பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சோழா… சோழா’ பாடல்தான் மிகக் குறைவான நேரத்தில் எழுதிய பாடல் என அதன் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கல்கியின் வரலாற்று நாவலைத் தழுவி உருவாகும் பொன்னியின் செல்வன் படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கும் இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்தப் படத்தின் முதல் பாடலான ’பொன்னி நதி பார்க்கணுமே’ பாடல் ஜூலை 31ம் தேதி ரிலீஸாகியது.
இது, சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகியதுடன், பல பேரின் காலர் டியூனாகவும் இருக்கிறது. இந்தப் பாடலை மூத்த பத்திரிகையாளரும் இலக்கியவாதியுமான இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் அவர் எழுதியிருந்த இரண்டாவது பாடலான ‘சோழா… சோழா’ பாடல் நேற்று (ஆகஸ்ட் 19) வெளியானது. இப்பாடல் வெளியான நிமிடம் முதல் தற்போதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது.
இதையடுத்து, பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அதற்காக அனைவருக்கும் தன் முகநூல் பக்கம் மூலம் நன்றி தெரிவித்த பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன், இந்தப் பாடல் எழுதிய சுவாரஸ்யத்தையும் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவருடைய முகநூல் பக்கத்தில், “இந்த ஆல்பத்திலேயே மிகக் குறைவான நேரத்தில் எழுதிய பாடல் இதுதான். ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்தோம். அது லாக் டவுனின் தொடக்க நாட்கள்.
எனக்கு சிறுநீரகக் கல்லால் வலி ஒருபுறம். மருத்துவமனைக்குக்கூட செல்லவியலாத நெருக்கடி மறுபுறம் என அப்போது தடுமாறிக்கொண்டிருந்தேன். (இப்போது குணமாகிவிட்டது) அந்த சூழலில்தான் ஜூம் மீட்டிங்கில் அமர்ந்து எழுதினோம்.
பின் மதியம் நான்கு மணி போல எழுதத் தொடங்கி கடகடவென முடித்தோம். போர்க்கள வெற்றிக்கொண்டாட்டம், மது, அது உருவாக்கும் அவளின் நினைவு, வலி, அங்கிருந்து வெறிகொண்டு மீண்டும் போர்க்களத்துக்குள் நுழைதல் என இந்தப் பாட்டின் தேவையை மிக விரிவாக இயக்குநர் எடுத்துரைத்தார்.
அதனால் எழுத எளிதாக இருந்தது. அந்நாட்களின் நினைவுகள் நிழலாடுகின்றன. மறக்க முடியாத நாட்கள். உடனிருக்கும் ஒவ்வொருவருக்கும் அன்பு” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
லைகா-மணிரத்னம்-உதயநிதி: பொன்னியின் செல்வன் பிசினஸ் முடிவதில் சிக்கல்!