நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மாயமான ஐபோனை போலீசார் இன்று (செப்டம்பர் 23) கண்டுபிடித்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை பவுலின் ஜெசிகா (29). சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
சமீபத்தில் வெளிவந்த வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாகவும் வேறு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி பவுலின் தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக கோயம்பேடு காவல்நிலைய போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது அவரது வீட்டில் ஒரு கடிதம் மற்றும் 3 செல்போன்களை கைப்பற்றினர்.
கடிதத்தில், தான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாகவும் அந்த காதலை அந்த நபர் ஏற்கவில்லை என்றும் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும் பவுலின் குறிப்பிட்டிருந்தார்.
ஆஜராகாத காதலன்!
பவுலின் கடந்த சில ஆண்டுகளாக தயாரிப்பாளர் சிராஜுதீனை காதலித்து வந்ததாக போலீசார் கண்டறிந்தனர்.
தற்கொலை விவகாரம் குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி போலீசார் சம்மன் அனுப்பினர்.
ஆனால் படப்பிடிப்பை காரணம் காட்டி சிராஜூதீன் இன்னும் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.
ஐபோன் மற்றும் நகைகள் மாயம்!
நடிகை பவுலின் சகோதரரான தினேஷ், பவுலின் பயன்படுத்தி வந்த ஐபோன் மற்றும் 26 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும் புகார் கூறியிருந்தார்.
இதனையடுத்து பவுலின் தற்கொலை செய்துகொண்டபோது முதல் ஆளாக வந்து கதவை உடைத்து பார்த்த பிராபகரனிடம் கோயம்பேடு போலீசார் 3 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் அளித்த தகவல்கள் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஐபோன் திருடிய பிரபாகரன்
பவுலின் தனது காதலரான சிராஜுதீனிடம் போனில் வாக்குவாதம் செய்த பிறகே தற்கொலை செய்துள்ளார்.
இதனை சிராஜுதீன் மூலம் அறிந்த அவரது நண்பர் பிரபாகரன் பவுலினின் வீட்டிற்கு முதல் ஆளாக வந்து உடைத்து பார்த்து உறுதி செய்துள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு சிராஜூதீனும் தகவல் கொடுத்துள்ளார்.
மேலும் விசாரணையின் முடிவில் தற்போது பவுலின் பயன்படுத்தி வந்த ஐபோனை பிரபாகரனிடம் இருந்து போலீசார் மீட்டுள்ளனர்.
இந்த தற்கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் ஐபோனில் இருந்து தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய தடவியல் துறைக்கு போனை அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படப்பிடிப்பில் இருப்பதாக கூறி வரும் தயாரிப்பாளர் சிராஜூதீனை காரைக்குடிக்கு சென்று நேரில் விசாரிக்க உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
நடிகை தற்கொலை… சிக்கிய கடிதம்: சென்னையில் பரபரப்பு!
எப்போதும் பேட்டிங்கில் கில்லி : அபார வெற்றி பெற்ற இந்தியா!