பொன்னியின் செல்வன் 2: விமர்சனம்!

ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும்போதே, அது முதல் பாகம் அளவுக்கு இருக்குமா என்ற கேள்வி பெரிதாகும். காரணம், முதல் முயற்சியின்போது படம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரிதாக எதிர்பார்ப்பு இருக்காது. அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும்போது, ஏற்கனவே பெற்ற வெற்றிகள் முட்கிரீடங்களாக மாறி உறுத்தும்.

ஆனால், மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அந்த வகையில் அடங்காது. ஏனென்றால், இது முன் தயாரிப்பு பணிகளும் படப்பிடிப்பும் நடத்தப்பட்டபோதே இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டவை. முழுமையான பொருளொன்றை சரிபாதியாகப் பகுப்பதைப் போல, தொடக்கத்திலேயே இரு பாகங்களாக ஆக்கப்பட்டவை. உள்ளதைப் போலவே, அவை சரிபாதியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதா என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

என்னவானார் பொன்னியின் செல்வன்?

பாண்டிய ஆபத்துதவிகளைத் தேடிச் சென்ற அருள்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வன் புயல் சீற்றத்தில் சிக்கியபிறகு என்னவானார்? அந்த இடத்தில் இருந்துதான், இரண்டாம் பாகம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், சிறு வயது நந்தினியும் ஆதித்த கரிகாலனும் காதலில் விழுந்த கணங்களைக் காண்பிப்பதில் தொடங்குகிறது ‘பொ.செ.2’. அதன்பிறகு, பொன்னியின் செல்வன் கதையைப் பேசுகிறது.

ponniyin selvan 2 review

புயலில் சிக்கிக் கடலுக்குள் மூழ்கிய அருள்மொழி வர்மனைக் காப்பாற்றுகிறார் ஊமையரசி. வந்தியத்தேவன் அவரை மீட்டு, பூங்குழலியின் உதவியுடன் நாகை கடற்கரை பகுதிக்கு அழைத்து வருகிறார். அருள்மொழி இறந்துவிட்டதாகக் கருதும் பாண்டிய ஆபத்துதவிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, அவருக்கு புத்த மடாலயத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்கின்றனர். அதற்குள், அவர் இறந்துவிட்டதாகக் கருதி சோழ நாட்டில் குழப்பம் ஏற்படுகிறது. ஆதித்த கரிகாலன் ஆத்திரத்தின் உச்சிக்கே செல்கிறார்; அனைத்துக்கும் நந்தினியே காரணம் என்கிறார்.

ஒருகட்டத்தில், அருள்மொழி உயிரோடிருக்கும் விஷயம் பழையாறையில் இருக்கும் அவரது தந்தைக்குச் சொல்லப்படுகிறது. சோழ அரச குடும்பத்தினருக்கும் மெல்லத் தெரிய வருகிறது. அப்போது, ஆதித்த கரிகாலனால் போரில் தோற்கடிக்கப்பட்ட ராஷ்டிரகூட அரசர் பழிவாங்கும் சந்தர்ப்பம் இதுதான் என்று கறுவுகிறார். பராந்தக சோழனுக்குப் பெண் கொடுத்து சோழ நாட்டின் அரசியலில் மாற்றம் உருவாக்க முயல்கிறார். அதேநேரத்தில், நந்தினியின் திட்டமிடலின் கீழ் சுந்தர சோழர், அவரது மகன்கள் ஆதித்த கரிகாலன், அருள்மொழி மூவரையும் ஒரேநேரத்தில் கொல்ல முயற்சிக்கின்றனர் பாண்டிய ஆபத்துதவிகள்.

அந்த ஆபத்துகளை சோழ அரச குடும்பத்தினர் கடந்து வந்தார்களா? எதிரிகளை எதிர்கொள்ள அனைவரும் ஓரணியில் திரண்டார்களா என்று சொல்கிறது பொன்னியின் செல்வன் 2.

கல்கியின் வரலாற்றுப் புனைவை வாசிக்காதவர்களும் திரைப்படம் பார்க்க வந்ததாலேயே, முதல் பாகம் பெருவெற்றி பெற்றது. அப்படிப் பார்த்தால், அவர்களனைவரையும் பிரமிக்க வைத்திருக்க வேண்டும் இரண்டாம் பாகம். ஆனால், நாடக பாணியிலான காட்சியாக்கம் அதற்கு இடம் தரவில்லை.

மணிரத்னம் முத்திரை!

குறைவான வசனங்கள், அதிகமும் திரை மொழிக்கு முக்கியத்துவம், பிரமிப்பூட்டும் தொழில்நுட்ப அம்சங்கள் இவற்றோடு நடிகர்களை வேறோரு பரிமாணத்தில் காட்டி கதை சொல்லலைப் புதிதாக உணர வைத்திருப்பார் மணிரத்னம். 2000களுக்கு பிறகு, அடுத்த தலைமுறை இயக்குனர்களோடு போட்டியிடும் வகையில் தனது தனித்துவ முத்திரைகளையே மாற்றிக்கொண்டார். ‘பொன்னியின் செல்வனை’ப் பொறுத்தவரை, ஒரு பாட்டி இளைய தலைமுறையினருக்கு அரச கதைகளைச் சொல்வதைப் போன்றதொரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

ponniyin selvan 2 review

கல்கியின் புனைவைப் படித்தவர்களுக்கு ஊமை ராணி, வீரபாண்டியன், சுந்தர சோழர் மூவரிடையே முக்கோணக்காதல் இருந்ததா என்ற சந்தேகம் எழும். ஆதித்த கரிகாலன் கொலை குறித்தோ, அருள்மொழி வர்மனுக்குப் பதிலாக அரச பீடத்தில் ஏறியவர் பற்றியோ, வந்தியத்தேவன் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டது பற்றியோ தெளிவான பதில்கள் கிடைக்கப் பெறாது. அந்த நாவலின் தொடர்ச்சியாக இன்னொரு புனைவைப் படைப்பதற்காக கல்கி எடுத்துக்கொண்ட சுதந்திரமாகவே அது பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அந்த புனைவை எழுதவில்லை. அந்த குழப்பங்கள் இந்த படத்தில் இல்லை என்பது ஒரு சிறப்பான அம்சம்.

காட்சிகள் அனைத்தும் நாடகத்தனமாகவே இருக்கும் என்ற எண்ணமிருந்தாலும், பாடல் காட்சிகளில் மணிரத்னம் அழகியலை வாரியிறைத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால், இதில் ஒன்றரை நிமிடங்களுக்கு மேலாக எந்த பாடலும் நீடிக்கவில்லை. படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் கைங்கர்யத்தால் அது நிகழ்ந்திருக்கிறது. தவிர, பல காட்சிகளில் மௌனத்திற்குத் துளியும் இடமில்லை.

திரையில் மனித முகங்களே அதிகமும் தென்படுகின்றன; என்றபோதிலும், அவற்றை அழகுறக் காட்டுவதில் மெனக்கெட்டிருக்கிறது ரவி வர்மனின் ஒளிப்பதிவு. ஒரு ‘போட்டோ பிரேம்’ போல அவற்றை வடித்திருக்கிறார் என்று சொல்வதே சரி; அந்த அழகான ரசனைக்கு தோட்டா தரணியின் தயாரிப்பு வடிவமைப்பு உதவியிருக்கிறது. மற்றபடி, அவற்றில் தமிழ் கலாசாரத்திற்கான கூறுகளைத் தேடுவது தேவையற்ற வேலை.

ரஹ்மானின் இசையில் பாடல்கள் இனிமையாக அமைந்திருக்கின்றன. ‘இளையோர் சூடார்’ போன்ற பாடலும் கூட தியேட்டரில் கேட்கையில் ‘ஆஹா’ என்றிருக்கிறது. காட்சிகளில் நிறைந்திராத பரபரப்பைத் தனது பின்னணி இசையால் ஊட்ட முயன்றிருக்கிறார்; அதில் வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஆனால், தனித்துக் கேட்கும்போது நிச்சயம் அது ஏழாம் நூற்றாண்டு தமிழ் கூறுகளையோ, ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்ட வாழ்வியலை உணர்த்தும் காலப் பயணமாகவோ இருக்காது.

பல நட்சத்திரங்களை ஒரே திரைக்கதையில் ஒன்றிணைக்கலாம் என்று காட்டிய வகையில் ’பொ.செ.’ இரு பாகங்களும் சிறப்பைப் பெறுகின்றன. நிச்சயமாக, மணிரத்னத்தின் படம் என்ற அடையாளமே அதற்குக் காரணம். எதிர்காலத்தில் பல அரச புனைவுகளோ, பெரும் நட்சத்திரங்கள் ஒன்றிணைவோ அமைவதற்கு அது வழியமைத்துத் தரும் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், அது நிச்சயம் மணிரத்னத்தின் முத்திரை அல்ல.

ponniyin selvan 2 review

முந்தைய பாகத்தைக் காட்டிலும் இதில் விக்ரம், ஜெயம்ரவிக்கான முக்கியத்துவம் அதிகம். அதற்காக, கார்த்திக்குப் பெரிதாக காட்சிகள் இல்லை என்றும் சொல்ல முடியாது. ஆனால், மூவரில் விக்ரமே நம் மனம் கவர்வார் என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும்.

போலவே த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் இருவரும் நம் கண்களில் நிறைவது உறுதி. என்ன, இருவரும் அதீத மேக்கப்போடு வலம் வருவது கொஞ்சம் உறுத்தலாகத் தெரியும். சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி இருவரது திரை இருப்பும் அதில் பாதி கூட இருக்காது. பெரும்பட்டாளமே நடித்த திரைப்படங்களில் ஒவ்வொருவரும் ‘ஸ்கோர்’ செய்ய வாய்ப்பு அமைவது கடினம்.

மேற்சொன்னவர்களுக்கே இந்த கதி என்பதால் பார்த்திபன், சரத்குமார், பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ஜெயசித்ரா போன்ற மூத்த கலைஞர்கள் மிகக்குறைந்த நேரமே திரையில் தோன்றுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், பாண்டிய ஆபத்துதவிகளாக வரும் கிஷோர், ரியாஸ் போன்றோருக்குச் சிறியளவில் முகம் காட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அனைவரையும் தாண்டி, தொடக்க காட்சியில் வரும் சாரா நம் மனதோடு ஒட்டிக்கொள்கிறார்.

ஜெயமோகன், குமரவேல், மணிரத்னம் மூவரது திரைக்கதை பெரும் நீர்பரப்பினைச் சிறு குடுவைக்குள் அடைக்க முயன்றிருக்கிறது. அதேநேரத்தில், மொத்த திரைக்கதையும் பொன்னியின் செல்வன் பார்வையில் இருந்தே சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற வாதத்தையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எங்கே போயிற்று பிரமிப்பு?

’அலைபாயுதே’வில் வரும் ‘எங்கோ ஒருவன் வாசிக்கிறான்’, ‘ஆயுத எழுத்து’வில் வரும் ‘யாக்கை திரி’, ‘குரு’வில் இடம்பெற்ற ’நன்னாரே’, ’ராவணன்’ படத்தில் வரும் ‘உசுரே போகுதே’ போன்ற மனதைக் கலைத்துப் போடும் காட்சியமைப்பைக் கொண்ட பாடல் இதில் இல்லை.

ponniyin selvan 2 review

பாடல்களைத் தாண்டி காட்சிரீதியாகவும் பல நேரங்களில் நம்மைப் பிரமிக்க வைப்பார் மணிரத்னம். ‘பம்பாய்’, ‘இருவர்’ உள்ளிட்ட பல படங்கள், 2018இல் வெளியான ’செக்கச்சிவந்த வானம்’ கூட அப்படிப்பட்ட கணங்களைக் கொண்டிருக்கின்றன; அதற்காகவே கொண்டாடப்படுகின்றன. காரணம், அவை ஒவ்வொன்றும் மணிரத்னத்தின் மனதில் விளைந்த உலகங்கள். அப்படியொன்றாக ‘பொன்னியின் செல்வன்’ அமையவில்லை.

இந்த படத்தில் கல்கி வார்த்த பாத்திரங்களை, அவற்றுக்கு இடையிலான முரண்களை, மோதல்களைக் கொண்டு சுவாரஸ்யமான ஒரு கதையை இன்றைய தலைமுறைக்குச் சொல்ல முயன்றிருக்கிறார். வாசிப்பு பழக்கமே இல்லாத ரசிகர்களுக்கு அது அரிதாகவோ, புதிதாகவோ அமைய வேண்டுமென்று விரும்பியிருக்கிறார். அதேநேரத்தில், கல்கியின் எழுத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறாரா என்று ஒப்பிட விரும்பியவர்களையும் தியேட்டருக்கு வரவழைத்திருக்கிறார். முதல் பாகத்தில் நிகழ்ந்த அந்த மாயாஜாலம் இரண்டாம் பாகத்திற்கும் வாய்த்தால் மகிழ்ச்சி!

உதய் பாடகலிங்கம்

எடப்பாடி மீது குற்றப்பத்திரிகை: சேலம் நீதிமன்றம் உத்தரவு!

“தரமான கேன் வாட்டர் விற்பனையாகிறதா?”:மா.சுப்பிரமணியன் உத்தரவு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts