ஒரே இரவில் 6 கதைகள்: பளிச்சிடுகிறதா பவுடர்

சினிமா

சென்னை சிட்டி போலீஸ் கமிஷனரின் வீட்டில் ஒரு உறுப்பினர் காணாமல் போக.. சிட்டி முழுவதும் போலீஸ் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறது. இந்த நேரத்தில் தொகுதிக்கு நல்லது செய்யாத ஒரு எம்.எல்.ஏ.வைக் கொல்கிறது ஒரு இளைஞர் கூட்டம். தன் மகளை ஏமாற்றி கர்ப்பமாக்கி கைவிட்ட பெரிய இடத்து இளைஞனை அவசரப்பட்டு கொலை செய்கிறார் வையாபுரி.

நாளைய தினம் திருமணமாகிச் செல்லவிருக்கும் டாக்டர் வித்யாவின் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாகச் சொல்லி அவரை மிரட்டுகிறான் ஒரு இளைஞன். கொரோனாவால் தொழில் முடங்கிப் போனதால் வருமானம் இல்லாமல் தவிக்கும் ஒப்பனைக் கலைஞன் தன் மகனின் பள்ளிக் கட்டணத்தை செலுத்த பணம் இல்லாமல் தவிக்கிறான்.

ஒரு அபார்ட்மெண்ட்டில் திருட வருகிறார்கள் திருடர்களான ஆதவனும், அவரது சிஷ்யனும். அன்றைய காலையில் தனக்குப் பிறந்த குழந்தையைக்கூட பார்க்க போக முடியாமல் நைட் டூட்டி என்று மாட்டிக் கொள்ளும் இன்ஸ்பெக்டர் நிகில் முருகன் என்று இவர்களைச் சுற்றி ஓர் இரவில் நடக்கும் கதைதான் இந்தப் ‘பவுடர்’ திரைப்படம்.
பவுடர் என்பதை ஒரு குறியீடாகத்தான் வைத்திருக்கிறார் இயக்குநர். மேக்கப் போடாத முகங்களுக்கும், போட்ட முகங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை இந்தப் படத்தில் காட்டுவதால் இந்தத் தலைப்பை வைத்துள்ளார்கள்போல.

powder movie review

ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் 6 பல்வேறு கதைகள் கொண்ட திரைக்கதைகளை ஒன்றிணைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஜி மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ விஜய் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். தமிழ்ச் சினிமாவின் முன்னணி பத்திரிகை தொடர்பாளரான நிகில் முருகன் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். மேலும், படத்தின் இயக்குநரான விஜய்ஸ்ரீஜியும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன், சாந்தினி தேவ், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, சிலிம்ஸன் சிவா, விக்கி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் தலைப்பான சின்னச் சின்ன ஆறுகதைகளை ஒன்றோடு ஒன்றாக இணைத்து கிளைமாக்ஸில் டிவிஸ்ட்டாக ஒரு இணைப்பினைக் கொடுத்து ‘அட’ சொல்ல வைத்திருக்கிறார் இயக்குநர் விஜய்ஸ்ரீஜி.

இன்ஸ்பெக்டர் கேரக்டரில் இப்போது இருக்கும் அதே தோற்றத்துடன் அறிமுகமாகியிருக்கிறார் நிகில் முருகன். இந்தப் படத்திற்காக ‘ராகவன் NM’ என்ற ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் கமல்ஹாசனின் கதாபாத்திரத்தின் பெயரை தத்தெடுத்துக் கொண்டுள்ளார் நிகில் முருகன். அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்குப் பொருந்தும் அளவுக்கான உடற்கட்டு நிகிலிடம் இல்லையென்றாலும், தனது குரல் வளத்தை மட்டுமே முன் வைத்து நடித்துள்ளார்.

விசாரணை கைதிகளிடம் தனது மிரட்டல் குரலில் விசாரணை நடத்துவதும்.. மேலதிகாரிகளிடத்தில் கம்பும் உடையாமல், அடியும் விழும்படியாக பேசும்விதமுமாக ஒரு வித்தியாசமான நடிப்புப் பாவனையை வெளிப்படுத்தியுள்ளார் நிகில் முருகன். இதே நிகிலை வைத்துதான் அடுத்த பாகத்திற்கான லீடையும் கிளைமாக்ஸில் கொடுத்துள்ளனர்.

powder movie review

‘பரட்டை’ என்ற கதாபாத்திரத்தில் பாவப்பட்ட மனுஷனாக தோன்றி தனது கேரக்டருக்குரிய நடிப்பை மிகச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய்ஸ்ரீஜி. இவருடைய மனைவி இவரை வார்த்தைகளால் புரட்டியெடுக்கும் தருணத்தில் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத தன்மையுடன் எழுந்து வருவதும், பின்பு பணம் கிடைத்ததும் விடியற்காலையில் மனைவிக்கு போன் செய்து துணிக்கடைக்கு அழைப்பதுமாய் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் மட்டும் மிகவும் ரசனையானது.

இவரது அழுத்தமான நடிப்புக்கு இவரது குரலும் ஒத்துழைத்துள்ளது. தன் மகளுக்காக ஒரு கொலையை செய்துவிட்டு தன்னிரக்கத்தில் வையாபுரி புலம்புவதும், அந்தக் கொலையை மறைக்கத் திடமாக அவர் செய்யும் திட்டங்களும் காவலர்களை சமாளிக்கும்விதமும் இந்தக் கேரக்டருக்கு வையாபுரி பெரும் நியாயம் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படத்தில் ஒரு முக்கிய கேரக்டரை ஏற்று நடித்திருக்கும் வித்யா பிரதீப் வழக்கம்போல தன் கண்களாலேயே பேசியிருக்கிறார்.

சாந்தினி தேவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சற்று அதீதமாக போய்விட்டன. இவர்களை வைத்து ஆதவனும், அவரது சிஷ்யனும் பேசும் இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் படத்தின் தரத்தையும், நோக்கத்தையும் சிதைத்துவிடுகிறது. படம் முழுவதையும் சீரியஸாகக் கொண்டு சென்று ஒரு நல்ல சஸ்பென்ஸ், திரில்லர் படமாக இருந்திருக்க வேண்டிய இந்தப் படம், இடையிடையே மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, கான்ஸ்டபிள்களின் மொக்கை காமெடி என்று அங்கங்கே திணிக்கப்பட்ட காட்சிகள் பார்வையாளனுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதுடன் இது என்ன மாதிரியான படம் என்கிற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இப்படம், கொரோனா காலகட்டத்தில் மிக எளிமையாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் இரவு நேரத்தில் ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில், ஓர் இரவில் நடக்கும் கதையாக இந்தப் படத்தை எடுத்துள்ளனர். மொத்த படமும் ஒரே இரவில் நடக்கும் கதையென்பதால் ஒளிப்பதிவுதான் படத்திற்கு பெரும் பலமாக இருக்க வேண்டும். அது நிறைவாகவே இருக்கிறது

பல்வேறு இடங்களில் கேமரா அடுத்தடுத்துப் பயணப்பட வேண்டியிருந்தாலும் ஒளிப்பதிவில் ஒரு துளிகூட குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளார் ஒளிப்பதிவாளர்.
இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்டியின் இசையில் பின்னணி இசைதான் சிறப்பு. மேலும் ‘சாயம் போன வெண்ணிலவே’ பாடல் மெலடியாக கேட்க வைக்கிறது.
‘சூது கவ்வும்’ படத்தில் வரும் ‘காசு பணம் துட்டு மணி’ பாடல் பாணியில், படத்தின் முடிவில் வரும் ‘நோ சூடு நோ சொரணை’ பாடல் தனி ஆவர்த்தனமாக ஈர்த்து ஏமாற்றத்திலும், கோபத்திலும், தூக்கத்திலும் இருக்கும் ரசிகர்களை கிளைமாக்ஸில் உற்சாகப்படுத்துகிறது.

கதைகளின் ஓட்டத்தில் இருந்த விறுவிறுப்பு, ஒட்டு மொத்த திரைக்கதையில் இல்லாததும் ஒரு குறைதான். படத்தின் இறுதியில், வித்யா ப்ரதீப்பின் கதையோடு சம்பந்தப்படுத்தி படத்தை முடித்தவிதத்தில் இது நல்லதொரு த்ரில்லர் படத்திற்கான க்ளைமேக்ஸ்தான் என்றாலும் ஒரு தெளிவான, நோக்கமில்லாத திரைக்கதையால் படத்தின் முடிவு ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டது.

இராமானுஜம்

இரண்டு வயது குழந்தையை கொன்ற தந்தை சொன்ன அதிர்ச்சி தகவல்! ஆன்லைன் தடை காலாவதி: அடுத்தகட்டத்தில் தமிழக அரசு

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *