ஹீரோக்களில் நம்பர் ஒன் யார்? தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் பேட்டி!

சினிமா

“தமிழகத்தில்  நம்பர் ஒன் ஸ்டார் விஜய்தான் என்பதால், ‘வாரிசு’ படத்திற்கு கூடுதல் தியேட்டர்களை ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதியை சந்திக்க போகிறேன்” என்று

‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ பேட்டியில் சொன்னது அஜித்குமார் ரசிகர்களிடமும், தமிழ் சினிமா வட்டாரத்திலும் விவாத பொருளாக மாறியிருக்கிறது.

தயாரிப்பாளர் தில் ராஜுவின் பேட்டியை மையமாக வைத்து ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் அஜித்தை ட்ரோல் செய்வதும், அஜித் ரசிகர்கள் விஜய்யை ட்ரோல் செய்வதுமாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜூவின்  பேட்டியில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் பற்றி  திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர்  திருப்பூர் சுப்ரமணியம் சில விளக்கங்களை அளித்துள்ளார்.

President of Theater Owners Association interview

இது தொடர்பாக அவர் பேசும்போது,  “தயாரிப்பாளர் தில் ராஜு ஹைதராபாத்தில் உட்கார்ந்துக்கிட்டு என்ன அர்த்தத்தில் இப்படி பேசுறாருன்னு எனக்கு புரியலை. ரெட் ஜெயன்ட் நிறுவனம் ‘துணிவு’ படத்தை ரிலீஸ் செஞ்சாலும் தமிழ்நாட்டில் இன்னும் ஒரு  தியேட்டரைக் கூட கன்ஃபார்ம் செய்யலை.

ஒரு யூகத்தில்தான் தில் ராஜு இப்படி பேசுகிறார். ஒருவேளை ரெட் ஜெயன்ட் தியேட்டர்களை கன்ஃபார்ம் செய்து, தியேட்டர்களை பிளாக் செய்து வைத்திருந்தால், அவர் இப்படி பேசுவதில் நியாயம் இருக்கிறது.

ஆனால் இப்போது வரையிலும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் ‘துணிவு’ படத்துக்காகத் தியேட்டர்களை ஒதுக்கும்படி எங்களிடம் கேட்கவே  இல்லை. தியேட்டர் ஓனர்களைப் பொறுத்தவரை விஜய், அஜித் இருவரின் படங்களுக்கும் எந்தவிதமான வித்தியாசத்தையும் காட்ட மாட்டார்கள்.

இருவருமே வெற்றி கொடுக்கக் கூடிய முன்னணி நடிகர்கள். எங்களுக்குத் ‘துணிவு’தான் வேணும், ‘வாரிசு’ வேண்டாம் என்ற எந்த பாகுபாடும் எங்களிடம் கிடையாது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் புக்கிங் கொடுத்தால்தான், தங்களுக்கு எந்தப் படம் வேண்டும் என்பதை தியேட்டர் ஓனர்கள் முடிவு செய்வார்கள். அதற்குள்ளாகவே, “எங்களுக்கு அதிக தியேட்டர்கள் வேண்டும்” என்று  கேட்டால் எப்படி..? 

அதேமாதிரி  விஜய்தான் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஸ்டார் என்றும் தயாரிப்பாளர் தில் ராஜு சொல்லி இருக்கிறார். சினிமாவில் நம்பர் ஒன் ஸ்டார் என்பதெல்லாம் ஒரு யூகம்தான். இது காலத்துக்குக் காலம் மாறும். படம் நன்றாக  இருந்தால் எந்த ஹீரோ நடித்திருந்தாலும் அது நிச்சயமாக வெற்றி பெறும்.

சமீபத்தில் தொடர்ச்சியாக அஜித், விஜய், கமல்ஹாசன் நடித்த படங்கள் வந்தது. இவற்றுடன் ஒப்பிடும்போது, ‘பொன்னியின் செல்வன்’ படம் வசூலை வாரிக் குவித்தது. அப்போ, இங்கே மிக முக்கியமானது கதைதானே..? அதிலும் கமல் நான்கு வருடங்களாக எந்தப் படத்திலும்  நடிக்கவில்லை.

ஆனால் ‘விக்ரம்’  வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அப்போ, விஜய், அஜித்தைவிட கமல்தான் நம்பர் ஒன் நடிகர் என்று சொல்லணும் இல்லையா.? அப்படி சொல்ல முடியுமா..? எந்தப் படம் வெற்றி பெறுகிறதோ அந்தப் படத்தில் நடித்த ஹீரோதான் அப்போதைக்கு சூப்பர் ஹீரோ.

மக்கள் நடிகர்களின் முகத்திற்காக மட்டும்  தியேட்டருக்கு  வருவது கிடையாது. படம் நல்லாயிருந்தால்தான் வருவார்கள். அப்படி, பார்த்தால் ‘பீஸ்ட்’ படமே தோல்விதான்.

President of Theater Owners Association interview

நிலைமை இப்படி இருக்கும்போது தயாரிப்பாளர் தில் ராஜு ஆந்திராவில் உட்கார்ந்துகிட்டு சொல்றதெல்லாம் வெறும் காமெடிதான்..” என்று சில விஷயங்களை போட்டு உடைத்திருந்தார். 

இந்தப் பேட்டி சம்பந்தமாக திருப்பூர் சுப்ரமணியம் அவர்களைத் தொடர்புகொண்டு சில விளக்கங்களைக் கேட்டோம்.

”துணிவு-வாரிசு படங்களுக்கான தியேட்டர் ஒதுக்கீடு சம்பந்தமாக ஊடகங்கள் என்னிடம் கேட்கிறபோது களநிலவரத்தை கூறிவருகிறேன் அப்படி கூறப்பட்ட கருத்து தான் மேற்கூறியது இங்கு நம்பர் ஒன் நான் தான் என யாரும் முத்திரை குத்திக் கொள்ள முடியாது ஒவ்வொரு படத்தின் வருமானத்தை அதன் முதலீடு, நடிகர்கள் சம்பள அடிப்படையில் ஒப்பீடு செய்யாததால் மொத்த வசூலை வைத்து நம்பர் ஒன் என கூறி வருகிறார்கள்.

 இந்த வருடத்தில் பொன்னியின் செல்வன், விக்ரம் இரண்டு படங்களும் அதிகபட்ச வசூலை குவித்த படங்கள் ஆனால் முதலீட்டு அடிப்படையில்” லவ் டுடே” படம் தான் இந்த ஆண்டின் நம்பர் ஒன் படம் 1000 ரூபாய் செலவு செய்து 100 ரூபாய் வருமானம் பார்ப்பதற்கும் 2000ம் ரூபாய் வருமானம் கிடைப்பதற்கும் வித்தியாசம் இல்லையா?  குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட லவ் டுடே முதலீட்டை போன்று பத்து மடங்கு வருமானத்தை தயாரிப்பாளருக்கு பெற்று தந்த படம்.

President of Theater Owners Association interview

அதிக முதலீடு, நட்சத்திர அந்தஸ்து உள்ள பொன்னியின் செல்வன், விக்ரம் வசூலை குவித்தாலும் முதலீட்டு அடிப்படையில்,  லாபத்தின் சதவீதம் குறைவு லவ் டுடே படத்தின் லாபத்தின் சதவீதம் அதிகம் அதனால் தான் வியாபாரியாக லவ் டுடே படம்தான் இந்த ஆண்டின் நம்பர் ஒன் படம்” என்றார்.

-இராமானுஜம்

“தும்மினால் கூட செல்போனில் படம் எடுத்து விடுகிறார்கள்” – ஸ்டாலின்

ஆளுநர் மாளிகையில் இரவில் இறங்கிய பாராசூட்- அதிர்ச்சியில் முதல்வரும் ஆளுநரும்: நடந்தது என்ன?

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0