கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி, பொங்கல் வந்தால் அலுவலகத்தில் இருந்து விடுமுறை கிடைக்குமா, ஊருக்குச் செல்ல பஸ் டிக்கெட் கிடைக்குமா என்று கூட தெரியாது. ஆனால், தீபாவளி மட்டுமின்றி கிருஷ்ணா ஜெயந்தி, சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி என ஒவ்வொரு விடுமுறை தினத்திலும் தவறாமல் கிடைப்பது ‘ அந்தகன் ‘ படக்குழுவின் அந்த தினத்திற்கான வாழ்த்து போஸ்ட்.
ஆம், இப்படி பல நாட்களாக கிடப்பில் இருந்த இந்தத் திரைப்படத்திற்கு மீம்ஸ்கள் செய்தது ஒரு வித புரொமோஷன் தான். இந்த ஆண்டில் மோகன், ராமராஜன் என 80 – களைச் சேர்ந்த கதாநாயகர்கள் அடுத்தடுத்து கம்பேக் கொடுக்க படங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து 90 – களின் சாக்லேட் பாயான ‘ டாப் ஸ்டார் ‘ பிரசாந்த் நடிப்பில் இன்று (ஆகஸ்ட் 9) வெளியாகியிருக்கிறது ‘அந்தகன் ‘.
ஒன்லைன்:
பார்வை மாற்றுத் திறனாளியான பிரசாந்த் ஒரு பியானோ இசைக் கலைஞர். மாணவர்களுக்கு பியானோ கற்றுக் கொடுப்பது, ரெஸ்டோ பாரில் பியானோ வாசிப்பது என இவர்கள் வாழ்க்கை நகர, ஒரு நாள் நடிகர் கார்த்திக்கிற்காக அவர் வீட்டிற்கேச் சென்று பியானோ வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி போகிற இடத்தில் என்ன நடக்கிறது, அதிலிருந்து பிரசாந்த் எப்படி தப்பித்தார் என்பதே ‘ அந்தகன் ‘.
அனுபவ பகிர்தல்:
90 களில் பார்த்த பிரசாந்த் – ஐ அதே புத்துணர்ச்சியோடு திரையில் கண்டது நல்லதோர் அனுபவம். நடிப்பில் மிகவும் முதிர்ச்சி அடைந்துள்ளார் பிரசாந்த். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப அவர் சிறப்பாக நடித்ததே படத்தின் பெரிய பலம். குறிப்பாக முதல் பாதியில் பாவனைகளை மட்டும் வெளிப்படுத்தும் பல காட்சிகளில் மிரட்டியுள்ளார்.
இந்தத் திரைப்படம் பாலிவுட்டில் வெளியான ‘ அந்தாதூன் ‘ திரைப்படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே. அந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் விறுவிறுப்பான கதை மற்றும் திரைக்கதையே.
அந்த வகையில் இந்தப் படத்தின் கதைக்களம் பார்வையாளர்களை விறுவிறுப்பாக்குகிறது. கதை ஆரம்பித்த இடத்தில் இருந்து இடைவேளை வரை அந்த விறுவிறுப்பு அப்படியே நீடிக்கிறது. மனோபாலா அடிக்கும் சில கவுண்டர்ஸ், யோகிபாபுவின் ஆரம்ப காட்சி, படத்திலே உள்ள சில டார்க் காமெடி இடங்கள் ரசிக்க வைக்கிறது.
ஆனால், இரண்டாம் பாதியில் திரைக்கதையில் இருக்கும் தொய்வு, கதாபாத்திர வடிவமைப்பில் அழுத்தமின்மை, சில காட்சிகளில் இருக்கும் சினிமாத் தனங்கள் ஆகியவை படத்தோடு ஒட்டவிடாமல் தடுக்கிறது. ஆனால், படம் நிறைவடையும் போது நம்மை பெரிதும் சோர்வடையச் செய்யாத ஒரு பொழுதுபோக்கு படத்தைக் கண்ட திருப்தி நமக்குள் ஏற்படுவது உண்மை.
விரிவான விமர்சனம் :
இது ஒரு ரீமேக் படமென்றாலும் தமிழுக்காக திரைக்கதையில் பல இடங்களை மாற்றி அமைத்ததாக பிரசாந்த் பல பேட்டிகளில் சொல்லி இருந்ததைக் காண முடிந்தது. அதில் உள்ள சினிமாத் தனங்கள் தான் படத்தின் மைனஸ். பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் அது ஒரு பெரிய உறுத்தலாகத் தெரியவில்லை. ஆனால், மேக்கிங்கில் பல இடங்கள் துருத்திக் கொண்டு தெரிவதைத் தவிர்த்திருக்கலாம்.
குறிப்பாக, பிரசாந்த் கண்ணாடியில் தெரியும் சினிமா லைட், கேமரா போன்ற விஷயங்களை நிச்சயம் தவிர்த்திருக்கலாம். ஆனால், அதை எல்லாம் இந்தப் படத்தின் வலுவான கதை காப்பாற்றுகிறது. கதை ஆரம்பிக்கும் காட்சியே நம்மை படத்திற்குள் கொண்டு சென்று சுவாரஸ்யம் ஆக்குகிறது. ஆனால் அந்தக் காட்சி வருவதற்கான நேரத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். பிரசாந்தின் நடிப்பு பல இடங்களில் சிறப்பாகவே இருந்தாலும், அந்தக் கதாப்பாத்திரத்தை இன்னும் அழுத்தமாக வடிவமைத்திருந்தால் அதோடு நம்மைப் பொருத்திப் பார்த்திருக்க முடியும்.
சிம்ரன், சமுத்திரகனி, வனிதா போன்ற நடிகர்களின் கதாபாத்திரங்கள் வரும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் வரும் ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ். ரவி குமார் ஆகியோர் வரும் காட்சிகள் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை.
வசனங்களைப் பொறுத்தவரை பிரியா ஆனந்த் – சிம்ரன் பேசிக்கொள்ளும் ஒரு காட்சி, வாழ்க்கையைப் பற்றிய ஒரு வசனம், ஒரு சில காமெடி கவுண்டர்கள் சிறப்பு.
சந்தோஷ் நாராயணனின் சாயலே இல்லாத பின்னணி இசையில் ஒரு சில இடங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம். பாடல்களில் சித் ஶ்ரீராம் பாடிய பாடல் தவிற எதுவும் திரையில் படத்தோடு கேட்க சுவாரஸ்யமாக இல்லை.
படத்தின் ஆரம்பம் மற்றும் கிளைமாக்ஸில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் சரியாக அமைக்கப்படவில்லை.
படத்தின் கதாபாத்திரங்களின் வடிவமைப்பைக் கொஞ்சம் அழுத்தமாக அமைத்து, சில சினிமாத்தனங்களைத் தவிர்த்திருந்தால் நிச்சயம் இது மிகச் சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்க கூடும்.
இருப்பினும் படத்தின் முதல் பாதி தரும் விறுவிறுப்பு, பிரசாந்த்தின் நடிப்பு, கதை தேர்வு , தியாகராஜனின் இயக்கம் போன்றவைகளுக்காக இந்தத் திரைப்படத்தை நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
’ஆகஸ்டு 19க்குப் பின் துணை முதல்வர் உதயநிதி’: அமைச்சர் கண்ணப்பன் கிளப்பிய சலசலப்பு!
”தரம் தாழ்ந்த சொற்களை பயன்படுத்துகிறார்” : தங்கர் மீது ஜெயா பச்சன் குற்றச்சாட்டு!