‘பொன்னியின் செல்வன்’ டிக்கெட் முன்பதிவு: ரெடியில் ரசிகர்கள்!
’பொன்னியின் செல்வன்’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (செப்டம்பர் 24) இரவு முதல் ஆரம்பமாகியிருக்கிறது. ரசிகர்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்..
வரலாற்று நாவலை தழுவி உருவாகும் ‘பொன்னியின் செல்வன்‘ படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருக்கிறார். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
இதன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர், பாடல்கள், போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள், லிரிக்கல் வீடியோக்கள், வீடியோ கிளிப்களும் தினமும் வெளியிடப்பட்டு வருகிறது.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ள விக்ரம் தனது ட்விட்டர் அக்கவுண்ட் பெயரை ‘ஆதித்த கரிகாலன்’ என மாற்றியுள்ளார். அதுபோலவே, ‘குந்தவை’ என த்ரிஷாவும், ‘அருண்மொழி வர்மன்’ என ஜெயம் ரவியும், ‘வந்தியதேவன்’ என கார்த்தியும் தங்கள் ட்விட்டர் பெயர்களை மாற்றியுள்ளனர்.
இதுபோல தினமும் ஏதேனும் அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. இப்படத்தின் புரமோஷன் பணிகளிலும் படக்குழு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் கொச்சி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்ற ’பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் அங்கு ரசிகர்களைச் சந்தித்து கலந்துரையாடினர். இன்று, மும்பை ரசிகர்களிடம் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் கலந்துரையாடுகின்றனர்.
இந்த நிலையில், ’பொன்னியின் செல்வன்’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று இரவு முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டு அதன்படியே முன்பதிவு தொடங்கிவிட்டது.
இந்தியாவுக்கு முன்பே அமெரிக்காவில் ’பொன்னியின் செல்வன்’ புக்கிங் ஆரம்பித்துவிட்டது.
ஜெ.பிரகாஷ்
பொன்னியின் செல்வன் -நானே வருவேன்: அதிக தியேட்டர்கள் யாருக்கு? உதயநிதி கையில்!