பொன்னியின் செல்வன் திரைப்படம்: எதிர்பார்ப்புகள், சர்ச்சைகள், விவாதங்கள்… 

சினிமா சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை 

தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு மிகுந்த கலாசார முக்கியத்துவம் உண்டு. அவை குறித்து சமூக வெளியில் எப்போதுமே பரவலான விவாதங்கள் நடக்கும். மற்ற படைப்பிலக்கிய வகைமைகள், நிகழ்த்துகலைகள், ஓவியம், சிற்பம் எதுவுமே திரைப்படங்களுக்கு வெகுமக்கள் பரப்பில் ஏற்படும் கலாசார முக்கியத்துவத்தை நெருங்க முடியாது. தொலைக்காட்சி தொடர்களையும் மக்கள் பரவலாகப் பார்க்கிறார்கள். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட சேனல்கள், பல்வேறு தொடர்கள் என்ற நிலையில் அன்றாட வாழ்வின் பகுதியாகவிட்ட அவற்றால் ஒரு குறிப்பிட்ட தினத்தில் வெளியிடப்பட்டு, பலரால் பல்வேறு ஊர்களில் ஒரே நேரத்தில் பார்க்கப்பட்டு விவாதிக்கப்படும் சமூக நிகழ்வு என்ற தகுதியை எட்ட முடிவதில்லை. 

அதனால் இன்றளவும் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினை பேசப்படுவது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது. ஒரு வகையில் சொல்லப்போனால் இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் திரைத்துறை நுழைவினால் ஏற்பட்ட முக்கியத்துவம் என்று கூறலாம். தி.மு.க-வின் அடித்தள மக்களிடையேயான அணிசேர்க்கை, கட்சி உருவாக்கிய அரசியல் விழிப்புணர்வு, சொல்லாடல்கள் திரைப்படங்களிலும் இடம்பெற்றதால், மக்கள் திரைப்படங்களை சமூக உரையாடல்களின் முக்கிய அங்கமாக பார்க்கத் துவங்கினார்கள் எனலாம். 

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ”நட்சத்திரம் நகர்கிறது” என்ற அற்புதமான திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் வெளிப்படும் தீர்க்கமான முற்போக்கு அரசியல் சிந்தனை எந்த அளவு சமூக மாற்றத்திற்கான காரணிகளை ஒரு தமிழ் திரைப்படம் உள்வாங்க முடியும் என்பதையே காட்டுகிறது. 

இந்தியாவின் பிற மாநிலங்களிலும் எத்தனையோ அரசியல் உணர்வுள்ள படங்கள் வந்தாலும், படித்தவர்கள் ரசிக்கும் அறிவார்த்த கலைப்படங்கள் வந்தாலும், ரஞ்சித்தின்  நேர்த்தியான திரைப்படம் நேரடியாகவே திரைப்படத்தை அனைவரும் பங்கேற்கக் கூடிய உரையாடல் களமாக மாற்றியிருப்பது தமிழ்த் திரைப்பட வரலாற்றின் உள்ளார்ந்த ஆற்றலையே வெளிப்படுத்துவதாக எனக்குத் தோன்றுகிறது. 

தமிழில் அதனால்தான் கலைப்படங்கள் என்ற தனிப்பட்ட வகைப்பாடு அதிகம் தோன்றவில்லை. பெரும்பாலான சிந்தனையாற்றலும், விமர்சன ஆற்றலும் அனைத்து மக்களுக்குமான திரைப்பட கதையாடல் வடிவங்களிலேயே இடம் பெற்று விடுகின்றன. 

இந்தப் பின்னணியில் வைத்து பார்க்கும்போது மற்றொரு பரிமாணத்தில் தமிழ்த் திரையுலக வரலாற்றில் முக்கிய திரையாக்கமாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இந்த மாத இறுதியில் வெளியாகப்போகிறது. செப்டம்பர் 6ஆம் தேதி அதன் டிரெய்லர் எனப்படும் முன்னோட்ட படத் தொகுப்பு வெளியாகப் போகிறது. ஏற்கனவே சில பாடல்களும், முதல் தோற்ற புகைப்படங்களும் வெளியிடப்பட்டு பரவலாக எதிர்பார்ப்புகளையும், சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளன. 

முன்னோட்டக் காட்சிகளும், மேலும் பாடல்களும் வெளியிடப்பட்டால் அவையும், நேரு உள்விளையாட்டு அரங்கில் நிகழப்போகும் வெளியீட்டு விழாவும் மேலும் பல கருத்துகளுக்கும், விவாதங்களுக்கும் வழி வகுக்கும் என்பதால் என் நோக்கில் இந்தத் திரைப்படம் குறித்த சில அணுகுமுறைகளை இன்றே தெளிவுபடுத்திவிடலாம் என எழுதுகிறேன். முன்னோட்டக் காட்சிகளைப் பார்ப்பதற்கு முன்னமே இந்தக் கருத்துகளைக் கூறிவிடுவதுதான் சாலச் சிறந்தது. 

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரையாக்கத்தை முன்னிட்டு மூன்றுவிதமான தளங்களில் அல்லது களங்களில் விவாதங்கள் நிகழ்கின்றன. 

நாவலிலிருந்து திரைப்படத்திற்கு: மேலோட்டமான, பரவலான உரையாடல் களம் என்பது ஐம்பதுகளின் முற்பகுதிகளில் பிரசுரமாகி கடந்த எழுபதாண்டுகளாக தமிழ் மத்தியதர வாசகர்களால் பெரும் ஈடுபாட்டுடன் படிக்கப்பட்டு வரும், தொடர்ந்து பல பதிப்புகளைக் காணும் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் இந்த வரலாற்று புதினத்தை மணிரத்னம் சரிவர திரையில் கொண்டு வருவாரா என்பதே. கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை தேர்வு செய்ததிலிருந்து தொடங்கி, அவர்கள் தோற்றம், ஆடைகள், அணிகலன்கள், ஒப்பனை என்று அது விரிவடையும்.   

வரலாற்றிலிருந்து நாவலுக்கு: விமர்சன சிந்தனைக்கான களத்தில் இந்தப் படம் நினைவுபடுத்தியுள்ள மற்றொரு விவாதம், கல்கியின் புதினம் வரலாற்றுக்கு உண்மையாக இருந்ததா என்ற பிரச்சினை. குறிப்பாக ஆதித்த கரிகாலன் மரணம்/கொலை என்ற முக்கிய நிகழ்வை கல்கி சித்தரித்த விதம் பலராலும் விமர்சிக்கப்பட்டுள்ளது. 

கல்கி வரலாற்றுத் தடயங்களில் உள்ள ரேவதாஸக் கிரமவித்தன், சோமன் சாம்பவன் போன்ற பெயர்களைப் பயன்படுத்தினாலும் இவர்கள் பாண்டிய நாட்டு மறவர்கள், வீரபாண்டியன் ஆபத்துதவிகள் என்று சித்தரிக்கிறார். இவர்கள் உண்மையில் அரசியல் அதிகாரம் மிக்க பார்ப்பனர்கள் என்பது மாற்றுக்கருத்து. இதையொட்டி பலவிதமான விமர்சனங்கள் இந்த நாவல் மீது, அதன் பொற்கால சித்தரிப்பின் மீது, பார்ப்பனீயச் சாய்வின் மீது உள்ளன. இந்த நாவல் ஜனரஞ்சகத்தன்மை கொண்டது, சீரிய இலக்கியமல்ல என்பதும் இலக்கியவாதிகள் பலர் முன்வைக்கும் விமர்சனம். 

வரலாற்று நிகழ்வகளிலிருந்து, வரலாற்று எழுதியலுக்கு: மேலும் தீவிரமான ஒரு விமர்சனக் களத்தில் கவனம் பெரும் பிரச்சினை பொன்னியின் செல்வன் என்று புதினத்தில் அழைக்கப்படும் ராஜராஜசோழனின் அரசாட்சி என்பது அறம் சார்ந்ததா, அதில் எவ்வாறு அதிகாரம் கட்டமைக்கப்பட்டது, எப்படி பார்ப்பனீய கலாசாரம் உட்புகுத்தப்பட்டது, கோயில்களில் தேவதாசிகளை இணைப்பது எப்படி பரவலானது என்பது போன்ற பொற்கால வரலாற்று எழுதியலில் புறக்கணிக்கப்படும் பகுதிகளை குறித்தது. தமிழகத்தில் நிலவுடமைச் சமூகம் நிலைபெறுவதும், அது ஜாதீயச் சமூகமாக வடிவம் பெறுவதும் சோழர் காலத்தில் நடந்தன என்பவர்கள் ராஜராஜசோழனை தமிழ் அடையாளத்தின் பெருமைமிகு பிம்பமாக ஏற்பதில்லை. 

இந்த மூன்று விவாதக்களங்களையும் எப்படி அணுகலாம் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

கல்கியின் இந்த நாவல் தமிழில் எழுதப்பட்ட நாவல்களிலேயே மிகவும் நீளமான ஒன்று. ஐந்து பாகங்களில், ஏராளமான சம்பவங்களின் சங்கலித் தொடர்களால் கோர்க்கப்பட்டு, மனிதர்களின் லட்சியங்கள், ஆசாபாசங்கள், அரசுருவாக்கத்தின் பிரச்சினைகள் ஆகிய பல்வேறு அம்சங்களை விரிவாகப் பேசும் நாவல். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஏற்பட்ட தேசியவாத பெருமிதத்தில், அது ஏற்படுத்திய அசாதாரண மனவெழுச்சியில் உருவான கற்பனை இது. கல்கி அரசியலில் ராஜாஜியின் அணுக்க சீடரென்றாலும், தமிழ் அடையாளம், தமிழ் கலாசாரம், வரலாறு ஆகியன குறித்தும் தீவிரமான ஈடுபாடு கொண்டவர். அறிஞர் அண்ணாவின் ”ஓர் இரவு” நாடகத்தை பார்த்துவிட்டு “இதோ ஒரு பெர்னாட் ஷா, இப்சென், கால்ஸ்வொர்த்தி” என்று பாராட்டியவர்.   

கல்கி முப்பதுகளின் இறுதியிலேயே திரைப்படமாக்குவதற்கென்றே ”தியாக பூமி” என்ற நாவலை எழுதியவர். திரைப்பட ஸ்டில்களுடன் அந்த நாவலை தொடர்கதையாகப் பிரசுரித்தவர். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படமாக்குவதற்கு ஏற்ற நாவல் அல்ல. நாவலின் செழுமையான பகுதிகளே கதாபாத்திரங்களின் சிக்கலான மன ஓட்டங்கள்தான், கனவுகள்தான், சிந்தனைகள்தான். அவற்றை திரையில் கொண்டுவர முடியாது என்பதால் நாவலை படித்தவர்கள் ஏமாற்றமடைவார்கள். 

மேலும் நாவலை படிக்கும் அனைவருக்கும் கதாபாத்திரங்களை குறித்தும், நிகழ்வுகளை குறித்தும் அவரவர் மன உலகில் விரிவான சித்திரங்கள், பிம்பங்கள் உருவாகியிருக்கும். அதனால் அனைவரும் திருப்தி செய்யும் வகையில்  நடிகர்களை தேர்ந்தெடுப்பதோ, நிகழ்வுகளை வடிவமைப்பதோ சாத்தியமேயில்லை. என்னையே எடுத்துக்கொண்டால் ஐம்பதாண்டுக் காலமாக மனத்திரையில் இந்த நாவலின் காட்சிகளை தொடர்ந்து உருவாக்கி பார்த்து வந்திருக்கிறேன். எந்த திரையாக்கமும் என்னை திருப்திப்படுத்துவது கடினமாகும். 

ஆனாலும் கூட, எம்.ஜி.ஆர் முதற்கொண்டு இந்த நாவலை திரைப்படம் ஆக்கிவிட வேண்டும் என்று பலர் விரும்பியுள்ளார்கள். எம்.ஜி.ஆர் பின்னாளில் புகழ்பெற்ற இயக்குனரான மகேந்திரனை படத்திற்கான திரைக்கதையை தயாரிக்க பணியமர்த்தியுள்ளார். ஆனால் அவரால் தயாரிக்க இயலவில்லை. கமல்ஹாசனும் சிறிது காலம் இந்த படத்தை தயாரிக்க விரும்பியதாக செய்திகள் பரவின. இப்படி பலருடைய நிறைவேறாத ஆசையாக இருந்ததை, இன்றுள்ள தொழில் நுட்ப சாத்தியங்கள் மற்றும் மேம்பட்ட பொருளாதார வலு, பன்மொழி வசனங்கள் மூலம் அகில இந்திய சந்தை ஆகியவற்றின் காரணமாக மணிரத்னம் சாத்தியமாக்கியுள்ளார்.   

இந்தப் பிரச்சினையை நாம் சமூகவியல் கோணத்தில் அணுகினால் மணிரத்னத்தின் முயற்சியைக் குறை சொல்ல முடியாது. எப்படியென்று பார்ப்போம். தமிழகத்தில் எட்டு கோடி பேர் வசிக்கிறார்கள். ஒரு குடும்பத்தின் சராசரி அளவு நான்கு பேருக்கும் குறைவானது என்று புள்ளி விவரம் கூறுகிறது. அப்படியானால் இரண்டு கோடி குடும்பங்கள் இருக்கின்றன என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். 

கல்கியின் நாவல் கடந்த எழுபதாண்டுகளில் எத்தனை முறை அச்சிடப்பட்டிருந்தாலும், அது நாட்டுடைமையாக்கப்பட்ட பிறகு பல்வேறு வடிவங்களில் படிக்கக் கிடைத்தாலும், அந்த நாவலை படித்த குடும்பங்கள் என்று பத்து லட்சம் குடும்பங்கள் இருந்தால் அதிகம். வேண்டுமானால் நீங்கள் குடியிருக்கும் தெருவில் அல்லது அடுக்ககத்தில் ஒரு சர்வே செய்து பாருங்கள். வாசிப்பு என்பது இன்னமும் மிகவும் குறைவாகவே இருக்கிறது என்பதை எளிதில் புரிந்துகொள்வீர்கள். 

பொன்னியன் செல்வன் படித்த பத்து லட்சம் குடும்பங்களுக்கு அப்பால், ஒரு கோடி குடும்பங்களுக்கு இந்தத் திரைப்படம் சென்று சேரும். அவர்களுக்கு நாவல் படித்ததால் ஏற்பட்ட எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. உலகமெங்கும் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் பிரம்மாண்ட வெற்றியை ஈட்டிய ”கேம் ஆஃப் திரோன்ஸ்” என்ற ஆங்கில தொலைக்காட்சி தொடருக்கு பின்னால் சரித்திர புனைவுகளை காட்சிப்படுத்துவதில் மீண்டும் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கேம் ஆஃப் திரோன்ஸும் நாவலை அடிப்படையாகக் கொண்டதுதான். தொலைகாட்சி தொடரை உலகெங்கும் பார்த்தவர்களில் ஆயிரத்தில் ஒருவர்தான் நாவலை படித்திருப்பார்.  நான் படித்தேன். தொலைகாட்சி தொடர் நாவலின் கற்பனை வளத்திற்கு உறைபோடக் காணாது. 

அந்தத் தொடரைப் போலவே பொன்னியின் செல்வன் திரைப்படமும் காட்சியின்பத்திற்காக பார்க்கப் படும். வரலாற்று நாவலை இன்றுள்ள காட்சி அழகியல் சார்ந்துதான் படமாக்க முடியும். அந்தக் காலத்தில் உண்மையில் எல்லாம் எப்படியிருந்தன என்பதை சிந்தித்து படமாக்க முடியாது. ஒரு வகையில் அறிவியல் புனைவு போன்றதுதான் இது. கற்பனையில் உருவாகும் ஒரு செயல் வெளி மட்டுமே. 

தமிழகத்தைப் பொருத்தவரை படத்தின் பிரம்மாண்டம் வெளியீட்டை ஒரு திருவிழாவாக மாற்றும் சாத்தியம் உண்டு. அப்படி திருவிழா மன நிலை உருவாகிவிட்டால், விமர்சனங்களை மக்கள் அதிகம் பொருட்படுத்த மாட்டார்கள். திரைப்படம் சுவாரஸ்யமாக கதை சொல்வதில் வெற்றிபெற்றால் பிற இந்திய மாநிலங்களிலும் கூட வணிக ரீதியாக வெற்றி பெறலாம். அது தமிழக வரலாற்றினை குறித்து பிற இந்திய மாநிலங்களில் ஆர்வத்தை தோற்றுவிக்கும் சாத்தியமும் உண்டு. இதெல்லாம் வெகுஜன கலாசாரத்தின் நீரோட்டங்கள்; முன் கணிக்க முடியாதவை. 

கல்கியின் நாவல் வரலாற்றை எப்படி புனைவாக்குகிறது என்ற விமர்சனமும் அவசியமானதுதான். ஆனால் அவற்றையும் கடந்து அந்த நாவல் தமிழகத்தின் பண்பாட்டு கூறுகளை பரவலான வாசகர்களுக்கு அறிமுகம் செய்தது என்பதையும், ஒரு படைப்பாக மனித மனங்களின் ஆசாபாசங்கள் குறித்து சிந்திக்க செய்தது என்பதையும் மறுக்க முடியாது. எத்தனையோ பேரின் கற்பனையாற்றலை தூண்டி வாசிப்புப் பழக்கத்தையும் உருவாக்கியது அந்த நாவல். இன்றளவும் பள்ளிச் சிறுவர்களுக்கு பரிந்துரைக்கத் தக்க சுவாரசியமும், மொழிவளமும் கொண்ட நாவல். அதனால் தூண்டப்படும் மனம் அதன்மீதான விமர்சனங்களையும் காலப் போக்கில் கண்டடையும். சுவரை வைத்துதான் சித்திரம்; படைப்பை வைத்துதான் விமர்சனம். 

இறுதியாக ராஜராஜசோழன் என்ற மன்னனை, அவன் அரசாட்சியை குறித்த சிந்தனை. உலகில் எல்லா பகுதிகளிலுமே மனித ஆற்றல் பேரரசுகளாக தொகுக்கப்பட்ட போது அதில் வன்முறை, சுரண்டல், ஆண்டான் – அடிமை உறவுகள் எல்லாமே நிலவத்தான் செய்தன. சாக்ரடீஸ் அவர் சீடர்களுடன், நண்பர்களுடன் தத்துவம் குறித்து உரையாடிய போது, அவர்களை சுற்றி அடிமைகள் சேவை செய்த வண்ணம்தான் இருந்தார்கள். இன்றைய மதிப்பீடுகளான “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சகோதரித்துவம்” ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தோமானால் நாம் உலக நாகரீகத்தின் பல்வேறு வரலாற்றுத் தருணங்களை, பண்பாடுகளை, பேரரசுகளை நிராகரிக்கத்தான் வேண்டியிருக்கும். 

அத்தகைய தீவிரவாத நோக்கும் தேவைதான். ஆனால், அதே சமயம் நாம் மானுட ஆற்றல்கள் தொகுக்கப்படுவதில், சமூக அமைப்புகள், அரசமைப்புகள் உருவாவதில் உள்ள சிக்கல்கள் இன்றும் தொடர்வதை புரிந்துகொள்ள வேண்டும். இன்றளவும் நாம் ஒன்றும் லட்சிய சமூகத்தை உருவாக்கி விடவில்லை. அதனை கணக்கில் கொண்டு பரிசீலித்தால் எந்த ஒரு வரலாற்றுத் தருணத்திலும் நல்லதும், தீயதுமான விளைவுகள் ஏற்பட்டன என்பதையும் புரிந்துகொள்ளலாம். மேலும், வரலாறு எழுதியல் என்பதே தோராயமான சில புள்ளிகளை இணைத்து வரையும் கோடுகள்தான். 

இன்றைய இந்திய அரசியல் சூழலில், மாநிலங்களின் தனித்துவம் என்பது வரலாற்று ரீதியாக வலுப்படுத்தப்பட வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. இந்திய வெகுஜன கலாசாரத்தில் தமிழக வரலாற்றினை குறித்த ஒரு கவன ஈர்ப்பினை பொன்னியின் செல்வன் திரைப்படம் ஏற்படுத்துமானால் அது பயனுள்ள விளைவாகத்தான் இருக்கும் என்பதே என் எண்ணம். 

அதன் பொருள் அந்தத் திரைப்படம் விமர்சனமின்றி கொண்டாடப்பட வேண்டும் என்பதல்ல. ஏற்கனவே இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டபடி படைப்பின் முக்கியமான விளைபொருளே விமர்சனமும், விவாதமும்தான். ஆனால் அது படைப்பினை அதன் செயல்தளத்தில் அங்கீகரித்த பிறகு மேற்கொள்ளப்படுவதுதான் முதிர்ச்சியானது. 

என்னைப்போல நாவலை ஏழெட்டு முறை வாசித்து, மூழ்கி முத்தெடுத்தவர்கள், குறைந்த எதிர்பார்ப்புடன் இருப்பது ஏமாற்றத்தை குறைக்கும் என்பதே என் எண்ணம். ஏனெனில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு அந்த நாவல் ஒரு தூண்டுதல் மட்டுமே; ஒரு செயல்களத்தை உருவாக்கும் வரைபடம் மட்டுமே. 

கட்டுரையாளர் குறிப்பு:

Rajan Kurai Krishnan

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com

+1
0
+1
0
+1
0
+1
7
+1
1
+1
2
+1
0

1 thought on “பொன்னியின் செல்வன் திரைப்படம்: எதிர்பார்ப்புகள், சர்ச்சைகள், விவாதங்கள்… 

  1. சார் நான் நினைக்கிறேன் நீங்களும் உங்கள் கட்டுரை மூலமாக அந்த படத்திற்கு கொண்டாட்ட மனநிலையை உருவாக்க விளம்பரம் செய்கிறீர்கள் என்று.

Leave a Reply

Your email address will not be published.