தனது 22 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக ஹீரோவுக்கு இணையான சம்பளம் பெற்றுள்ளதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ’தமிழன்’ திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன்பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல அமெரிக்க நடிகர் நிக் ஜோனஸை மணந்து தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.
அதன்படி பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் மேடனின் அடுத்த ஸ்பை த்ரில்லர் ‘சிட்டாடல்’ வெப்சீரிஸ் வரும் ஏப்ரல் 28ம் தேதி பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் வெப்சீரிஸ் புரோமோசன் தொடர்பாக சவுத்வெஸ்ட் ஃபிலிம் பெஸ்டிவல் (SXSW) 2023 நிகழ்ச்சியில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் இதில் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அமேசான் ஸ்டுடியோஸ் தலைவர் ஜெனிபர் சல்கே உடனான அந்த நேர்காணலில், “நான் திரைத்துறையில் கடந்த 22 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். இந்தகாலத்தில் பல்வேறு திரையுலகைச் சார்ந்த கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துவிட்டேன்.
ஆனால் ’சிட்டாடல்’ வெப்சீரிஸ்காக தான் முதன்முறையாக ஹீரோவுக்கு இணையான சம்பளம் பெற்றுள்ளேன்.இதைச் சொல்வதனால் நான் சிக்கலில் சிக்கக்கூடும். ஆனால் இதை நினைக்குபோது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “நான் பொதுவாக ஹீரோ கொடுத்த உழைப்புக்கு நிகரான உழைப்பை நானும் கொடுத்துள்ளேன். ஆனால் எனக்கு இதுவரை மிகக் குறைவான ஊதியம் கிடைக்கிறது.
இந்நிலையில் 22 வருடத்திற்கு பிறகு தற்போது ஹீரோவுக்கு நிகரான சம்பளம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு ’நீங்கள் தகுதியானவர் தான்’ என்று அமேசான் ஸ்டுடியோஸ் தலைவர் ஜெனிபர் சல்கே பாராட்டியுள்ளார்.

6 எபிசோடுகளாக தயாராகியுள்ள ’சிட்டாடல்’ வெப்சீரிஸின் முதல் சீசன் ஏப்ரல் 28 முதல் மே 26ஆம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் ஒரு எபிசோடு வெளியாக உள்ளது.
அவெஞ்சர்ஸ் உள்பட பல வெற்றிகரமான ஹாலிவுட் திரைப்படங்கள் தந்த ரூஸோ பிரதர்ஸ் இந்த தொடரை இயக்கியுள்ளது ஹாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரில் ’மேசன் கேன்’ கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் மேடனும், ’நாடியா சிங்’ என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ராவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஒஸி இகிலே, ஆஷ்லீ கம்மிங்ஸ், ஸ்டான்லி டுசி, ரோலண்ட் முல்லர் ஆகியோர் நடித்துள்ளனர்.
கடந்த 6ம் தேதி வெளியான இப்படத்தின் டிரெய்லர் இதுவரை 16 மில்லியன் பார்வைகளை பெற்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
துரோகி’ : எடப்பாடிக்கு எதிராக கோஷமிட்ட சக பயணி
”தமிழ்நாடு தாண்டி இந்தியா முழுமையிலும்…”- கோவையில் ஸ்டாலின் உறுதி!