Premalu movie review

பிரேமலு: விமர்சனம்!

சினிமா

‘அடிபொலி’ ரொமான்டிக் காமெடி!

நான்கு கல்லூரிப் பெண்கள் கூலிங்கிளாஸ் அணிந்துகொண்டு சிரிப்பது போன்றிருக்கும் ‘சூப்பர் சரண்யா’ மலையாளப் பட ஸ்டில், சில காலத்திற்கு முன்னர் சமூகவலைதளங்களில் ’வைரல்’ ஆனது.

அதில் நாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்தபோதும், அவரது தோழியாக வந்த மமிதா பைஜுவைக் கொண்டாடித் தீர்த்தனர் 2கே கிட்ஸ். அவர் நாயகியாக நடித்த படத்தை எப்போது பார்ப்போம் என்ற ஏக்கத்தில் அவரது புகைப்படங்களை ரசித்தனர். அவர்கள் திரையில் முழுக்க முழுக்க மமிதாவை ஆராதிக்கும்விதமாக, அவர் நாயகியாக நடித்த ‘பிரேமலு’ காதலர் தினத்தையொட்டி வெளியாகியிருக்கிறது.

படத்தின் டைட்டிலே இது ஒரு ரொமான்டிக் காமெடி திரைப்படம் என்பதைச் சொல்லிவிடும். அதையும் மீறி, இந்த படம் தரும் காட்சியனுபவம் எந்தளவுக்கு நம்மைச் சுவாரஸ்யப்படுத்துகிறது?

கண்டதும் காதல்..!

’முதல் பார்வையிலேயே காதல் கொண்டேன்’ என்று கவிதை பாடும்படியான ஒரு கதையே ‘பிரேமலு’விலும் உள்ளது. பிரேமம் என்பது மலையாள வார்த்தை என நமக்குத் தெரியும். ’அதென்ன பிரேமலு’ என்பவர்களுக்காகவே இக்கதை ஹைதராபாத்தில் நடப்பதாக அமைத்திருக்கிறார் இயக்குனர் கிரிஷ் ஏ.டி. அந்த ஒரு விஷயமே, வழக்கமான மலையாளப் படங்கள் தரும் தோற்றத்தில் இருந்து இதனை வேறுபடுத்துகிறது.

கேரளாவைச் சேர்ந்த சச்சின் (நஸ்லென்), சேலத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பயில்கிறார். அக்காலத்தில், தன்னுடன் படிக்கும் ஒரு மாணவியைக் காதலிக்கிறார். நான்காண்டுகள் முடியும் தருவாயில், அவரிடம் தனது காதலைச் சொல்கிறார். ஆனால், அவரோ ‘இன்னொருவரைக் காதலிப்பதாக’ச் சொல்லிவிடுகிறார்.

ஒருதலையாகக் காதல் செய்த வலி சச்சினை வாட்டுகிறது. படிப்பு முடிந்ததும், பிரிட்டன் செல்ல முடிவு செய்கிறார். கிராமத்தில் இருக்கும் பெற்றோரிடம் அதற்காகப் பணம் கேட்கிறார். அவர்களோ, ‘பணம் இல்லை’ என்று கையை விரிக்கின்றனர். மூத்த சகோதரியோ கல்யாணம் செய்யும் வயதில் இருக்கிறார்.

வேறு வழியில்லாமல் தெரிந்தவர்களிடம் பெற்ற பணத்தைக் கொண்டு விசாவுக்கு விண்ணப்பிக்கிறார். ஆனால், அது கிடைக்காமல் போகிறது.

’லண்டன் செல்லவில்லையா’ என்று கேட்கும் ஊராரின் பேச்சுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் சச்சின், தற்செயலாகத் தனது பள்ளித் தோழன் அமல் டேவிஸை (சந்தோஷ் பிரதாப்) சந்திக்கிறார். அவர், ஹைதராபாதில் எம்.டெக் படிப்புக்கான கேட் நுழைவுத்தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வருகிறார். ‘நீயும் என்னோடு வா’ என்று அமல் டேவிஸ் சொல்ல, ‘சரி’ என்று ஹைதராபாத் செல்கிறார் சச்சின்.

மிகச்சில நாட்களிலேயே, தனக்கு ‘கேட்’ தேர்வு ஒத்துவராது என்பதைச் சச்சின் புரிந்து கொள்கிறார். சென்னைக்குச் சென்று, அங்கிருக்கும் நண்பர்களின் உதவியோடு ஒரு வேலையில் சேரலாம் என்று முடிவு செய்கிறார்.

இந்த நிலையில், பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஆசிரியரின் கல்யாணத்தில் கலந்துகொள்வதற்காக அமலும் சச்சினும் தெலங்கானாவிலுள்ள ஒரு குக்கிராமத்திற்குச் செல்கின்றனர். அங்கு, ரீனுவைக் (மமிதா பைஜு) காண்கிறார் சச்சின். பார்த்தவுடன் காதல் பற்றுகிறது. மணப்பெண்ணின் அலுவலக சகாவான அவரை ‘இம்ப்ரெஸ்’ செய்வதற்காக ஏதேதோ முயற்சிக்கிறார் சச்சின். அந்த நேரத்தில், ரீனுவின் டீம் லீடர் ஆதி (ஷ்யாம் மோகன்) குறுக்கிடுகிறார்.

கல்யாணம் முடிந்ததும், காரில் ஹைதராபாத் திரும்பும் அமல், சச்சின் உடன் ரீனுவும் அவரது தோழி கார்த்திகாவும் (அகிலா) பயணிக்கின்றனர். அந்த பயணத்திற்குப் பிறகு, ரீனுவுக்காக மட்டுமே ஹைதராபாத்தில் இருப்பது என்றும், அவரிடம் தனது காதலைத் தெரிவிப்பது என்றும் முடிவெடுக்கிறார் சச்சின்.

Premalu movie review

கார்த்திகாவிடம் இந்த விஷயத்தை அமல் சொல்ல, அவரோ ‘எதிர்காலக் கணவரிடம் ரீனு எதிர்பார்க்கும் எந்தவொரு விஷயமும் சச்சினிடம் இல்லை’ என்று உண்மையைப் போட்டுடைக்கிறார். அதற்குப் பிறகும் தனது காதலில் சச்சின் உறுதி காட்டினாரா? ரீனுவிடம் காதலைத் தெரிவித்தாரா அல்லது பெட்டியைக் கட்டிக்கொண்டு ஹைதராபாதில் இருந்து கிளம்பினாரா என்பதைச் சொல்கிறது ‘பிரேமலு’வின் மீதி.

பெரிதாகத் திருப்பங்கள் இல்லாத, ரொம்பவே சாதாரணமான காதல் கதை என்றபோதும், சில நொடிகள் இடைவெளியில் தொடர்ந்து சிரிக்க வைத்து நம்மை மகிழ்விக்கிறார் இயக்குனர் கிரிஷ் ஏ.டி. அதுவே, இந்தப் படத்தின் யுஎஸ்பி.

இளமைச் சிரிப்பு!

’தண்ணீர் மாதன் தினங்கள்’ படத்தில் நாயகனின் தோழனாக நடித்த நஸ்லென், சமீபகாலமாகச் சில வெற்றிப் படங்களில் இடம்பிடித்து வருகிறார். அவர் நாயகனாக நடித்த முதல் படம் இது. போலவே, பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் நாயகியாக நடிப்பதாகச் சொல்லப்பட்ட மமிதா பைஜு நாயகியாக நடித்த முதல் மலையாளப் படமும் இதுவே.

‘பிரேமலு’வில் நஸ்லென் – மமிதா இடையேயான ‘கெமிஸ்ட்ரி’ அபாரம்; அந்த அளவுக்கு, இளங்காதலர்களாகவே திரையில் இருவரும் தெரிகின்றனர். நகைச்சுவையில் இருவரது ‘டைமிங்’கும் அற்புதம். அதுவே, இவர்களது காம்பினேஷனில் இனி அடுத்தடுத்து படங்களை எதிர்பார்க்க வைக்கிறது.

அமல் டேவிஸ் ஆக வரும் சங்கீத் பிரதாப், ’யார் இது’ என்று ரசிகர்களை நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கிறார்; திரைக்கதையில் முக்கியத் தூண் ஆகவும் விளங்குகிறார். அவரது ‘ஒன்லைனர்கள்’ மட்டுமல்லாமல் முக பாவனைகளும் நகைக்க வைக்கின்றன.

Premalu movie review

ஆதி எனும் வில்லத்தனமான பாத்திரத்தில் ஷ்யாம் மோகன் நடித்துள்ளார். அவரை நஸ்லெனும் சங்கீத்தும் கிண்டலடித்து டென்ஷன் ஆக்குவதாக, கிளைமேக்ஸில் ஒரு காட்சி உண்டு. அதனைப் பார்க்கும் எவராலும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது.

நாயகியின் தோழிகளாக வரும் அகிலா பார்கவன், மீனாக்‌ஷி மற்றும் ஷமீர் கான் உட்பட அலுவலக சகாக்களாக வருபவர்கள், நாயகனின் கல்லூரிக் காலத் தோழர்கள் மற்றும் நாயகன் நாயகியின் பெற்றோராக நடித்தவர்கள் என்று நிறைய முகங்கள் திரைக்கதையில் தலை காட்டுகின்றன.

லியோவில் விஜய் மகனாக நடித்த மேத்யூ தாமஸ், இதில் கௌரவ வேடத்தில் வந்து போயிருக்கிறார். ’தண்ணீர் மாதன் தினங்கள்’ படத்தில் இவர் ஹீரோவாகவும், நஸ்லென் துணை பாத்திரத்திலும் நடித்திருந்தனர். அது நம் நினைவுக்கு வரும்போது, மலையாள ரசிகர்களுக்குக் கிடைக்கும் அந்த பாக்கியம் நமக்கு ஏன் கிட்டாமல் போகிறது எனும் ஆதங்கத்தைப் பெரிதாக்குகிறது.

‘பீல்குட் ரொமாண்டிக் காமெடி’ என்று சொல்லத்தக்க வகையில் பளிச்சென்று அனைத்து பிரேம்களும் உள்ளன’ அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு, அத்தனை காட்சிகளையும் வண்ணமயமாக மாற்றியிருக்கிறது..

படத்தொகுப்பாளர் ஆகாஷ் ஜோசப் வர்கீஸ், திரையில் நிதானம் தென்படும் வகையில் மிக அருமையான முறையில் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார். முன்பாதி ஓகே என்றபோதும், பின்பாதியில் இடம்பெற்ற சில ஷாட்கள், வசனங்களைக் காண்கையில் இடையே சில காட்சிகள் ‘டெலிட்’ செய்யப்பட்ட உணர்வு மேலெழுகிறது. அந்த உறுத்தலைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

விஷ்ணு விஜய்யின் பின்னணி இசையே, திரையில் பாதி நகைச்சுவையை நிரப்பி விடுகிறது. அதனால், நடிப்புக்கலைஞர்களின் பங்களிப்பு எளிதாக நம்மை ஈர்க்கிறது. ’குட்டி குடியே’, ‘மினி மகாராணி’ பாடல்கள் சட்டென்று நம்மை வசப்படுத்தும்.

நாயகன், நாயகியின் வீடுகள், அவர்கள் ஹைதராபாதில் வசிக்குமிடங்கள், கல்யாணக் கொண்டாட்டம் நடக்குமிடம், ஐடி அலுவலகம், எக்ஸ்பிரஸ் ரயில் செட்டப் என்று காட்சி நிகழும் களங்கள் அனைத்தையும் ‘சினிமா மினுமினுப்பு’டன் காட்டுகிறது வினோத் ரவீந்திரனின் தயாரிப்பு வடிவமைப்பு.

கிரண் ஜோசே உடன் இணைந்து இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஆக்கியிருக்கிறார் இயக்குனர் கிரிஷ் ஏ.டி.

Premalu movie review

ஹைதராபாதில் கதை நடப்பதாகக் காட்டப்படுவதால், முதல் அரை மணி நேரத்தில் கேரளாவைச் சேர்ந்த நாயகனும் நாயகியும் அந்த நகரத்திற்கு இடம்பெயர்வது சொல்லப்படுகிறது. பிறகு, அவர்கள் எங்கு நேருக்கு நேர் சந்தித்தனர் என்பதும், மெல்ல அவர்களுக்கு இடையே எப்படி நெருக்கம் அதிகமானது என்பதும் விவரிக்கப்படுகிறது.

இந்தக் கதையில் காதல் பிரிவு கொஞ்சம் சோக கீதம் வாசித்தாலும், அதையும் மீறி நகைச்சுவையைத் தெளித்திருப்பதே படம் முடியும் வரை நம்மைக் கண் கலங்காமல் காப்பாற்றுகிறது.

பார்க்கலாமா?

இன்றைய தலைமுறையின் காதலை மிகத்தீர்க்கமாகவும் தெளிவாகவும் ‘பிரேமலு’ சொல்கிறதா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும். நிச்சயமாக இதில் ‘ரியாலிட்டி’ இல்லை. ஆனால் இருபாலரும் காதலின் பிரிவை எண்ணி வாடாமல் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதையும், அதற்குத் தயாராகும்போது காதல் தானாக நம்மை வந்தடையும் என்பதையும் சொல்லி நம்பிக்கையூட்டுகிறது.

நஸ்லென் மற்றும் மமிதா பைஜுவின் ரசிகக் கண்மணிகள், அவர்களது நடிப்பைக் கொண்டாடும் படமாக உள்ளது இந்த ‘பிரேமலு’. சங்கீத் பிரதாப்பின் ‘அடிபொலி’ காமெடிக்காகவும் இதனைப் பார்க்கலாம். கொஞ்சம் வயதானவர்கள் இப்படத்தைக் காண்கையில், கடந்தகாலத்தையும் அப்போதைய காதலையும் அசைபோட வாய்ப்புண்டு. அந்தவகையில், காதலர்தினக்’ கொண்டாட்டத்திற்கு ஏற்ற மிகச்சிறந்த பொழுதுபோக்கு சாய்ஸ் ஆகவும் விளங்குகிறது ‘பிரேமலு’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை வந்தடைந்தார் ஜேபி நட்டா

நாடாளுமன்ற தேர்தல்: திமுக பரப்புரை கூட்டம் அறிவிப்பு!

+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
2
+1
3