சொந்தமாக துணி எடுத்து சட்டை தைக்க முடியாத டெய்லர் ஒருவர், தன்னிடம் தைக்க கொடுத்த ஏற்கனவே தைத்து முடித்த சட்டைத் துணிகளில் களவாடப்பட்ட அல்லது கழிவாக எஞ்சிய துணிகளை ஒட்டுப்போட்டு தைத்தால் அந்த சட்டை எப்படியிருக்குமோ அதுதான் பிரின்ஸ் படம்.
இதில் துணி என்பது சம்பந்தமில்லாமல் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ள காட்சிகள். சட்டை என்பது முழுப்படம். டெய்லர் என்பது படத்தின் இயக்குநர், சிவகார்த்திகேயன் இருவரையும் குறிப்பிடலாம். 40 நாள் கால்ஷீட்டுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்புக்கொண்ட படம்தான் பிரின்ஸ்.
சொந்த சாதியைச் சேர்ந்த சொந்த தங்கை மகனைக் கல்யாணம் செய்ததால் மகளிடம் பேசாமல் இருக்கிறார் அப்பா சத்யராஜ். அவருடைய மகன் சிவகார்த்திகேயன், சாதி, மதம் கடந்து திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதனை எழுத்துப்பூர்வமாக மகனிடம் எழுதி வாங்கியிருக்கிறார் அப்பா சத்யராஜ்.
அப்பாவுக்கு எழுதிக் கொடுத்ததை போன்று சாதி, மதம் மட்டுமல்ல நாடு கடந்து இங்கிலாந்தை சார்ந்த இந்தியாவில் குடியேறிய குடும்பத்துப் பெண்ணைக் காதலிக்கிறார். அதனை சந்தோசமாக ஒப்புக்கொள்ள வேண்டிய சத்யராஜ் அதைக் கடுமையாக எதிர்க்கிறார். ஏன் எதிர்க்கிறார்? கடைசியில் என்ன நடக்கிறது என்பதுதான் பிரின்ஸ் படத்தின் ஒருவரிக் கதை.
எந்தவிதமான லாஜிக்கும் இன்றி நாம் என்ன சொன்னாலும், எப்படி நடித்தாலும் ரசிகன் பார்ப்பான் என எண்ணி சிவகார்த்தியேன் நாயகனாக நடித்திருக்கும் படம் பிரின்ஸ். படத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஜாலியாக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
படம் பார்க்கும் ரசிகன் நெளிய வேண்டி இருக்கிறது. கதாநாயகன் வெளிநாட்டுப் பெண்ணை காதலிக்கிறார் என்கிற ஒரு வரிக் கதைக்காகவும், அந்நிய தன்மை அப்பட்டமாக தெரிய வேண்டும் என்பதற்காகவும் உக்ரைனைச் சேர்ந்த மரியாவை தேடிக்கொண்டு வந்தவர்கள் திரைக்கதைக்காக மெனக்கெடவில்லை.
மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற சத்யராஜ், இந்நாளில் ஊர்த்தலைவர் உயர்ந்த எண்ணங்கள் கொண்டவர் என கூறப்பட்டாலும் அதற்கு சம்பந்தமில்லாமல் சத்யாராஜின் பேச்சு செயல் ஆகியன அமைந்திருக்கின்றன. அவர் அறிவாளியா, முட்டாளா என்கிற தெளிவு இல்லாத தெளிவுபடுத்தாத சொதப்பலான திரைக்கதைதான் பிரின்ஸ்.
ப்ராங்க் ராகுல், ஃபைனலி பரத், சதீஷ்கிருஷ்ணன் ஆகியோர் நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கின்றனர். அவர்களுக்கு சொல்லும்படியான காட்சிகள் இல்லை.
சிறப்புத் தோற்றத்தில் சூரி வரும் காட்சிகள் நம்மைச் சோதிக்கின்றன ஆனந்தராஜ் வரும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. பிரேம்ஜிக்கு ரியல் எஸ்டேட் தாதா வேடம். ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையிலும் குறைவில்லை.
மனோஜ் பரம்ஹம்சாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென இருக்கின்றன. ரஜினிமுருகன்+வருத்தப்படாத வாலிபர் சங்கம்+வேலைக்காரன் படங்களை பிரின்ஸ் பட இயக்குநர் மீண்டும் மீண்டும் பார்த்ததன் விளைவாக உருவான ஒரு மெல்லிய கதையை நகைச்சுவையாகச் சொல்லி பார்வையாளனை திருப்திப்படுத்திவிடலாம் என்று இயக்குநர் அனுதீப் நினைத்திருக்கிறார். படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களில் தெளிவின்மை, குறிப்பாக சத்யராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோரின் வேடங்களில் அடிக்கடி நிகழும் மாற்றங்கள் பலவீனமாகி அவர் எண்ணத்துக்கு எதிராக அமைந்துவிட்டது.
பொதுவாக தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர்கள், கதாநாயகனாக நடித்தவர்கள் நாம் எப்படி நடித்தாலும், எந்த கதையாக இருந்தாலும் ரசிகர்களும், மக்களும் பார்ப்பார்கள் என்கிற சிந்தனை மூளையை ஆக்கிரமிக்கிறபோது பிரின்ஸ் போன்ற படங்கள் தயாராகும்.
இது போன்ற சிந்தனை தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய் ஆகியோருக்கும் ஏற்பட்டதுண்டு. இப்போதைய இளைய தலைமுறை நடிகர்களில் சிவகார்த்திகேயன் அதற்கு பலியாகியுள்ளார். பிரின்ஸ் என்றால் இளவரசன் என்பார்கள், ஆனால் இந்த பிரின்ஸ் மந்திரியாகக்கூட இல்லை.
இராமானுஜம்
இடம் பொருள் ஏவல்: ரிலீஸ் தாமதம் ஏன்?
ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றத் தடை? ஸ்டாலின் ஆலோசனை!