உண்மையான பான் இந்திய படம் பொன்னியின் செல்வன் : பிரபலங்கள் பேச்சு!

சினிமா

பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம்பிரபு, பிரகாஷ்ராஜ், ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.

பொன்னியின் செல்வன் புரமோஷன், மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று மாலை(8.7.2022) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படத்தில் நடித்துள்ள முன்னணி கலைஞர்கள், தொழில்நுட்ப குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம், “ எனது முதல் நன்றி கல்கிக்கு. நான் கல்லூரி செல்ல ஆரம்பித்த போது பொன்னியின் செல்வனைப் படித்தேன். அன்றிலிருந்து அது என் மனதை விட்டு போகவில்லை. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்தப்படம் மக்கள் திலகம் எம்ஜிஆர் செய்திருக்கவேண்டிய படம். நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு அவர் பொன்னியின் செல்வன் படம் நடிப்பதாக இருந்தது. ஏதோ ஒரு காரணத்தால் அந்தப்படம் நின்று விட்டது.

இன்றுதான் எனக்கு அந்தப் படம் ஏன் நின்றது எனப் புரிந்தது. எங்களுக்காக எம்ஜிஆர் இந்தப் படத்தை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். இந்தப்படத்தை எடுக்க பலபேர் முயற்சி செய்திருக்கிறார்கள். 1980களில் ஒரு முறை, 2000, 2010 என நானே பொன்னியின் செல்வனை படமாக எடுப்பதற்கு மூன்று முறை முயற்சி செய்திருக்கிறேன். அதனால் இது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பது எனக்குத் தெரியும். எல்லோராலும் பொன்னியின் செல்வன் நேசிக்கப்படுகிறது என்பதும் தெரியும். நாவலைப் படித்தவர்கள் எல்லாம் அதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். நாவல் மீது ஈர்ப்புடன் இருப்பார்கள். நானும் அவர்களைப் போல தான்.

ஆனாலும் நான் இந்த படத்தில் பங்கேற்ற கலைஞர்களின் உதவி இல்லாமலும், ரவிவர்மன், ரஹ்மான், தோட்டாதரணி, ஸ்ரீகர் பிரசாத், ஜெயமோகன், இளங்கோ கிருஷ்ணன் போன்ற ஒவ்வொருவரின் உதவி இல்லாமலும் இதனைச் செய்திருக்க முடியாது. முக்கியமாக இந்த கொரோனா காலத்தில் எல்லா பிரச்சினைகளுக்கும் இடையில் படப்பிடிப்பில் பிபிஇ கிட் அணிந்து தான் வேலை நடந்தது. லாக் டவுனுக்கு இடை இடையில் பண்ண வேண்டிய படமாக இது மாறி விட்டது. அதை எல்லாம் தாங்கிக் கொண்டு, என்னைப் பொறுத்துக் கொண்டு கூட பயணம் செய்ததற்கு நன்றி” என்றார்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், “ 30 ஆண்டுகளாக எனக்கு பாஸ் மணிரத்னம் தான். சினிமாவில்நான் கத்துக்கிட்ட வித்தைகள், வாழ்க்கையில் எப்படி முன்னேற வேண்டும் என என்னை வளர்த்தவர் இவர். இது இந்தியாவின் படம். லாக்டவுன் சமயத்தில் இந்த படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாய் எடுத்துள்ளனர். அதற்கே பெரிய நன்றி” என்றார்.

ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், “இந்த படம் கிடைத்தது பாக்கியம். அதை விட மணிரத்னம் சார் கிடைத்தது எனக்கு பெரும் பாக்கியம். அவரது இயக்கத்தில் படங்கள் வெளியாகும் போதெல்லாம் படத்தின் விளம்பரத்தை ஏக்கத்துடன் பார்த்த காலம் உண்டு. இன்றைக்கு பொன்னியின் செல்வன் போஸ்டரில் எனது பெயர் உள்ளது. இதை விட என்ன வேண்டும். எனக்கு ஒரு நல்ல வழிகாட்டி, ஆசிரியர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் தமிழனின் அடையாளம். இது உலகம் முழுக்க இன்னும் பரவ வேண்டும். காலம் கடந்து தமிழ் இருக்கும் வரை இந்த படம் இருக்கும்” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், “இந்த மேடையில் நிற்பதே மெய்சிலிர்க்க வைக்கிறது. இது நமது மண்ணின் சரித்திரம். சோழர்கள் உலகம் முழுக்க பயணித்துள்ளார்கள். தமிழ் மண்ணின் புகழை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும். பொன்னியின் செல்வன் படத்தில் நான் இருந்தேன் என்பதே பெருமையாக உள்ளது. எத்தனை படங்கள் நான் நடித்திருந்தாலும் இந்த படம் எனக்கு ஸ்பெஷல். இந்த பயணத்தில் என்னை பெரிய பழுவேட்டையராக நடிக்க வேண்டும் என மணி சார் கேட்டார். பெருமையாக இருந்தது. இந்த படம் மிகப் பிரம்மாண்டமாய் அமையும். எதிர்காலத்தில் பொன்னியின் செல்வன் பெருமை மிகு படமாக அமையும்” என்றார்.

அருள்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி , “இப்படி ஒரு படத்தை எடுத்தோம் என மார் தட்டி சொல்லலாம். இது மாதிரியான ஒரு விஷயம் என் வாழ்வில் நடந்தது இல்லை. திடீரென கூப்பிட்டு பொன்னியின் செல்வன் படம் பண்ண போறோம். நீ தான் பொன்னியின் செல்வனாக நடிக்க போகிறாய் என்றார் மணிரத்னம். இந்த டீசரை பார்த்ததை விட அப்போது இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என அவர் சொன்னபோது தான் அதிகம் மெய்சிலிர்த்தது. பல பேரின் கனவு நனவாகி உள்ளது. இந்த கனவை சாத்தியமாக்கிய மணி சாருக்கு நன்றி. இது எங்கள் படம் கிடையாது, நமது படம் என அனைவரும் பெருமையாக சொல்ல வேண்டும். பல பேர் முயற்சித்து முடியாமல் போனதை இன்று மணிரத்னம் நடத்தி காட்டி உள்ளார்” என்றார்.

நடிகர் கார்த்தி பேசுகையில், “நம் பள்ளிப்பருவத்தில் வரலாறு பாடம் என்றாலே தூங்கிவிடுவோம். வரலாற்றின் மீது ஆர்வம் இருக்காது. அப்படி விழித்திருக்கும் எஞ்சிய நேரத்தில் நாம் கேட்டதெல்லாம் அந்நியர் நம்மை அடிமைப்படுத்தியது தான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் புத்தகம் படிப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. 10 வினாடி வீடியோவைப் பார்த்துவிட்டு நகர்ந்து விடுகிறார்கள்.

ஆனால், ஐந்து பகுதிகளைக் கொண்ட ஒரு புத்தகத்தை மணி சார் படமாக்கியிருக்கிறார். வரலாறு படிக்காமல்.. படைக்க முடியாது. இந்த இளைய தலைமுறையினருக்கு வரலாறு படியுங்கள் என்று சொல்கிறேன்.

இப்படத்தைப் பார்க்கும்போது பெருமிதம் வரும். அப்படி பெருமிதம் வரும்போது இதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். பொன்னியின் செல்வன், மணி சார் நமக்கு அளித்த பரிசு என்று தான் கூற வேண்டும். நான் எனது அம்மாவிடம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன் என்று கூறிய போது. எனது கல்லூரியில் உள்ள பெண்கள் எல்லாம் வந்தியதேவனை போன்ற ஒருவனைத் தான் திருமணம் செய்ய ஆசைப்படுவார்கள் என்று கூறினார். அம்மாடியோவ்… அவர் என்ன அவ்வளவு பெரிய லவ்வர் பாயா? என்று கேட்டேன்.

அதன் பிறகு வரலாறு படிக்கும் நண்பனிடம் கேட்டேன், வந்தியதேவனை எப்படி புரிந்து கொள்வது என்று கேட்ட போது ஐஏஎஸ் அதிகாரி தான் என்று கூறினார். ஐஏஎஸ் அதிகாரிக்கு எல்லாம் தெரியும். அது போல குதிரையேற்றம், போர் போன்ற எல்லாக் கலைகளையும் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.அவருக்கென தனி பிரிவு கிடையாது என்று கூறினார். வந்தியதேவன் ஒரு இளவரசன். எனினும் அவனுக்கு நாடு கிடையாது. ஆனால் அவன் பேராசை கொண்டவன். அவனுக்கு பெண் ஆசையிலிருந்து பண ஆசை வரை எல்லா ஆசைகளும் உண்டு. ஆனால், மிகவும் நேர்மையானவன். இது தான் எனக்கு வந்தியதேவனை புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. மேலும், ஒரு நாவலை படமாக்குவதில் சிக்கல் உள்ளது. ஏனென்றால், இந்த நாவலை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதலிருக்கும். குறைந்தது 50 லட்சத்திற்கும் மேலான மக்கள் இந்த புத்தகத்தை படித்திருப்பார்கள். அனைவருக்கும் ஏற்றவாறு மணி சார் இந்த படத்தை மிக அழகாக உருவாக்கி இருக்கிறார்” என்றார்

குந்தவையாக நடித்துள்ள நடிகை திரிஷா, “மணிரத்னம் சாருக்கு மிக்க நன்றி. இது அவரின் படம். அதில் நான் மணிசாரின் குந்தவையாக நடித்துள்ளேன். இந்த படம் தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்க வேண்டும். இது இந்தியாவை தாண்டி உலகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டிய படம். பான் இந்தியா என்று சொன்னால் தென்னிந்திய சினிமாவை தான் சொல்கிறார்கள். பொன்னியின் செல்வன் இந்தியா முழுக்க பார்க்க வேண்டிய படம். இது தான் உண்மையான பான் இந்திய படம்” என்றார்.

-அம்பலவாணன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *