பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் முதல் நாளுக்கான அனைத்து முன்பதிவு டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்டத்தைப் போன்றே அந்தப் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள், பத்திரிகையாளர்கள் சந்திப்புக்களை இந்தியா முழுவதும் மணிரத்னம் தலைமையில் லைகா நிறுவனம் நடத்தி வருகிறது.
இந்த நிகழ்வுகளில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா, ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் படத்துக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் நேற்று முன் தினம்( செப்டம்பர் 24) ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது,
“பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்த பின்னர் ஓடிடியில் வெளியாகும் வெளிநாட்டுப் பிரம்மாண்ட படங்கள் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன்.
நம்ம ஊரில் இப்படிப்பட்ட கதைகள் இருக்கு, நம் முகங்களின் நடிப்பு அற்புதம், இதற்காக மணிரத்னத்துக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என பேசி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நேற்று (செப்டம்பர் 25) மும்பையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் பெருமையும்,
அது எப்படி கட்டப்பட்டது என்பதை ஆங்கிலத்தில் விவரித்து பொன்னியின் செல்வன் படம் பற்றிய எதிர்பார்ப்பை வட இந்திய ரசிகர்களிடம் ஏற்படுத்தினார் விக்ரம்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பொன்னியின் செல்வன் படத்தை யார் வெளியிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில்” ரெட் ஜெயண்ட்” நிறுவனம் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணிகளை ஒரே நாளில் முடித்து படத்திற்கான முன்பதிவையும் தொடங்கிவைத்துள்ளனர்.
முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள முன்னணி திரையரங்குகளில் முதல் நாளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவில் விற்பனையாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நாடுகளில்” பொன்னியின் செல்வன்” படத்திற்கான டிக்கெட் தேவை முதல் மூன்று நாட்களுக்கு அதிகமாகவே இருப்பதை முன்பதிவு தகவல்கள் உறுதிப்படுத்துகிறது.
அமெரிக்காவில் முன்பதிவு தொடங்கிய 48 மணி நேரத்தில் 4.40 லட்சம் அமெரிக்க டாலருக்கு டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
படம் வெளியான முதல் நாளன்று 1 மில்லியன் டாலர் வசூலைக் குவித்து சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.
இராமானுஜம்
ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி: சோனியா போட்ட உத்தரவு!
தனுஷ் உதவி…நன்றி சொன்ன போண்டா மணி