சிவகார்த்திகேயன் படத்தால் போட்டி போட்டு வியாபாரம் ஆன பிரபாஸின் ’கல்கி’!
இந்திய சினிமாவில் இந்தாண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று ’கல்கி 2898 ஏடி’. காரணம் இந்தப் படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே ஜோடியுடன் அமிதாப்பச்சன், கமல்ஹாசன் இருவரும் நடித்துள்ளதால் வணிக மதிப்பும் எகிறியுள்ளது.
சயின்ஸ் பிக்சன் திரைக்கதையில் உருவாகியுள்ள இந்தப்படத்தை, தெலுங்கு படத் தயாரிப்பாளர்களில் முன்னணி நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பன்மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படம் வரும் ஜூன் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் சுமார் 750 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் வியாபாரத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவியதாக செய்திகள் கசிய தொடங்கியுள்ளது. இதன் உண்மைத்தன்மை என்ன என விசாரித்த போது அந்த சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது.
பிரபாஸின் பட வசூல் மாறுகிறது!
பான் இந்தியா படம் என அறிவிக்கப்பட்டு பன்மொழிகளில் படத்தை வெளியிட்டாலும், படத்தின் கதாநாயகன் தாய்மொழி சார்ந்தே அப்படத்தின் வியாபாரம் இன்றளவும் இருந்து வருகிறது.
பாகுபலி படத்தின் மூலம் அகில இந்திய நட்சத்திரமாக பிரபாஸ் பிரபலமானாலும் அவர் நடிக்கும் படத்தின் பிரதான வியாபார வருவாய் தெலுங்கு மொழி வெளியீட்டின் மூலம் தான் உள்ளது.
பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸ் நடிப்பில் 350 கோடியில் தயாரிக்கப்பட்ட சாலார் 700 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தது. ஆனால் 700 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ஆதி புரூஷ் வெறும் 300 கோடி ரூபாய் மட்டுமே மொத்த வசூல் செய்தது.
இதனால் பிரபாஸ் படங்களின் பிறமொழி வெளியீட்டு உரிமைக்கான விலை படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்ப கிடைப்பது இல்லை.
இந்த நிலையில் கல்கி 2898 ஏடி படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை பெற சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஆனால் தயாரிப்பு நிறுவனம் பாகுபலி படத்தின் வசூல் கணக்கை அடிப்படையாக கொண்டு அதிக விலை கூறியதால் படத்தை வாங்க தயக்கம் காட்டியுள்ளார்கள்.
அதன்பின், ரெட்ஜெயண்ட் நிறுவனத்திடம் இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு சுமார் பத்துகோடி மட்டுமே முன் தொகை கொடுப்போம் என ரெட்ஜெயண்ட் நிறுவனம் சொன்னதை தயாரிப்பு தரப்பு ஏற்கவில்லை.
திருப்பதி பிரசாத்தின் ஐடியா!
இந்நிலையில், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் திருப்பதி பிரசாத், இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை 21 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அந்த தொகைக்கு இணையாக எம்.ஜி. அடிப்படையில் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை.
இதனால் திருப்பதி பிரசாத், “படத்தை வாங்கி வெளியிடுங்கள், கண்டிப்பாக இந்தப்படம் ஓடும், அப்படியே கொடுத்த தொகைக்கு குறைவாக வசூல் ஆனாலும் அதனை ஈடுகட்டும் வகையில் எனது தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் விநியோக உரிமையை கல்கி படம் வாங்குபவர்களுக்கே தருகிறேன்” என வாக்கு கொடுத்திருக்கிறார்.
இதனை கேட்ட விநியோகஸ்தர்கள் ’ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்கிற கணக்கில் கல்கி படத்தின் ஏரியா விநியோக உரிமையை வாங்குவதற்கு கடும் போட்டி ஏற்பட்டு வியாபாரத்தை முடித்துள்ளார்கள்.
கமல்ஹாசன், அமிதாப்பச்சன், என இரண்டு அகில இந்திய பிரபலங்கள் நடித்திருந்தும் அந்தப் படத்தை வியாபாரம் செய்ய மற்றொரு படத்தின் உரிமை கேரண்டியாக பயன்படுத்தப்பட்டிருப்பதை பற்றி விநியோகஸ்தர்களிடம் கேட்டோம்.
அதற்கு, ”கமல்ஹாசன், அமிதாப்பச்சன் இருவரும் படம் முழுவதும் இல்லை. அதனால் அவர்களுக்காக பார்வையாளர்கள் அதிகமாக வரப்போவதில்லை. பாகுபலி படம் போன்று இதுவும் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த படம். மொழி இனம் கடந்து பார்த்து ரசிக்க கூடியதாக பாகுபலி இருந்தது.
அதேபோன்று கல்கி 2898 ஏடி இருந்து விட்டால் தப்பிச்சிடலாம். துண்டு விழுந்தால் அந்தப் பணத்தை திருப்பி வாங்க போராட வேண்டி இருக்கும். அதனால்தான் சிவகார்த்திகேயன் படத்தை கேரண்டியாக பயன்படுத்த வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டது” என்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
’இந்த பஸ்களில் ஏறாதீங்க’ : வெளிமாநில ஆம்னி பஸ் பட்டியல் வெளியிட்ட போக்குவரத்துத் துறை!
விக்கிரவாண்டி: அமைச்சர்கள் புடைசூழ அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல்!