குற்றவாளிகளின் வேரைச் சொல்லும் கதை!
’போலீஸ் வேலைன்னா சும்மான்னு நெனைச்சியா’ என்று காவல் துறையைச் சார்ந்தவர்கள் தங்களது காலரை தூக்கிவிட்டுக் கொள்ளும்படியான சில படங்கள் அவ்வப்போது காணக் கிடைக்கும். நிச்சயமாக அவை சாமி, காக்க காக்க, சிங்கம் வகையறா படங்கள் அல்ல.
அந்த துறையின் உச்ச பீடத்தில் இருந்து கடைக்கோடி பணியாளர் வரை படும் அல்லல்களை லேசாகத் தொட்டுச் செல்லும் வகையிலும் கூட அவை அமையக்கூடும். புதுமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா தந்திருக்கும் ‘போர் தொழில்’ பார்த்தபோது அப்படித்தான் தோன்றியது. அப்படியென்றால் இது காவல் துறையை விமர்சிக்கும் படமா என்ற கேள்வி எழலாம். இல்லை, இது ஒரு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் வகைமை சார்ந்த படம்.
கொலையாளி யார்?
பொதுவாக, புலன் விசாரணை சார்ந்த படங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும்? ஏதேனும் ஒரு குற்றம் நிகழும். அது தொடர்ச்சியாகும்போது, அதற்குக் காரணமானவர்களைத் தேடும் வகையில் விசாரணை ஆரம்பமாகும். குற்றவாளி விட்டுச் சென்ற தடயங்களின் வழியே அந்த தேடல் வேகமெடுக்கும். ஒருகட்டத்தில் யாரால் இந்தக் குற்றங்கள் நிகழ்கிறது என்பது பற்றிய மேலோட்டமான விவரங்கள் கிடைக்கும். குற்றவாளியை நேரில் சந்திக்கும்போது முழு உண்மையும் தெரிய வரும். ’போர் தொழில்’ படத்தின் கதையும் அப்படிப்பட்டதே.
ஆனால், இதில் இடைவேளை வாக்கிலேயே நமக்கு கொலையாளி அடையாளம் காட்டப்படுகிறார். அதன்பிறகு, அவர்தான் தொடர்ச்சியாகக் கொலைகளைச் செய்கிறார் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் காவல் துறைக்கு நேர்கிறது. அது சாத்தியம் ஆனதா இல்லையா என்பதைச் சொல்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.
இந்தக் கதையில் இரண்டு முரணான பாத்திரங்கள் ஒன்றாகச் சேர்ந்து விசாரணை மேற்கொள்வதாகச் செல்லும்போது சுவாரஸ்யம் இன்னும் கூடும். அப்படித்தான் பிரகாஷ், லோகநாதன் என்று இரு பாத்திரங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
ஐம்பதைக் கடந்த காவல் துறை அதிகாரியான லோகநாதன், குற்றவாளியின் மனது கொலை நிகழ்த்தும்போது என்னவாகச் சிந்திக்கும் என்ற புரிதலைக் கொண்டவர். அதேநேரத்தில் சக பணியாளர்களோடு இணக்கமான நட்பைப் பேணாதவர். எதையும் யாரையும் துச்சமாக எண்ணும் இயல்பு கொண்டவர்.
குடும்பத்தினர் கட்டாயம் காரணமாகக் காவல் துறையில் சேர்ந்தவர் பிரகாஷ். படிப்பில் அவர் கொண்டிருக்கும் ஆழ்ந்த ஈடுபாடு மட்டுமே அவரை துணைக் கண்காணிப்பாளர் பதவியில் அமர்த்துகிறது. காகிதப் புலியாகத் திகழும் அவருக்குப் பயம் அதிகம். நள்ளிரவில் தனியாகக் கழிப்பறை செல்லவே பயப்படும் ஒரு நபர்.
ஒரு நிமிடம் கூட இருவரும் சேர்ந்தாற்போல பயணிக்க முடியாது எனும் சூழலில், அவர்களால் கொலையாளியைப் பிடிக்க முடிந்ததா என்பதைச் சொல்கிறது ‘போர் தொழில்’.
பிரமிப்பூட்டும் ஸ்கிரிப்ட்!
‘போர் தொழில்’ படம் தரும் மிகப்பெரிய சுவாரஸ்யங்களில் ஒன்று சரத்குமார் – அசோக் செல்வன் காம்பினேஷன். வயது, உடல்வாகு, உடல்மொழி, சிந்தனை, செயல்படும் விதம் என்று ஒவ்வொன்றிலும் வேறுபட்டிருக்கும் பாத்திரங்களாக இருவரும் நடித்துள்ளனர். திரைக்கதை முழுவதும் பெரிதாக ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள கடுமையான மெனக்கெடல் தேவை. இருவருமே அதைச் சாதித்திருக்கின்றனர்.
தமிழில் சத்யராஜ், பிரபு, ராஜ்கிரண், தெலுங்கில் ஜகபதி பாபு, ராஜேந்திரபிரசாத் போன்றவர்களின் வழியில் தற்போது சரத்குமாரும் இறங்கியிருக்கிறார். தனக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அதற்குச் சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது ‘போர்த்தொழில்’.
சரத் உடன் சேர்ந்து தோன்றும் காட்சிகளில் ‘அண்டர்ப்ளே’ செய்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பது அசோக் செல்வனின் புத்திசாலித்தனமான ‘ஸ்கிரிப்ட்’ தேர்வுக்குக் கிடைத்த வெற்றி. ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், நித்தம் ஒரு வானம் படங்களுக்குப் பின் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு படைப்பு.
நிகிலா விமலுக்குப் பெரிதாகக் காட்சிகள் இல்லை. அதற்காகப் படத்தில் அவரது பாத்திரத்தைப் புறந்தள்ளிவிடவும் முடியாது.
நிழல்கள் ரவி, தேனப்பன் உட்படப் பல கலைஞர்கள் இதில் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் சரத் பாபு ஏற்றிருக்கும் பாத்திரமும், அதை அவர் கையாண்டிருக்கும் விதமும் பாராட்டுக்குரியது.
இது போன்ற படங்களில் வில்லன் யார் என்பது மிக முக்கியமானது. இப்படத்தில் காட்டப்படும் வில்லனைப் பற்றி முன்பாதியிலேயே வசனம் மற்றும் காட்சிரீதியாக ‘க்ளூ’ கொடுக்கிறார் இயக்குனர். அந்த புத்திசாலித்தனமான எழுத்தாக்கம்தான் இப்படத்தைத் தாங்கி நிற்கிறது.
உண்மையைச் சொன்னால், வெகு நாட்களுக்குப் பிறகு மிக நேர்த்தியான ‘ஸ்கிரிப்ட்’ ஆக அமைந்திருக்கிறது ‘போர் தொழில்’. தியேட்டரில் இருந்து வெளியேறியபிறகும் நம்மைப் பிரமிப்பூட்டுகிறது. அதற்காகவே, இயக்குனர் விக்னேஷ் ராஜா மற்றும் ஆல்ப்ரெட் பிரகாஷை நிரம்பப் பாராட்ட வேண்டும்.
ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை பல இடங்களில் பரபரப்பை எகிற வைத்திருக்கிறது. கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவில் கேமிரா கோணங்களும் ஒளியமைப்பும் நம்மைப் பயமுறுத்துகின்றன. அதற்குப் பெருமளவில் உதவியிருக்கிறது இந்துலால் கவீத்தின் தயாரிப்பு வடிவமைப்பு. ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பானது இயக்குனர் சொல்ல வந்த கதையை, கருத்தாக்கத்தை எளிதில் நமக்குக் கடத்துகிறது.
காவல் துறைக்கு மரியாதை!
போர் தொழில் எனும் டைட்டிலே காவல் துறைக்குப் பெரும் மரியாதையைத் தேடித் தரும் ஒரு சொல் தான். அது படம் முழுக்கத் தொடர்கிறது.
தொப்பி அணிந்த அசோக் செல்வன் சல்யூட் அடிப்பதும் அன்யூனிபார்மில் உள்ள சரத்குமார் குதிகால்களை உயர்த்தி உயரதிகாரிக்கு மரியாதை செலுத்துவதும் ‘போலீஸ் கிரி’ படங்களில் சாதாரணமாகப் பார்க்க முடியாதது. கொலை நடந்த இடத்திற்குச் சென்ற பின்னர் என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற குறிப்பு இதில் உண்டு. காவல் துறையில் ஒரு வழக்கு வேறொரு பிரிவுக்கு மாற்றப்படும்போது உருவாகும் புகைச்சலும் உள்ளரசியலும் கூட இதில் சொல்லப்பட்டிருக்கின்றன.
அனைத்தையும் மீறி உயரதிகாரி முதல் கான்ஸ்டபிள் வரை, காவல் துறையில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனியாக நேரம் ஒதுக்க முடியாது. அதனை இப்படம் பேசுகிறது. அது வசனமாக இல்லை என்பதுதான் பெருஞ்சிறப்பு. கான்ஸ்டபிளாக இருக்கும் தேனப்பனின் அறிமுகக் காட்சியில், ஜீப் பானெட்டில் டிபன் பாக்ஸை வைத்து நின்றவாறே சாப்பிடுவதாக அமைக்கப்பட்டிருக்கும். உணவை அவர் எவ்வளவு அவசரமாக விழுங்குகிறார் என்பதில் இருந்து, அவர் பார்க்கும் வேலையின் தீவிரம் நமக்குக் கடத்தப்படும்.
ஒரு காட்சியில் தற்போதைய வழக்குகள் போல இதற்கு முன்பு நடந்திருக்கிறதா என்று அசோக் செல்வன் தேடுவார். அது போன்ற வழக்குகளைப் பட்டியலிட்டு, அதனை விசாரித்த இன்ஸ்பெக்டர் ஒருவரே என்று சொல்வார். அவரைத் தேடிச் செல்லும் சரத்குமார், முப்பது ஆண்டுகளுக்கு முன் அந்தக் கொலைகளைச் செய்த நபரை நேரடியாகச் சந்திப்பார். அதேநேரத்தில், கோப்புகளை ஆராயும் அசோக் செல்வனும் கொலையாளி இவர்தான் என்ற முடிவுக்கு வருவார். அசோக் செல்வன் சரத்திடம் சொல்வதற்கு முன்பாகவே, அந்த உண்மையை அவர் உணர்ந்திருப்பார். வெறுமனே உள்ளுணர்வின் அடிப்படையில் இல்லாமல் உளவியல் சார்ந்திருக்குமாறு அக்காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அது போன்ற மிகச்சில தருணங்களில் காவல் துறையின் செயல்பாடு பாராட்டப்பட்டிருக்கும்.
இறுதியாக, குற்றவாளிகளைக் கண்டறிவதைவிட அவர்களை உருவாக்காமல் தடுப்பது மிக முக்கியம் என்று சொல்லப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். ‘உங்க வேலையைச் சரியா செஞ்சீங்கன்னா எங்களுக்கு வேலை குறைஞ்சிடும்’ என்று பெற்றோரின் குழந்தை வளர்ப்பைக் காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் விமர்சிப்பதாகக் காட்டியிருப்பது இயக்குனரின் சமூகப் பொறுப்பைக் காட்டுகிறது. திரைக்கதையிலும் கூட குற்றவாளிகளின் வேரைக் கண்டறியும் இடம் மிகக்கவனமாகக் கையாளப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் இடம், காலம் மற்றும் காட்சியாக்கத்தில் உள்ள குறைகளைச் சிலர் தேடித் தேடிக் கண்டுபிடிக்கலாம். அதையும் மீறி, ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கை நுனியில் அமர வைக்கும் ஒரு நேர்த்தியான ‘த்ரில்லர்’ தந்த திறமையைப் பாராட்டியே தீர வேண்டும். இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த நேர்த்தியை இனிவரும் படங்களிலும் தொடர வேண்டும்!
உதய் பாடகலிங்கம்
“கூட்டணி குறித்து அமித்ஷா முடிவெடுக்க முடியாது” – செம்மலை