பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் திரைப்படம் முதல் 3 நாளில் 3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியானது ‘அந்தாதூன்’ திரைப்படம்.
பியானோ இசை கலைஞரான ஆகாஷ், கண் தெரியாதவரைப் போல நடிக்கிறார். ஒரு தருணத்தில் சிமி தன் காதலனோடு சேர்ந்துகொண்டு, கணவரைக் கொலை செய்திருப்பதைப் பார்த்துவிடுகிறார்.
ஆனால், தொடர்ந்து கண் தெரியாதவரைப் போல நடிக்கிறார். ஆனால், சிமிக்கு சந்தேகம் வந்துவிடுகிறது.
இதற்குப் பிறகு நடக்கும் திருப்பங்களே கதை. ஆகாஷ் ஷராஃபாக ஆயுஷ்மான் குரானாவும் சிமியாக தபுவும் நடித்திருந்தனர்.
இவர்கள் தவிர, ராதிகா ஆப்தேவும் படத்தில் நடித்திருந்தார். ‘அந்தாதூன்’ படம் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
பியானோ கலைஞரான பிரசாந்த்துக்கு இத்திரைக்கதை பொருத்தமானது என்பதால் இப்படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை தியாகராஜன் பலத்த போட்டிக்கு இடையே 2019 ஆம் ஆண்டு வாங்கினார்.
தெலுங்கில் நிதின், தமன்னா ஆகியோர் நடிப்பில் ‘மாஸ்ட்ரோ’ என்ற பெயரிலும் மலையாளத்தில் பிருத்விராஜ், மம்தா மோகன்தாஸ், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் ‘ப்ரமம்’ என்ற பெயரிலும் ரீ-மேக் செய்யப்பட்டு ஏற்கனவே வெளியானது.
தமிழில் பிரசாந்த் நடிப்பில் வேறு இயக்குநர்கள் இதனை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இறுதியில் படத்தை பிரசாந்த் அப்பாதியாகராஜனே இயக்கினார். படத்தின் திரைக்கதையை தியாகராஜனும் பட்டுக்கோட்டை பிரபாகரும் சேர்ந்து எழுதினர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
அந்தகன் படத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்திருந்த பாத்திரத்தில் பிரசாந்தும், தபு நடித்திருந்த பாத்திரத்தில் சிம்ரனும் நடித்திருக்கிறார்கள். ராதிகா ஆப்தே நடித்திருந்த பாத்திரத்தில் ப்ரியா ஆனந்த் நடித்திருக்கிறார்.
தமிழுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்ட திரைக்கதைக்காக கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் இந்தப் படத்தில் சேர்க்கப்பட்டு நடித்திருக்கின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளாக பிரசாந்த் நடிப்பில் படம் வெளியாகவில்லை.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின் முன்னதாக ஆகஸ்ட் 9 ஆம் தேதியே அந்தகன் சுமார் 500 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படத்திற்கு விமர்சகர்களிடமும் சமூகவலைதளங்களிலும் எதிர்பார்த்ததை காட்டிலும் பாசிட்டிவான கருத்துகள் வெளியானபோதும் முதல் நாள் சுமார் 60 லட்சம் ரூபாய் மொத்த வசூல் ஆனது.
இரண்டாவது நாள் அது இரு மடங்கு ஆனது. மூன்றாவது நாளும் அதே வசூல் நீடித்தது. முதல் மூன்று நாட்களில் சுமார் 3 கோடி ரூபாய் அந்தகன் படம் தமிழக திரையரங்குகளில் மொத்த வசூல் செய்துள்ளது.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான போட், மழை பிடிக்காத மனிதன், ஏற்கனவே திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த ராயன் படங்கள் குறிப்பிடத்தக்க வசூலை இரண்டாவது வாரம் தொடர்ந்த போதும் அந்தகன் அந்தப் படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்ப மொத்த வசூல் செய்துள்ளது என்கின்றனர் திரையரங்க வட்டாரத்தில்.
இன்றைய இளைய தலைமுறை சினிமா ரசிகர்களும் பிரசாந்த் படத்தை ரசிப்பதும், ஆதரிப்பதும் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பிரசாந்த் தமிழ் சினிமாவில் கம்பேக் ஆகியுள்ளார் என்கின்றனர் விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
கங்குவா, தங்கலான்: தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் செக்!
மீண்டு வந்த பிரசாந்துக்கு வாழ்த்துக்களும், இனியாச்சும் யாரும் கவுத்து விட்றாம சூதானமா இருக்க எச்சரிக்கையும்