிப்பாளர் மறைவு: திரையுலகினர் இரங்கல்!

சினிமா

லெட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளிதரன் நேற்று காலமானார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பு நிறுவனமாக படங்களை தயாரித்து வெளியிட்ட நிறுவனங்களில் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், முரளிதரன், சுவாமிநாதன், மற்றும் வேணுகோபால் ஆகிய மூவரால் துவங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வந்த தயாரிப்பு நிறுவனம் ஆகும். இவர்களில் சுவாமிநாதன் கொரோனா பொது முடக்க காலத்தில் காலமானார்.

மற்றொரு தயாரிப்பாளரான முரளிதரன், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், நேற்று (டிசம்பர் 1) 1:30 மணியளவில் தன்னுடைய சொந்த ஊரான கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோயிலில் காலமானார்.

திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சிறிய அளவில் பைனான்ஸ் செய்துவந்த முரளிதரன் நண்பர்களுடன் இணைந்து கடந்த 1994 ஆம் ஆண்டு சரத்குமார் மற்றும் சிவரஞ்சனி நடிப்பில் வெளியான ‘அரண்மனை காவலன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவிலும், நடிகர்களின் திரையுலக வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத படங்களை தயாரித்த பெருமைக்குரியது லெட்சுமி மூவி மேக்கர்ஸ்.

கமலஹாசன் நடித்த ’அன்பே சிவம்’, விஜயகாந்த் நடிப்பில் ’வீரம் வெளஞ்ச மண்ணு’, சரத்குமார் நடிப்பில் ’மிஸ்டர் மெட்ராஸ்’, ’அரண்மனை காவலன்’, கார்த்திக் நடித்த ’கோகுலத்தில் சீதை’, விஜய் கதாநாயகனாக நடித்த ’ப்ரியமுடன்’, ’பகவதி’, அஜித்குமார் நடித்த ’உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, சிலம்பரசன் நடித்த ’சிலம்பாட்டம்’, தனுஷ் நடித்த ’புதுப்பேட்டை’ ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்துள்ளது.

மறைந்த முரளிதரன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், பொருளாளராகவும் தேர்தல் மூலம் வெற்றிபெற்று பணியாற்றியுள்ளார்.

படங்கள் தயாரிப்பை தயாரிப்பாளர்கள் தீர்மானிக்கும் நிலைமாறி கதாநாயகர்கள் எல்லாவற்றிலும் தலையிட்டு அவர்கள் கூறும், சிபாரிசு செய்யும் இயக்குநர்கள், நாயகிகளை வைத்து படம் தயாரிப்பது என்கிற சூழல் தமிழ் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோது படங்கள் தயாரிப்பதை லெட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுத்தியது.

இவர்கள் தயாரிப்பில் கடைசியாக கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ’புதுப்பேட்டை’ படம்தான் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது.

இதை தொடர்ந்து கதாநாயகர்கள் விருப்பப்படி தயாரிக்கப்பட்ட சிலம்பாட்டம், ஆட்ட நாயகன், மற்றும் சகலகலா வல்லவன் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தது.

இதையடுத்து, 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த நிறுவனம் சார்பில் எந்த படங்களும் தயாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் மாரடைப்பால் காலமான, லெட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான கே.முரளிதரனுக்கு, திரைபிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வரும் நிலையில்,

நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும் இயக்குனருமான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”திரையுலகில் அனைத்து தயாரிப்பாளர்களையும் அரவணைத்துச் செல்லும் நல்லுள்ளம் கொண்டவர் எல்.எம்.எம்.முரளிதரன்.

நினைத்து மகிழக்கூடிய ‘அன்பே சிவம்’, ‘உன்னை நினைத்து’ , ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘கோகுலத்தில் சீதை’ போன்ற பல சிறந்த திரைப்படங்களைத் தயாரித்தவர்.

மிகப் பெரிய நடிகர்களின் படங்களைத் தயாரித்ததன் மூலம் நிறைய குடும்பங்களுக்கு ஆதரவளித்தவர். யார் மனதையும் காயப்படுத்தாத மெல்லிய மனதுக்குச் சொந்தக்காரர். அவரின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு திரையுலகம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

ஒரு நல்ல தயாரிப்பாளரை இழந்துள்ளோம். அவரது இழப்பு குடும்பத்தினருக்கும், திரையுலகிற்கும் பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் சங்கத்தின் சார்பாக ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ”பல வெற்றிப்படங்களைத் தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் கே.முரளிதரன் மறைந்துவிட்டார். அன்பே சிவம் நாட்களை நினைத்துக்கொள்கிறேன். அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.

இராமானுஜம்

லைகர் பட சிக்கல்.. நொந்து போன பெண்களின் கனவுக் கண்ணன் விஜய் தேவரகொண்டா

காமெடியன்ஸ்லாம் தூரமா போங்க”: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிரெய்லர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *