அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உடனான நேர்காணலின் போது, ”22 வருட தொழில் வாழ்க்கையில் சக ஆண் நடிகருக்கு இணையான ஊதியம் இந்த ஆண்டு தான் பெற்றேன்” என்று பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்று அனைவரின் கண்களை தன் பக்கம் திருப்பியவர் பிரியங்கா சோப்ரா. 2002இல் தமிழில் விஜய் நடித்த ‘தமிழன்’ திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல இந்திப் படங்கள் மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகையானார்.
பின்னர் குவான்டிகோ என்ற அமெரிக்க டி.வி தொடரில் நடித்து உலக அளவில் பிரபலமான அவர் ஹாலிவுட்டில் கால் பதித்தார்.
பே வாட்ச், எ கிட் லைக் ஜேக் , தி மேட்ரிக்ஸ் போன்ற படங்கள் மூலம் ஹாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்து வெற்றிகரமாக வலம் வருகிறார் .
இதற்கிடையே கடந்த 2018ஆம் ஆண்டு, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஹாலிவுட் பாடகரும், நடிகருமான நிக் ஜோனாசை காதல் திருமணம் செய்த பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தற்போது அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸிடம் நடத்திய நேர்காணல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஜனநாயக தேசிய குழு மகளிர் தலைமை மன்றத்துக்கு சென்று அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை நேர்காணல் செய்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
அப்போது கமலா ஹாரிஸுடன் ஆண், பெண் இடையேயான சம்பள இடைவெளி, ஆணாதிக்கம், அமெரிக்காவின் துப்பாக்கிச் சட்டங்கள், கருக்கலைப்பு சட்டங்கள் உட்பட பல்வேறு முக்கிய கேள்விகள் குறித்து பிரியங்கா விவாதித்தார்.
22 வருடத்தில் இதுவே முதன்முறை!
இந்த உரையாடலின் போது, பிரியங்காவின் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்த கமலா ஹாரிஸ், பாலின பாகுபாடு குறித்து அவரிடமே ஒரு கேள்வி கேட்டார்.
இதற்கு பதிலளித்த பிரியங்கா, தனது 22 வருட தொழில் வாழ்க்கையில், இந்த ஆண்டு தான் முதல் முறையாக தனது ஆண் சக நடிகருக்கு இணையான ஊதியம் பெற்றதாக தெரிவித்தார்.
அவர் இந்திய சினிமாவில் பல ஆண்டுகள் முன்னணி நடிகையாக இருந்த நிலையில், தற்போது ஹாலிவுட்டில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பள இடைவெளி குறித்து அவர் கூறிய கருத்து, இந்திய திரையுலகை வைத்து தான் கூறியதாக கூறப்படுகிறது.
பெண்களின் வாக்கு முக்கியம்!
அத்துடன் ஜனநாயக நாட்டில் தேர்தலின் முக்கியத்துவத்தை குறித்தும் பிரியங்கா பேசினார்.
அவர், ”பெண்கள் தங்கள் உரிமைகளை உறுதி செய்வதில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அமெரிக்காவில் நான் வாக்களிக்க முடியாது. எனினும் என் கணவரால் மற்றும் என் மகளால் முடியும்” என்று உரையாடலின் போது தெரிவித்தார்.
பின்னர் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் “ஆரம்பத்திலிருந்தே, உலகம் பெண்களின் சக்தியைக் குறைவான மதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.
நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம், மௌனமாக்கப்பட்டோம், ஆனால் பல தன்னலமற்ற பெண்களின் தைரியம் மற்றும் விடாமுயற்சியால், இன்று நாம் ஒன்று கூடி, தவறுகளைச் சரிசெய்வதற்குக் கூட்டாகச் செயல்படக்கூடிய இடத்தில் இருக்கிறோம்.
வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற மகளிர் தலைமைத்துவ மன்ற மாநாட்டில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுடன் உரையாடல் நடத்தியது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
‘என் இதயம் கனத்துவிட்டது’ : சச்சி மனைவி உருக்கம்!
அனைத்து மத கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்ற ராகுல் காந்தி