கவனம் ஈர்க்கும் த்ரிஷா ஐஸ்வர்யா ராய்: பொன்னியின் செல்வன் டீசர்!

சினிமா

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் நேற்று (ஜூலை 8) வெளியானது.

பாகுபலி, கேஜிஎஃப் போன்ற படங்களின் பிரம்மாண்டங்கள் தென்னிந்திய ரசிகர்களை மட்டுமல்ல உலகளாவிய பன்மொழி சினிமா ரசிகர்களையும் பிரமிக்க வைத்தது. இந்த நிலையில் தமிழ் புதின உலகில் தலைமுறை கடந்து வாசிக்கும் பழக்கமுள்ளவர்களிடம் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ ஐம்பது ஆண்டு கால போராட்டங்களுக்குப் பின் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

அதன் முன்னோட்டமாகப் பொன்னியின் செல்வன் பாகம்1’ படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விக்ரம்,ஜெயம் ரவி, கார்த்தி, , பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. வரலாற்று நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. இதனிடையே படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தோற்றமும் இந்த வார தொடக்கத்திலிருந்து போஸ்டர்களாக வெளியிடப்பட்டன.

அந்த வகையில் சோழப் பேரரசின் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடிக்கும் விக்ரமின் தோற்றத்தைப் படக்குழு ட்விட்டரில் முதலில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து, வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தியின் தோற்றமும் பழுவூர் ராணி நந்தினியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய் தோற்றமும் வெளியானது.

அதேபோல குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கும் த்ரிஷாவின் தோற்றம் வெளியிடப்பட்டது. இறுதியாக நேற்று படத்தில் ராஜ ராஜ சோழனாக நடிக்கும் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் வெளியானது.

அத்துடன் படத்தின் தமிழ் டீசரை நடிகர் சூர்யாவும், தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ்பாபுவும், மலையாள டீசரை நடிகர் மோகன்லாலும், கன்னட டீசரை ரக்ஷித் ஷெட்டியும், இந்தி டீசரை அமிதாப் பச்சனும் வெளியிட்டனர்.

பொன்னியின் செல்வன் படம் சோழ சாம்ராஜ்ஜியத்தின் வரலாறு என்பதால் அதற்கு ஏற்ப காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது.

பிரம்மாண்ட கோட்டைகள், அரண்மனைகள், கடற்கரை ஒட்டிய பகுதிகளில் நடக்கும் போர்க்களம் என டீசரில் பிரம்மாண்டத்தை காட்டி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளார்கள்.

படம் பார்வையாளர்களுக்குச் சிறந்த காட்சியனுபவமாக இருக்கும் என்பதை டீசர் உறுதி செய்கிறது. த்ரிஷாவுக்கும், ஐஸ்வர்யா ராயுக்குமான காட்சிகள் ஈர்க்கின்றன. டீசருக்கு இடையே, ‘இந்த கள்ளும், பாட்டும், ரத்தமும், போர்க்களமும் எல்லாமே அதை மறக்கத்தான், அவளை மறக்கத்தான், என்னை மறக்கத்தான்’ என விக்ரம் பேசும் ஒரு வசனம் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளது.

கலை இயக்குநர் தோட்டா தரணியின் கலை ஆக்கம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் கல்கி தன் எழுத்தின் மூலம் வாசகனை உணர வைத்த பிரம்மாண்டத்தை நெருங்க முயற்சிக்கும் ஒரு படைப்பாகப் படம் இருக்கும் என்பதை டீசர் உணர்த்துகிறது.

-இராமானுஜம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.