விக்ரம் படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை உறுதியானவுடன் முதல் வாரத்தில் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை பிரம்மாண்டமாக நடத்தி விருந்து வைத்து தன்மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார் அப்படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன்.
விக்ரம் படம் திரையரங்குகளில் 100நாட்கள் ஓடியதை கொண்டாடும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் கமல்ஹாசன் பிறந்தநாள் அன்று பிரம்மாண்டமான விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை ராஜ்கமல் பிலிம்ஸ் செய்து வருகிறது.
அதற்கு முன்னதாக விக்ரம் படத்தின் வசூல் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் பணியாற்றிய அனைவரும் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
அதனால் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் அதனை கொண்டாடும் வகையில்,
படத்தில் நடித்த நடிகர் நடிகையர்கள் உள்ளிட்ட முன்னணியினருக்கு தன்னுடைய பெசண்ட்நகர் வீட்டிலேயே மதுவிருந்து கொடுத்தார் மணிரத்னம்.
இதுவரை அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் வெற்றிபெற்ற போதும் மணிரத்னம் இதுபோன்று விருந்து ஏற்பாடு செய்து கொண்டாடியது இல்லை.
அதே போன்று பொன்னியின் செல்வன் படத்தில் தன்னுடன் பணியாற்றிய இசைக் குழுவினருக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்,
நட்சத்திர விடுதியொன்றில் விருந்து கொடுத்து அனைவருடனும் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
படத்தின் தொடக்கத்தில் குரல் கொடுத்த நடிகர் கமல்ஹாசனுக்கு மட்டும் தனியாக ஒரு விருந்தை ஏற்பாடு செய்து அவரை கௌரவப்படுத்தி இருக்கிறார் மணிரத்னம்.
இவற்றைத்தொடர்ந்து படத்தின் முதலீட்டு தயாரிப்பாளர் என்கிற அடிப்படையில் லைக்கா நிறுவனத்தின் சார்பில் நவம்பர் 5ஆம் தேதி விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.
இவ்விருந்தில் கலந்து கொள்வதற்காக லண்டனில் இருந்து சென்னை வருகிறாராம் லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன்.
விருந்துக்கு படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
விருந்தோடு நினைவுப்பரிசுகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக லைக்கா நிறுவன வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இவ்விருந்துக்காக வரும் லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன், ரஜினிகாந்த் நடிக்கும் புதியபடத்தின் தொடக்கவிழாவிலும் பங்கேற்கவிருக்கிறார்.
இராமானுஜம்
இந்தியன் 2 படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங் தந்தை
சென்னையில் 2 சுரங்க பாதைகள் தற்காலிக மூடல்!