பாகுபலி படத்திற்கு பிறகு உலகளவில் ஃபேமஸான நடிகர் பிரபாஸ் அடுத்தடுத்த படங்களான சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
அதன் பிறகு சமீபத்தில் கேஜிஎப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து, நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான “மகாநதி” படத்தை இயக்கிய இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் “கல்கி 2898 AD”.
இந்த படத்தில் நடிகர்கள் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் Glimpse வீடியோ வெளியாகி ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது. மேலும், இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசன் வில்லனாக நடிக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கல்கி 2898 AD படத்தின் Glimpse வீடியோவில் 2898 காலகட்டத்தில் வாழும் மக்கள் வில்லன் ஆட்சியில் சிக்கி தவிப்பதும், போராட்டம் செய்வதும், இந்த கொடூர சூழ்நிலையில் இருந்து காப்பாற்ற ஹீரோவிற்காக காத்திருப்பது, போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
இரண்டு பாகங்களாக உருவாகும் கல்கி படத்தின் முதல் பாகத்தில் வில்லனாக நடித்துள்ள கமல்ஹாசன் காட்சிகள் சில நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கல்கி படத்தில் பிரபாஸ் கதாபாத்திரத்தின் பெயரை படக் குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர் பிரபாஸின் கதாபாத்திரத்தின் பெயர் “பைரவா”. இந்த அறிவிப்பை முன்னிட்டு நடிகர் பிரபாஸ் வித்தியாசமான ஒரு கண்ணாடியை அணிந்து கொண்டு, கையில் டாட்டூடன் ஸ்டைலாக அமர்ந்திருப்பது போன்ற ஒரு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. வரும் மே மாதம் 9 ஆம் தேதி கல்கி 2898 AD படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமாலின் அவதாரமான “கல்கி”-ஐ குறிக்கும் வகையில் படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஹீரோவின் கதாபாத்திரத்தின் பெயர் சிவாவை குறிக்கும் வகையில் பைரவா என்று வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கல்கி படத்தின் புதிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: சீஸ் ஸ்டஃப்டு குடமிளகாய்
வுமன்ஸ் டே விஷ் கூட பேக் ஐடிக்கு தானா? : அப்டேட் குமாரு
Dhanush : தனுஷின் ‘குபேரா’ கதை இதுதானா?