தமிழ் சினிமா வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வசூல் சாதனைகளை நிகழ்த்திய படங்கள் ஏராளம்.
படத்தின் தயாரிப்பு செலவு, அதில் நடித்திருக்கும் நடிகர்களின் நட்சத்திர அந்தஸ்து, படம் வெளியாகும் காலம் அந்தப் படத்துக்கு போட்டியாக வெளியான படங்கள் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் அந்தப் படத்தின் வசூல் சாதனைகள் தமிழ் சினிமா வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த வகையில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன்‘ படம், 300 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக அக்டோபர் 7 ஆம் தேதி அதன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் தகவல் வெளியிட்டது.
பொன்னியின் செல்வனுக்கு கிடைத்த இந்த வரவேற்பும் வசூலும் தமிழ் சினிமாவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் வெளியானபோது அப்போதைய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் (தற்போது தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்) GST வரி சம்பந்தமாக படத்தில் இடம்பெற்ற வசனத்திற்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்தார்.
அடுத்த 48 மணி நேரத்தில் ’மெர்சல்’ படத்தை தங்களுடைய படமாக மாற்றினார்கள் பாஜகவுக்கு எதிரான அரசியல் கட்சியினர். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி போன்றோர் ’மெர்சல்’ படத்திற்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டனர்.
முதல் வாரம் முடிவதற்குள்ளாகவே படத்தின் வசூல் மோசமாக இருக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் புலம்பிக்கொண்டிருக்க, மூன்றாவது நாள் புயல் வேகத்தில் வசூல் உயரத் தொடங்கி விஜய் திரையுலக வாழ்க்கையில் வசூல் சாதனை நிகழ்த்திய படமாக அமைந்தது.
அதுபோன்ற வாய்ப்பு, சூழல் ‘பொன்னியின் செல்வன்‘ படத்திற்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது என்ற கருத்தும் இருக்கிறது. அதேநேரம் இயல்பாகவும் அமைந்தது என்பதை தவிர்க்க முடியாது.
படம் அறிவிக்கப்பட்ட காலம் தொடங்கி வெளியான செப்டம்பர் 30 வரை சோழர்கள் வரலாறு, தமிழர்களின் கலாச்சார பெருமை பேசும்படம், எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் போன்றவர்களால் தயாரிக்க முயற்சித்து முடியாமல்போன படம், ’பொன்னியின் செல்வன்’ நாவல் திரைப்படமாகிறது, அது, இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது என்கிற தகவல்கள் இயல்பாக உலகெங்கும் வாழும் தமிழ் மொழி பேசுவோரிடம் கொண்டுசெல்லப்பட்டது.
தமிழ் சினிமாவில் இதுபோன்ற கூட்டம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா, பாகுபலி-2 படங்களுக்கு இருந்தது. அதன் பின்னர் ’பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பொன்னி நதி போன்றே பொங்கி வழிகிறது மக்கள் கூட்டம்.
அதனால் தியேட்டர்களின் கல்லாவும் நிரம்பி வழிகிறது என்றார் விநியோகஸ்தரும், திரையரங்குகள் குத்தகைதாரருமான மதுரை சரவணன்.
தமிழர்கள் பெருமை பேசும் படம் என புரமோஷன் செய்யப்பட்டதாலும், ’பொன்னியின் செல்வன்’ நாவலை படித்த இரண்டு தலைமுறை எழுத்தில் படித்த நாவலை திரையில் காணும் ஆர்வத்துடன் தங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தியேட்டருக்கு அழைத்து வருகின்றனர் என்கிறார் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணி.
நாவல் டு சினிமா என்ற படைப்புரீதியாக ’பொன்னியின் செல்வன்’ கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அதே அளவு பாராட்டுகளையும் பெற்றது. இரண்டுமே படத்திற்கான புரமோஷனுக்கு உதவிக் கொண்டிருக்கிறது.
இராமானுஜம்
ஷாருக்கானுக்கு அறுசுவை விருந்து வைத்த விஜய்!
சீமான் பிளேலிஸ்டில் மல்லிப்பூ பாடல்!
மொத்தத்தில் தமிழ் இன உணர்வு சினிமாக்காரர்களால் பணமாக்கப் பட்டு வருகிறது