பாஜகவில் சேர்கிறீர்களா?: விஷாலை கிண்டலடித்த பிரகாஷ் ராஜ்

சினிமா

பிரதமர் மோடியை நடிகர் விஷால் பாராட்டியதற்குக் கிண்டல் செய்து நடிகர் பிரகாஷ்ராஜ் ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் விஷாலின் ‘லத்தி’ திரைப்பட வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்தப் படத்தைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால். திரைத்துறையைத் தாண்டி அரசியலிலும் விஷாலுக்கு ஆர்வம் உள்ளது.

2017ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கூட களமிறங்கத் திட்டமிட்டார் விஷால். ஆனால் வேட்பு மனுவில் சில தவறுகள் இருப்பதாகக் கூறி, அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

அதன்பிறகு அவர் அரசியலிலிருந்து தள்ளி இருந்தாலும், அவரை சுற்றி அரசியல் சம்பந்தமான பேச்சுகள் வலம் வந்து கொண்டே இருந்தன.

விஷால் ஆந்திர அரசியலில் நுழைய இருப்பதாகவும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில், சந்திரபாபு நாயுடுவை எதிர்த்துப் போட்டியிடப் போவதாகவும் முன்னர் தகவல் வெளியானது.

ஆனால் ஆந்திர அரசியலில் நுழையும் எண்ணம் தனக்கு இல்லை எனக் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஷால்.

இந்நிலையில் பிரதமர் மோடியைப் பாராட்டி விஷால் ட்வீட் செய்திருந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது.

“அன்புள்ள மோடிஜி என ஆரம்பித்து, நான் காசிக்குச் சென்றேன். அங்குச் சிறப்பான தரிசனம் கிடைத்தது.

கோயிலைப் புதுப்பித்து, அதனை இன்னும் அற்புதமாகவும், தரிசனம் செய்வதற்கு எளிதாகவும் மாற்றியதற்காகக் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். உங்களுக்குத் தலைவணங்குகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பிரதமர் மோடியும் ட்வீட் செய்திருந்தார். காசியில் உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி என பதில் கொடுத்திருந்தார்.

திரைபிரபலங்கள் பெரும்பாலும் பாஜகவில் இணைவதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு இருக்கிறது. அந்த வகையில் விஷாலும் பாஜகவில் இணைப் போவதாக தகவல் பரவ ஆரம்பித்தது.

ஆனால் இதில் அரசியல் இல்லை என்றும், ஆன்மீக பயணத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க கூடாது என்றும் விளக்கம் கொடுத்தார் விஷால்.

இந்த நிலையில் பிரதமர் மோடியை பாராட்டிய விஷாலை கலாய்த்து ட்வீட் செய்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ். ஷாட் ஒகே, அடுத்து என்ன? என பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளில் தனது கருத்தினை முன்வைத்து வருகிறார். குறிப்பாக பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமும், செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்பிரியா

தெலங்கானா இடைத்தேர்தல் : நள்ளிரவில் கைதான முக்கிய தகவல்!

குஜராத் தேர்தல் இன்று அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *