திரைப்படம் தயாரிப்பு சம்பந்தமான அறிவிப்பு தொடங்கி படம் வெளியாகும் நாள் வரை ஒவ்வொரு நிகழ்வுக்கும் நல்ல நேரம், பூஜை, புனஸ்காரம் என அமர்க்களப்படும் சினிமாவில் எல்லாப் படங்களும் வெற்றிபெறுவதில்லை என்பது கடந்தகால வரலாறாக இருந்தபோதிலும் தமிழ் சினிமா தொழில்நுட்ப மாற்றங்களுக்கு தன்னை மாற்றிக்கொண்டு வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது.
ஆனால் நல்ல நேரம் பார்ப்பதில் இருந்து மாறவில்லை. ஆம் சிவகார்த்திகேயன் நடிப்பில் நவம்பர் 21 அன்று வெளியாகும் ’பிரின்ஸ்’ திரைப்படம் அவரது ஜோதிடர் குறித்து கொடுத்துள்ள நேரத்தில் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.
இதனால் வழக்கமாக அதிகாலையில் நடைபெறும் சிறப்புக் காட்சிகளின் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது.
இந்த வருடம் தீபாவளி பண்டிகை அக்டோபர் 24 திங்கட்கிழமையன்று வருகிறது. அதையொட்டி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ’சர்தார்’, அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’பிரின்ஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
அப்படங்கள் மூன்று நாட்கள் முன்னதாகவே சினிமா வியாபார நடைமுறைப்படி அந்த வார வெள்ளிக்கிழமை வரும் அக்டோபர் வெளியாகவுள்ளது.
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அதிகாலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சியாக அப்படங்களைத் திரையிடும் வழக்கம் தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளாக இருந்து வருகிறது.
சாதாரண நாட்களில் வெளிவரும் படங்களுக்கே அதிகாலை காட்சி திரையிடப்படுகிறது.
தீபாவளி வெளியீடு என்பதால் அதிகாலை காட்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்; கல்லா கட்டலாம் என திரையரங்குகள் தரப்பில் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அதிகாலை காட்சி மூலம் சுமார் 3 கோடி ரூபாய் வரை டிக்கெட், தின்பண்டம், பார்க்கிங் இவற்றின் மூலம் வர்த்தகம் நடைபெறும் என கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே வெளியாகும் ’சர்தார்’, ’பிரின்ஸ்’ படங்களையும் அதேபோல் திரையிட திரையரங்க உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.
ஆனால், கார்த்தி நடித்துள்ள ’சர்தார்’ படத்தை 4 மணிக்குத் திரையிட வேண்டாம். இயல்பாக 8 மணிக்கு முதல்காட்சியைத் திரையிடலாம் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறியுள்ளனர். 4 மணிக்கு ’பிரின்ஸ்’ படம் மட்டும் திரையிடப்படும் என்று சொல்லப்பட்டது.
இப்போது அதிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். ’பிரின்ஸ்’ படத்தையும் 4 மணிக்குத் திரையிடவேண்டாம். ஐந்து மணிக்குத் திரையிடுங்கள் என்று சிவகார்த்திகேயன் தரப்பில் தமிழ்நாடு விநியோகஸ்தர் தரப்புக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதாம்.
இதற்கு காரணம் அவரது ஜோதிடர் ’4 மணிக்கு வேண்டாம் 5 மணி ஆறு நிமிடத்திற்கு படம் தொடங்குங்கள்; அமோகமாக இருக்கும்’ என்று கூறிய ஆலோசனையின்படியே நேரம் மாற்றப்பட்டது என்கிறார்கள்.
இராமானுஜம்