“இனி சோழர்களுடைய திறமைகள் தெரியவரும்” என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி, உலகமெங்கும் வெளியாகிறது.
இப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ’பொன்னியின் செல்வன்’ நாவலில் கல்கியால் கட்டமைக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களில் பெரிய பழுவேட்டரயர் கதாபாத்திரம் சோழ வரலாற்றில் உண்மையானது. உறையூருக்குப் பக்கத்தில் வடகாவேரியின் வடகரையில் உள்ள பழுவூர், அவர்களுடைய நகரம்.
”விஜயாலய சோழன் காலத்திலிருந்து பழுவேட்டரையர் குலம் வீரப்புகழ் பெற்றிருந்தது. அக்குடும்பத்தார் சோழ மன்னர் குடும்பத்துடன் கொள்வினை, கொடுப்பினை செய்து வந்தனர். இதன் காரணமாகவும், அவர்களுடைய குலத்தொன்மை, வீரப்புகழ் ஆகியவற்றின் காரணமாகவும், பழுவேட்டரையர் குலம் அரச குலத்தின் சிறப்புகளெல்லாம் பெற்றிருந்தது.
தனியாகக் கொடி போட்டுக்கொள்ளும் உரிமையும் அந்தக் குலத்துக்கு உண்டு” என்று பழுவேட்டரையர்களை பற்றி ஆசிரியர் கல்கி விவரிக்கிறார். பெரிய பழுவேட்டரையர், சோழர்கள் வெற்றிக்காக இருபத்து நான்கு போர்களில் ஈடுபட்டவர்.
சோழநாட்டு அரசாங்கத்தின் தனாதிகாரி தனபண்டாரமும் தான்ய பண்டாரமும் அவருடைய அதிகாரத்தில் இருந்தன. அரசியலின் தேவைக்குத் தகுந்தபடி திறை விதித்து வசூலிக்கும் அதிகாரமும் அவரிடம் இருந்தது.
எந்தச் சிற்றரசரையும், கோட்டத் தலைவரையும், பெரிய குடித்தனக்காரரையும், “இவ்வாண்டு இவ்வளவு திறை தரவேண்டும்!” என்று கட்டளையிட்டு வசூலிக்கும் உரிமை அவருக்கு இருந்தது. ஆகவே, சுந்தர சோழ மகாராஜாவுக்கு அடுத்தபடியாக சோழ சாம்ராஜ்யத்தில் வலிமைமிக்கவர் பழுவேட்டரையர்தான்.
கதையின் முதல் பாதியில் ஒருவராகவும், மீதிப் பாதியில் வேறொருவராகவும் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு பெரிய பழுவூரார் தோன்றுவார். இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சரத்குமார், சென்னையில் இன்று (செப்டம்பர் 28) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பலராலும் பல காலம் முயற்சி செய்த ’பொன்னியின் செல்வ’னை, பல கஷ்டத்திற்கு பிறகு மணிரத்னமும், லைகா புரொடக்ஷனும் இணைந்து உருவாக்கியுள்ளனர். பல பெரிய நடிகர்களை ஒருங்கிணைத்து இந்த படத்தை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கியுள்ளார்கள்.
முழு நாவலையும், கதாபாத்திரங்களையும் எடுக்க நினைத்தால், அது பல பாகங்களாக போகும். மணிரத்னம் அதை சரியாகச் சுருக்கி, ஒரு சிறப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார். பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் பெரிய வீரன், சோழ நாட்டிற்கு கட்டுபட்டவன், நந்தினியின் மனம் புரியாத கணவன் என்ற பல அம்சங்கள் நிறைந்து இருக்கிறது.
மணிரத்னத்துடன் இணைந்தது பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன். வரலாற்றில் ’பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரங்களில், இந்த படத்தில் நடித்த எங்களை இனிமேல் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
சோழர்கள் பற்றி தெரியாமல் இருந்தவர்களுக்குகூட, இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர்களை பற்றி தெரியவரும். சோழர்களுடைய பெருமைகளும், திறமைகளும் பல மக்களுக்கு புரியவரும். இனிவரும் காலங்களில் சோழர்களை பற்றி தெரிந்துகொள்ளும் சூழலை இந்த திரைப்படம் ஏற்படுத்தும்.
பழுவேட்டரையர் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரர். ’பொன்னியின் செல்வன்’ கதையை படிக்கும்போதே பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பை எனக்கு அளித்த டைரக்டர் மணிரத்னத்துக்கு நன்றி.
அந்த வேடத்தில் யாரெல்லாம் நடிக்க ஆசைப்பட்டார்கள் என்று தெரியாது. ரஜினிகாந்த் நடிக்க விரும்பியதை பெருமையாக கருதுகிறேன். அவர் நடித்திருந்தால் அந்த பாத்திரத்தை நன்றாகவே செய்திருப்பார். இப்போது நான் வில்லனாக நடிப்பது குறித்து கேட்கிறார்கள்.
நாயகன், வில்லன், அப்பா, அண்ணன் இதெல்லாம் கதாபாத்திரங்கள்தான். அதில் சிறப்பாக நடிப்பவர்கள்தான் நல்ல நடிகராக இருக்க முடியும். தற்போது 21 படங்களுக்கு மேல் நடித்து வருகிறேன். நாயகனாகவும், முதன்மை கதாபாத்திரமாகவும், வில்லனாகவும் பல பாத்திரங்களில் நடித்து வருகிறேன். எப்போதும் போல் படத்திற்கும் எனக்கும் உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.
இராமானுஜம்
பி.எஃப்.ஐ அமைப்பு தடை: வரவேற்கும் பிரபலங்கள்!
முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்!