போர் தொழில் : எலியும் பூனையுமாக அசோக் செல்வன், சரத்குமார்

சினிமா

போர் தொழில் படத்தில் தானும் சரத்குமாரும் எலியும் பூனையுமாக நடித்திருப்பதாக நடிகர் அசோக் செல்வன் கூறியுள்ளார்.

அறிமுக  இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’.

இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.

புலனாய்வு த்ரில்லர் ஜானரிலான இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜுன் 9 ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (மே 30) சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், ”போர் தொழில் படத்தை பார்த்து விட்டேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. தரமான படைப்பாக தயாராகி இருக்கிறது. தயாரிப்பாளரான முகேஷ் மேத்தா நான்கு மாதங்களுக்கு முன்னரே இப்படத்தைப் பற்றி விவரித்திருக்கிறார். இந்த திரைப்படம் ‘ராட்சசன்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, எவ்வாறான உணர்வு ஏற்பட்டதோ.. அதைவிட ஒரு மடங்கு கூடுதலான உணர்வை இந்த திரைப்படம் அளிக்கும்.

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘போர் தொழில்’ திரைப்படத்தை திட்டமிட்டு தயாரிப்பதுடன், அதனை விளம்பரப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள்.’ஓ மை கடவுளே’ படத்திற்குப் பிறகு அசோக் செல்வன் நடித்திருக்கும் இந்த ‘போர் தொழில்’ படத்தை வெளியிடுகிறேன். இந்தத் திரைப்படத்திலும் அசோக் செல்வன் சாக்லேட் பாயாக அறிமுகமாகி, உச்சகட்ட காட்சியில் நம் மனதில் பதிந்து விடுவார்.

இணை கதாசிரியர் ஆல்பிரட் பிரகாஷ் பேசுகையில்,  ” அவ்வையாரின் ஆத்திச்சூடிப்படி, ‘போர் தொழில் புரியேல்’. பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியின்படி ‘போர் தொழில் பழகு’. அந்த காலகட்டத்தில் தமிழ் மன்னர்களுக்குள் சண்டை ஏற்பட்டதால் அவ்வையார் ‘போர் தொழில் வேண்டாம்’ என்று குறிப்பிட்டார்கள்.

பாரதியார் காலகட்டத்தில், நாம் வெளியிலிருந்து அடக்கப்பட்டதால், ‘போர் தொழில் பழகு’ எனக் குறிப்பிட்டார். தற்போதுள்ள காலகட்டத்தில் இதில் எது சரி..? இது என்ன? என்பதையும், இரண்டு நேர் எதிர் கருத்தியல்வாதிகள்  சந்தித்துக் கொள்ளும் களம் தான் இந்த திரைப்படம். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

por tholil movie team ashok selvan and sarathkumar

நடிகை நிகிலா விமல் பேசுகையில், ” என்னை மலையாளத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் தயாரிக்கும் ‘போர் தொழில்’ படத்திலும் நடித்திருக்கிறேன். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சாரதி, ‘இயக்குநரிடம் கதையை கேளுங்கள். பிடித்திருந்தால்  நடிக்கலாம்’ என கூறினார். 

ஒரு சின்ன கதையை சொல்கிறேன். அதற்கு முன் ஒரு குட்டி பிளாஷ்பேக். இயக்குநர் ஒருவர் என்னிடம் கதை சொல்ல வருகை தந்தார். லேப்டாப்பை திறந்து வைத்து, கதையை சொல்லத் தொடங்கினார். கதையை முழுவதுமாக சொல்லி முடித்தார். அதன் பிறகு நான் அவர் திறந்து வைத்த லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர், ‘லேப்டாப்பை ஒரு பில்டப்புக்காக திறந்து வைத்திருக்கிறேன். மற்றபடி அதில் எந்த விசயமும் இல்லை’ என்றார். 

இதற்கு அடுத்த நாள் தான் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை சொல்ல வந்தார். அவரும் வந்தவுடன் லேப்டாப்பை திறந்து வைத்தார். மனதில் நேற்றைய சம்பவம் ஓடியது. இருப்பினும் கதையை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எங்கிருந்தோ இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அதன் பிறகு அந்த இசை, லேப்டாப்பிலிருந்து ஒலிக்கிறது என சொன்னார். முதன் முதலாக பின்னணி இசை ஒலிக்க, கதையை சொல்லி என்னை கவர்ந்தார். 

என்னுடைய திரையுலக பயணத்தில் மிக விரைவாக நடிக்க சம்மதம் தெரிவித்த திரைப்படம் ‘போர் தொழில்’. படத்தின் கதை சிறப்பாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரத்தின் அளவைப் பற்றி கூட கவலைப்படவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறோம். அதனால் நல்லதொரு தரமான கதையுடன் திரையில் தோன்ற வேண்டும் என விரும்பினேன். அது இந்த ‘போர் தொழில்’ படத்தில் இருக்கிறது. ஜூன் ஒன்பதாம் தேதியன்று திரையரங்கில் சந்திப்போம்.” என்றார்.

நடிகர் அசோக் செல்வன் பேசுகையில்,  ”எனக்கும் மிகவும் பிடித்த திரைக்கதை இது. 2015 ஆம் ஆண்டில்.. இப்படத்தில் மூலக்கதை குறித்து நானும், நண்பரான இயக்குநர் விக்னேசும் விவாதித்திருக்கிறோம். இயக்குநருடன் கல்லூரி காலகட்டத்திலிருந்து ஏராளமான குறும் படங்களிலும்.. விளம்பர படங்களிலும்.. பணியாற்றிருக்கிறேன். மிகத் திறமையான படைப்பாளி. கடும் உழைப்பாளி. விக்னேஷ் ஒரு கதையை சொன்னால் நன்றாக இருக்கும்.

அதுவும் இந்த திரைக்கதை வித்தியாசமாக இருந்தது. இதுவரை ஏராளமான க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. மர்டர் மிஸ்டரி ஜானரிலான திரைப்படங்களும் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

தமிழ் சினிமாவில் தோன்றும் காவல் துறை உயரதிகாரி போல் மீசையை வைத்து நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் காவலர் என்றால் மீசை இருக்க வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பி, மீசை இல்லாத காவலராக நடித்திருக்கிறேன்.

இதற்கு நேர் எதிராக கரடு முரடான தோற்றத்தில் மூத்த காவல் அதிகாரியாக சரத்குமார் நடித்திருக்கிறார். காவல்துறையில் பயிற்சிகளை முடித்துவிட்டு கள அனுபவம் இல்லாத ஒரு இளம் காவலரும், கள அனுபவம் அதிகம் உள்ள மூத்த காவல் அதிகாரியும் எப்படி ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள்? இவர்கள் இருவரும் இணைந்து எப்படி ஒரு கொலை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள்? என்பது தான் படத்தின் கதை.

இயக்குநரின் கற்பனையை எப்படி சாத்தியப்படுத்தப்போகிறோம் என எண்ணினேன். என்னுடன் அனுபவம் மிக்க சரத்குமார் இணைந்து நடிக்கும் பொழுது அது எளிதாக இருந்தது. சரத்குமாருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இதற்கு முன்னர் அனுபவமிக்க நாசருடனும் நடித்திருக்கிறேன்.

படப்பிடிப்பு தளத்திலும் அவருடைய பழகும் விதத்தை கண்டு வியந்திருக்கிறேன். அவரை சந்திக்க சினிமா, அரசியல்.. என பல்வேறு துறைகளை சார்ந்த நபர்கள் வருகை தந்து கொண்டிருப்பர். அவர் எப்போதுமே பரபரப்பாகவே இருப்பார். இந்த வயதிலும் மதிய உணவாக சூப்பை அருந்துகிறார். அதன் பிறகு சத்தான உணவுகளை சாப்பிடுவார்.

இது, அவரைப் போல் இருக்க வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்குள் உருவாக்கியது. அவருடன் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குறிப்பாக ‘போர் தொழில் 2′ வில் நடிக்க விருப்பம்.’தெகிடி’ படத்திற்குப் பிறகு எனக்கு கிடைத்த அற்புதமான திரைக்கதை இந்த ‘போர் தொழில்’ படம். திரில்லர் ஜானரிலான படத்தை பார்த்து ரசிப்பவர்களுக்கு இந்த ‘போர் தொழில்’  படம் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில்,  ”இயக்குநர் விக்னேஷ் என்னை சந்தித்து கதை சொல்லும் போது ஒரு சிறிய அளவிலான ஸ்பீக்கரை டேபிளில் வைத்தார். அதிலிருந்து இசை ஒலிக்க.. பின்னணி இசையுடன் ஒரு கதையை முழுவதுமாக விவரித்தார்.

இப்படத்தின் கதையை நேர்த்தியாக விவரிக்க, முழுமையாக தன்னை தகுதிப்படுத்திக் கொண்டிருந்தார். அவருடைய திட்டமிடல் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய இயக்குநராக உயர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

நான் கூட படப்பிடிப்பின் போது வேறு ஏதேனும் கதைகள் இருக்கிறதா? என்று கேட்டபோது, ‘இருக்கிறது. முதலில் இதை நான் நிறைவு செய்கிறேன்’ என உறுதிப்பட தெரிவித்தார். இதில் அவர் ஒரு முழுமையான கலைஞர் என்பதை உணர முடிந்தது.

இதுவரை 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாகிவிட்டது. 40க்கும் மேற்பட்ட படங்களில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்தாகிவிட்டது. இதில் என்ன வித்தியாசம்? என்றால், மூத்த அதிகாரியாக பணியாற்றுவதுடன் மட்டுமல்லாமல், புதிதாக பயிற்சிக்கு வரும் இளம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரியாகவும் நடித்திருக்கிறேன். எலியும், பூனையுமாக இருக்கும் இரண்டு கதாபாத்திரங்கள், எப்படி உச்சகட்ட காட்சியில் ஒன்றிணைந்து குற்றவாளியை கண்டறிகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.

இந்த திரைப்படத்தை காவல்துறையில் பணியாற்றும் உயரதிகாரிகள் காண வேண்டும் என விரும்புகிறேன். ஏனெனில் குற்றவாளியின் மூளைக்குள் ஊடுருவி அவன் ஏன்? இந்த குற்றத்தை செய்தான் என்பதை கண்டறிய வேண்டும் என்பது மிக விரிவாக இப்படத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படம், ஒரு சீரியஸான படமல்ல. அசோக் செல்வன் ஆங்காங்கே சில நடிப்பையும், வசனங்களையும் பேசுவார். அது சிரிப்பை வரவழைக்கும்.

இன்று மக்கள் திரையரங்கிற்கு வருகை தந்து திரைப்படங்களை பார்த்து ரசிப்பது குறைந்து வருகிறது. ஒரு மாதம் காத்திருந்தால் ஓடிடி யில் பார்த்து விடலாம் என எண்ணுகிறார்கள்‌. ஆனால் இந்தப் ‘போர் தொழில்’ திரைப்படம் திரையரங்கிற்கு சென்று ரசிக்க வேண்டிய திரைப்படம். அதனால் ஜூன் 9ஆம் தேதியன்று வெளியாகும் ‘போர் தொழில்’ படத்திற்கு திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசுகையில், ”இயக்குநராக இருந்தாலும் எந்த விமர்சனத்தையும் சாதகமாகவே எடுத்துக் கொள்வேன். ‘போர் தொழில்’ போன்றதொரு படத்தை உருவாக்குவதற்கு தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் ஒத்துழைப்பும் இல்லை என்றால் சாத்தியமாகி இருக்காது.

நான் இந்த படத்தை நினைத்த மாதிரி சுதந்திரமாக உருவாக்கி இருக்கிறேன். இப்படத்தின் இயக்குநர் என என்னுடைய பெயர் இடம் பெற்றிருந்தாலும், இதன் பின்னணியில் பலரின் கூட்டு முயற்சி இருந்திருக்கிறது. நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றியதில்லை. இருப்பினும் அனைவரும் பல விதங்களில்.. பல விசயங்களில்.. கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் –  புலனாய்வு பாணிலான திரில்லர் திரைப்படம். படம் பார்க்க திரையரங்கத்திற்கு வருகை தந்த ஐந்து நிமிடத்திற்கு பின் புத்திசாலித்தனமாகவும், உணர்வுபூர்வமாகவும் இப்படத்தின் கதை அமைந்திருப்பதை உணர்வீர்கள் என வாக்குறுதி அளிக்கிறேன். பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தை அவமதிக்காமல் இப்படத்தில் திரைக்கதையை அடர்த்தியுடன் உருவாக்கி இருக்கிறோம். 

படத்தைப் பார்த்த பிறகு கதையை விவரிக்காமல், விமர்சனம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சமூக வலைதளத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த தருணத்தில் இது சாத்தியமா? என தெரியவில்லை. ஏனெனில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்கும் போது கிடைக்கும் பரவச உணர்வு… ஐந்து நாட்களுக்குப் பிறகு படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம்.” என்றார். 

இராமானுஜம்

ராமேஸ்வரத்தில் இருந்து நடைப் பயணம்: அண்ணாமலை அறிவிப்பு!

“மருத்துவரிடம் பேசிய ஆடியோ” : ஆணைய உறுப்பினருக்கு அமைச்சர் கண்டனம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *